Thursday, April 26, 2018

தலையங்கம்

‘பாலியல் பலாத்கார வழக்கு’ புலன்விசாரணை




இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக சிறுகுழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருவது எல்லோருடைய மனதையும் துடிதுடிக்க வைக்கிறது.

ஏப்ரல் 26 2018, 03:00 AM

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக சிறுகுழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருவது எல்லோருடைய மனதையும் துடிதுடிக்க வைக்கிறது. கதுவா சம்பவம் வெளிவந்த உடனேயே மத்திய மந்திரி மேனகா காந்தி, சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் ஒரு வரைவு மசோதாவை தன் அமைச்சகம் தயாரித்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னார். அரசு எந்திரம் நினைத்தால் எவ்வளவு வேகமாக சுழலமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் வகையில் ஒரு அவசரசட்டம் கொண்டுவருவது குறித்து கடந்த சனிக்கிழமை மத்திய அமைச்சரவை முடிவு செய்து ஒப்புதலும் அளித்தது. அடுத்த நாளே இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் கொடுத்து உடனடியாக அமலுக்கும் வந்துவிட்டது.


இந்த சட்டத்தின் கீழ் 12 வயதிற்கும் குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அல்லது ஆயுள் முழுவதும் ஜெயில் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பலர் கூட்டாக சேர்ந்து 12 வயதிற்குட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால், ஆயுட்காலம் முழுவதும் தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வழக்குகளில் புலன்விசாரணை 2 மாதங்களுக்குள் முடிவடையவேண்டும். நீதிமன்ற விசாரணை 2 மாதங்களுக்குள் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் இதுதொடர்பான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை அளிக்கும் பல அம்சங்கள் இந்த அவசர சட்டத்தில் கூறப்பட்டாலும், மரண தண்டனை மட்டுமே இத்தகைய குற்றங்களை தடுத்துவிடுமா? என்பதில் எல்லோருக்கும் சற்று மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன. 2012 டிசம்பர் மாதத்தில் நடந்த நிர்பயா கற்பழிப்பு வழக்கில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வர்மா தலைமையிலான கமி‌ஷன், ‘கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை என்பது ஏற்கத்தக்கதல்ல’ என்று கூறியுள்ளது. உச்சநீதிமன்ற வக்கீல் ரவிகாந்த், ‘கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வெளிநாடுகளில், கற்பழிப்புக்கு பிறகு கொலை செய்யும் சம்பவங்கள் நடக்கின்றன’ என்று அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் சட்டம் தெரிந்த ஒரு வக்கீலே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.


நாடு முழுவதிலும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகே பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. பொதுவாக கற்பழிப்பு வழக்குகளில் புலன்விசாரணை செய்து தண்டனை வாங்கிக்கொடுத்த வழக்குகளின் எண்ணிக்கை 25–லிருந்து 35 சதவீதமும், சிறுகுழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்குகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான வழக்குகளில்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புலன்விசாரணை உரியமுறையில் நடத்துவதற்கு போலீசாருக்கு பயிற்சி அளிக்கவேண்டும். இதுபோன்ற வழக்குகளை நன்கு திறமைமிக்க பெண் போலீஸ் அதிகாரிகளிடம் கொடுப்பது சாலச்சிறந்ததாகும். இந்த அவசர சட்டத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களைப் பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மொத்தத்தில், தண்டனை வழங்க சட்டம் பிறப்பித்தால் மட்டும் போதாது. அதை வாங்கிக்கொடுக்கும் வகையில் போலீசாரின் புலன்விசாரணையும், நீதிமன்றத்தில் வாதாடும் அரசு வழக்கறிஞர்களின் திறமையிலும்தான் இருக்கிறது.


No comments:

Post a Comment

CM: UGC draft rules blow to federal system

CM: UGC draft rules blow to federal system TIMES NEWS NETWORK  09.01.2025 Bengaluru : CM Siddaramaiah condemned the University Grants Commis...