கொதிக்கும் தமிழகம்... விருது கோலாகலத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு..!'
MUTHUKRISHNAN S vikatan
``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்ததோடு ஆளும் கட்சியின் கடமை முடிந்துவிட்டதா'' என்று கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
காவிரி நீருக்கான போராட்டம், தமிழகத்தில் நாளுக்குநாள் வலுவடைந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டத்தைக் கையில் எடுத்துவருகின்றன. கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல், பந்த் என்று தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார்கள். ஏப்ரல் 5-ம் தேதி இன்று நடக்கும் முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அந்தக் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகியிருக்கிறார்கள். அவர்களைப்போலவே, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சியினரும், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினரும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். மேலும் வழக்கறிஞர்கள், மாணவர்கள் என்று போராட்டக் களம் வேகமெடுத்துள்ளது.
இதையெல்லாம் பார்த்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்கள் குறித்து, விளக்கம் சொல்ல டெல்லி சென்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை திரும்பிய அவரை, கவர்னர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து விளக்கமளித்தனர். இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை நடந்த இந்தச் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி, ``தமிழகத்தில் நிலவும் போராட்டம் குறித்து கவர்னர் கேட்டார். விளக்கம் சொன்னோம். கோடைக்காலம் பற்றியும் தண்ணீர்ப் பிரச்னை பற்றியும் கேட்டார். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்தோம். நாங்கள் கூறிய விளக்கங்களைப் பொறுமையுடன் கேட்டறிந்த கவர்னர், `திருப்தி' என்று பதில் சொன்னார். அதாவது, அவருக்கு திருப்தி ஏற்படும் அளவுக்கு பதில் அளித்தோம். மற்றபடி இதில் எந்த ரகசியமும் இல்லை. தமிழக நிலவரத்தைத்தான் எடுத்துரைத்தோம்'' என்றார்.
முன்னதாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த, தமிழ்நாடு காவல் துறை சார்பில் நடைபெற்ற டி.எஸ்.பி பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல் துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது நடந்த கலைநிகழ்ச்சிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜு, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர்.
இந்த நிலையில், இன்று சென்னை உள்பட ஒட்டுமொத்த தமிழகமும் கொதித்துக்கொண்டிருக்கும் நிலையில், 2016 - 17- ம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை இன்று கோட்டையில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மொத்தம் 64 பேருக்குத் தமிழ்ச்செம்மல் விருதுடன் தலா ரூ.25,000 ஆயிரம் வழங்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக எதிர்க்கட்சிகள் நடத்தும் இன்றைய போராட்டம் குறித்தும், ஆளும் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் அரசியல் ஆர்வலர்களிடம் பேசினோம். ``ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்று வரலாற்றில் படித்துள்ளோம். அந்தக் கதைதான் இங்கு, இப்போது நடக்கிறது. காவிரிக்காக, கடந்த 3-ம் தேதி அ.தி.மு.க சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்ததோடு ஆளும் கட்சியின் கடமை முடிந்துவிட்டது என்று அரசாங்க வேலைகளில் எடப்பாடி பழனிசாமி பிஸியாகிவிட்டார். காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறார் என்பது பற்றிப் பேச்சு இல்லை. அதற்குள் போலீஸாரின் கலைநிகழ்ச்சிகள், கவர்னரைச் சந்தித்து சட்டம் - ஒழுங்கு குறித்து விளக்கமளித்தல், விருது விழாக்கள் என்று அவருடைய பணிகள் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தில் மயான அமைதி நிலவுவதுபோன்றுதான் அரசின் செயல்பாடுகள் உள்ளன என்று சொல்லத் தோன்றுகிறது'' என்றனர் மிகத் தெளிவாக.
No comments:
Post a Comment