Tuesday, April 24, 2018


வெடித்துச் சிதறிய தார் ட்ரம்... நாசமான விலை உயர்ந்த கார்கள்! 

எம்.புண்ணியமூர்த்தி
தி.விஜய்

 

கோவை 100 அடி சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தார் ட்ரம் மீது லாரி ஏறியதால், பயங்கர சத்தத்துடன் தார் ட்ரம் வெடித்துச் சிதறியது. இதில், பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருந்த கார்கள் மீது தார் ஊற்றி, கார்கள் நாசமாகின.

கோவை 100 அடி சாலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே தயார்செய்யப்பட்ட ப்ளானில் பாலத்தைக் கட்டாமல், புதிய ப்ளான் தயாரித்து பாலத்தைக் கட்டியது அ.தி.மு.க அரசு. இதை, ஆர்.டி.ஐ மூலம் கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார், ஆர்.டி.ஐ ஆர்வலர், வழக்கறிஞர் லோகநாதன்.

பழைய ப்ளான்படி பாலத்தைக் கட்டினால் வணிக நிறுவனங்கள் இடிபடும் என்ற ஒரே காரணத்துக்காக, அ.தி.மு.க அரசு மாற்றிவிட்டது என்றும் புதிய ப்ளான்படி கட்டும் பாலத்தால் மக்களுக்குப் பயன் இல்லையென்றும் சர்ச்சை வெடித்தது. குறிப்பாக, 100 அடி சாலையின் செங்குத்தான உயரம், வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கதறினார்கள் பொதுமக்கள். அதன்பிறகு, மக்களுக்குப் பயனுள்ள வகையில் பாலம் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தது அரசு. மாற்றுவார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

இந்நிலையில், பாதிக்கும் மேற்பட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக மேம்பாலத்தின்மீது தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக, மேம்பாலத்தின்மீது தார் ட்ரம்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இன்று மதியம், கட்டுமானப் பணிக்காக வந்த லாரி ஒன்று பின்பக்கமாக வந்தபோது, எதிர்பாராதவிதமாக தார் டின்மீது ஏறிவிட்டது. பயங்கர சத்தத்துடன் தார் டின் வெடிக்க… அந்தப் பகுதி மக்கள், அந்த சத்தத்தில் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். ட்ரம்மிலிருந்து பீறிட்ட தார்… பாலத்துக்குக் கீழே வழிந்திருக்கிறது.

அப்போது, கீழே சென்றுகொண்டிருந்த வாகனங்கள்மீது தார் ஊற்றியது. இதில், விலை உயர்ந்த எட்டு கார்கள் நாசமடைந்தன. ஆத்திரம் அடைந்த கார்களின் சொந்தக்காரர்கள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், 100 அடி சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கிறோம், ஸ்டேஷனில் வந்து புகார் கொடுங்கள் என்று கார் உரிமையாளர்களைச் சமாதனப்படுத்தி, போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
அதன் பின்னர், போக்குவரத்து சீர்படுத்தப்பட்டது.

ஆனால், 'இதுவரை தங்களிடம் வந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதுகுறித்துப் பேசவில்லை. இவ்வளவு கவனக்குறைவாக கட்டுமானப்பணியை மேற்கொள்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. காரோடு போய்விட்டது. ஏதாவது உயிர்ப் பலி ஏற்பட்டால், யார் பொறுப்பேற்பார்கள்? ஏண்டா இந்தப் பாதையில வந்தோம்னு இருக்கு. எங்களுக்கு உரிய இழப்பீட்டைத் தர வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment

Techie plays cricket despite chest pain, dies of heart attack

Techie plays cricket despite chest pain, dies of heart attack  TIMES NEWS NETWORK 27.12.2024 Vijayawada : A 26-year-old software engineer di...