Sunday, April 22, 2018

ஒரு போர்டு... ஆயிரத்தெட்டு தகவல்கள்! இளைஞர்களுக்கு வழிகாட்டும் கிராமத்து பெட்டிக்கடைக்காரர்
 
விகடன் 17 hrs ago

 


பணம் ஒன்றே பிரதானம் என்றாகிவிட்ட இந்த லௌகீக வாழ்வில், மனிதநேயம், உதவி மனப்பான்மை என்பவை மிகவும் அருகிவிட்டன. `அடுத்தவர்கள் என்ன கதியானால் என்ன' என்றுதான் பலரும், சுயநலத்தோடு துரிதமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும், உதவி மனப்பான்மை கொண்ட மனிதர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகை மனிதர்தான் கரூர் மாவட்டம், கடவூர் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி.

கடவூரில் சிறு அளவில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வருகிறார். கிராமத்து அளவில் இருக்கும் சிறு கடைகளிலேயே கார்ப்பரேட் கம்பெனிகளின் விளம்பர தட்டிகளும் மளிகைப் பொருள்களின் விலைப்பட்டியல் மட்டுமே இடம் பெயரும். ஆனால், இவரது மளிகைக் கடையில் உள்ள சுவற்றில் கறும்பலகை அமைத்து, தினமும் அப்துல்கலாம் உள்ளிட்ட உயர்ந்த மனிதர்கள் இளைஞர்களுக்கு வழங்கி சென்ற நல்ல கருத்துகள் ஒன்றை எழுதிப் போடுகிறார். அனைத்து தினசரிகளையும் வாங்கிப்போட்டு, அந்த ஊர் இளைஞர்களைப் படிக்கச் சொல்கிறார். அதோடு, கடைக்கு முன்பு போர்டு ஒன்றை மாட்டி, மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை அந்த ஊர் இளைஞர்கள் பார்வையில் படும்படி செய்கிறார். இதனால், அந்த ஊர் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்யும் ஆர்வத்தை வளர்த்து வருகிறார்கள். அதோடு, அரசு வேலைக்கு தயாராக க நினைக்கும் ஏழ்மை நிலையில் உள்ள இளைஞர்களுக்குத் தகுந்த புத்தகங்களை வாங்கவும் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஆகும் செலவையும் தனது பையிலிருந்து எடுத்துக் கொடுக்கிறார். இதனால், அந்த ஊர் இளைஞர்கள் அரசு வேலை குறித்த போதிய விழிப்பு உணர்வைப் பெற்றிருக்கிறார்கள்.

கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினால், "நான் அதிகம் படிக்கலை. `படிக்கிறதைவிட, குடும்பத்துக்கு சோறு போடுற இந்தக் கடை தொழிலை கவனின்னு எங்கப்பா என்னை இந்தக் கடையிலேயே பழக்கிட்டார். நல்லா படிச்சு, பெரிய அரசு அதிகாரியா ஆவனும்ன்னு நினைச்சேன். முடியலை. எங்க கிராமம் மிகவும் பின்தங்கிய கிராமம். இங்கு வசிப்பவர்கள் அனைவரும் அன்றாடங்காய்ச்சிகள். அதனால், அவர்கள் வீட்டு இளைஞர்களாச்சும் என்னைப்போல் இல்லாமல் படித்து, அரசு வேலைகளுக்குப் போகணும்னு நினைச்சேன். அதனால், என்னால முடிஞ்ச சின்ன ஒத்தாசையை பண்ணிகிட்டு இருக்கேன். அடுத்து, முடிஞ்சா எங்க கிராமத்துலேயே இலவசமா டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்பை தொடங்கலாம்னு இருக்கேன்" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024