நேற்று இளநீர், தர்பூசணியுடன் அமர்க்களம்... இன்று பந்தல் இருக்கு குடிநீர் இல்லை... அ.தி.மு.க-வின் கோடை அட்ராசிட்டி
விகடன் 20.04.2018
அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூரில் பல இடங்களில் கோடைவெயிலின் தாகத்தைப் பொதுமக்கள் தணித்துக்கொள்வதற்காகத் தண்ணீர்ப் பந்தல் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் பந்தல்களில் தினமும் தண்ணீர் வைப்பது இல்லை. அதனால் அவை இரண்டு சக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறிப்போனது என அம்மாவின் உண்மை விசுவாசிகள் வேதனைத் தெரிவிக்கிறார்கள். ஜெயலலிதா இருந்த வரை தன் கட்சிக்காரர்களுக்கு கோடைக்காலத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்டந்தோறும் தண்ணீர் பந்தல் திறக்க உத்தரவிடுவார். அதே போல் அம்மாவின் ஆணைக்கிணங்க எனக் கூறி ஒவ்வோர் மாவட்டத்திலும் அ.தி.மு.க-வின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் திறப்பார்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் கோடைக்காலத்தின் வெயிலைச் சமாளிக்கும் வகையில் அ.தி.மு.க-வினர் தண்ணீர்ப் பந்தல் திறந்து வருகிறார்கள். தஞ்சாவூரில் கோடைக்காலத்துக்கான தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா கடந்த வாரம் நடந்தது. இதை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திறந்து வைப்பார் என அறிவித்திருந்தனர். ஆனால், அவர் வரவில்லை. தஞ்சாவூர் தொகுதியின் எம்.பி பரசுராமன் தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்தார். உடன் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
மெடிக்கல் காலேஜ், புதிய பேருந்து நிலையம், கீழவாசல், கீழவீதி எனப் பல இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திறப்பு விழா தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் கோலாகலமாகப் பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்ப்பூசணி என அனைத்தையும் கொடுத்து அசர வைத்தனர் அ.தி.மு.க-வினர். அதற்கடுத்த நாள்களில் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்தனர். அதன் பிறகு, பானையை எடுத்துவிட்டு கேன் வாட்டர் வைக்கப்பட்டது. இப்போது ஒரு சில முக்கிய இடங்களில் தண்ணீரே வைப்பது இல்லை. வறண்டு கிடக்கும் டெல்டா மாவட்டத்தைப்போல் கீழவீதியில் உள்ள தண்ணீர் பந்தல் இரண்டு சக்கர வாகனம் நிறுத்தும் இடமாகவும் வியாபாரிகள் பொருள்கள் வைக்கும் இடமாகவும் மாறிவிட்டன.
சிரித்த முகத்துடன் ஜெயலலிதா இருக்கும் புகைப்படத்துடன் தண்ணீர் பந்தலில் போர்டு வைத்துள்ளனர். ஆனால், தண்ணீர் மட்டும் தொடர்ந்து வைப்பதில்லை. இன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆணைக்கிணங்க திறக்கப்பட்ட தண்ணீர்ப் பந்தலைக்கூட கவனிக்க நேரம் இல்லாமல் இருக்கிறார்கள் நிர்வாகிகள். இதே ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இப்படிச் செய்வார்களா என வேதனையோடு தெரிவிக்கிறார் அ.தி.மு.க-வின் உண்மை தொண்டர்கள்.
No comments:
Post a Comment