Thursday, April 12, 2018

எம்.சி.ஐ., விதியில் தளர்வு : அரசு டாக்டர்களுக்கு, 'லக்'

Added : ஏப் 12, 2018 00:25

இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யின், விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், அரசு டாக்டர்களுக்கு, இந்தாண்டு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., படிப்புகளுக்கு, 1,641 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள, 50 சதவீத இடங்கள், தமிழக அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தன. இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்த, சென்னை உயர் நீதிமன்றம், எம்.சி.ஐ., விதிமுறைகளின்படி, கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டது. மலைப்புற மற்றும் எளிதில் அணுக முடியாத, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, அவர்கள் பணி அனுபவத்தை கணக்கிட்டு, 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன், 10 முதல், 30 சதவீத மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க, அரசாணை உள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 'மலைப்பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகளுடன் சேர்த்து, கிராமப்புற பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கும், 10 முதல், 30 சதவீத கூடுதல் மதிப்பெண்கள் வழங்கலாம்' என, எம்.சி.ஐ., விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'எம்.சி.ஐ., விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், அரசு டாக்டர்களுக்கு, கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.'நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024