Tuesday, April 17, 2018

விளைச்சலோ அதிகம்; விற்பனையோ அமோகம்! 'நுங்கு'க்கு படையெடுக்கும் மக்கள் 

பாலஜோதி.ரா

vikatan 17.04.2018 

கொளுத்தியெடுக்கும் கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, மக்கள் நுங்கை விரும்பி வாங்குவதால், அதன்விற்பனை சூடுபிடித்துள்ளது.



புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், வெப்பத்தைச் சமாளிக்க மக்கள் நுங்கை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் காணப்படும் மிகக் கடுமையான வறட்சியைத் தாங்குவதற்கும், வெயிலின் சூட்டைத் தணிக்கவும் பொதுமக்கள் ஐஸ்கிரீம், குளிர் பானங்களோடு, இயற்கைக் குளிரூட்டிகளான இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, நுங்கு, மோர் ஆகியவற்றையும் தேடி வாங்கிச் சாப்பிடுவார்கள். இதன்மூலம் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து ஓரளவுக்காவது தங்களை சமாளித்துக்கொள்வார்கள்.

என்னதான் கண்கவரும் விளம்பரங்கள் மூலம் பெரிய, பிரபல குளிர்பானக் கம்பெனிகள் தங்களது கூல்டிரிங்ஸைக் குடிக்கும்படி மக்களைக் கூவிக்கூவி அழைத்தாலும், மக்கள் நுங்கையும் இளநீரையும் விரும்பிச் சுவைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் விரும்பக்கூடிய ரசாயனக் கலப்படமற்ற இயற்கை உணவுப் பொருள்களுக்கு மவுசு சமீபகாலமாக கூடிக்கொண்டேவருகிறது. அதிலும் எவர்கிரீன் இளநீரும் நுங்கும் இப்போது சக்கைப்போடு போடுகின்றன.

இதில், இளநீருக்கு மட்டும் சீசன் ஏதுமில்லை. ஆண்டுதோறும் பரவலாக அது கிடைக்கும். அதேபோல, சீசனுக்கு முன்பாகவே தர்பூசணியும், வெள்ளரிப்பிஞ்சும், வெள்ளரிப் பழங்களும் விற்பனைக்குவந்து சாலையோரங்களில் குவிக்கப்பட்டுவிடும். ஆனால், நுங்கு குறைவாகவே கிடைக்கும். இந்த வருடம், ஏகோபித்த மக்களின் எதிர்பார்ப்பாகவே இருக்கிறது நுங்கு. மக்களின் எதிர்பார்பைப் பூர்த்திசெய்யும்விதமாக விற்பனைக்காக நுங்குகள் குவிக்கப்பட்டுள்ளன. உடல் குளிர்ச்சிக்கு மட்டுமல்லாமல்,வெப்பத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வேர்க்குரு,வேனல் கட்டி போன்ற தோல் பாதிப்புகளுக்குப் பூசிக்கொள்ளும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.



புதுக்கோட்டை மாவட்டத்தில் பனைமரங்கள் குறைந்து விட்டபோதும், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, செங்கப்பட்டி, இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, நார்த்தாமலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்சயமம் நொங்கு வெட்டப்படுகிறது. இந்தப் பகுதிகளில் இந்த வருடம் நுங்கு விளைச்சல் அதிகம் என்பதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாட்டு வண்டிகளில் குலைகுலையாக நுங்கை ஏற்றிவந்து கடைவீதிகளில் விற்பனை செய்கின்றனர். தற்போது ஒரு முழு நுங்கின் விலை 10 ரூபாயும் 3 நுங்குச் சுளைகள் 10 ரூபாய் என்றும் சாலையோரக் கடைகளில் விற்கப்படுகிறது.

புதுக்கோட்டை முதல் விராலிமலை வரையுள்ள கட்டியாவயல் குருக்களையாப்பட்டி, ஆரீயூர் அன்னவாசல், சத்திரம், காலாடிப்பட்டி, தாண்றீஸ்வரம், இலுப்பூர், மலைக்குடிப்பட்டி விராலிமலை வரை சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்பட்டு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கேப்பைக்கூழ், நுங்கு, போன்றவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவ்வழியாகச் செல்பவர்கள், வெயிலை சமாளிக்க இதுபோன்ற கடைகளில் வாகனங்களை நிறுத்தி வாங்கிச் சாப்பிட்டு மகிழ்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024