Friday, April 20, 2018

திருடனை தனியாக விரட்டினேன்; எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தார்கள், போட்டோ பிடித்தார்கள்: காவல் ஆணையர் முன் சிறுவன் வேதனை

Published : 19 Apr 2018 15:28 IST



காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்கள் சாரங்கன் , ஜெயராமனுடன் சிறுவன் சூர்யா படம்: சென்னை காவல்துறை

தான் செயின் பறிப்பு திருடனை விரட்டிப் பிடித்துப் பாராட்டு பெறுவது, சென்னையில் உள்ள இளைஞர்களுக்கு உதாரண சம்பவம் என செயின்பறிப்பு திருடனை தீரத்துடன் விரட்டிப்பிடித்த சிறுவன் சூர்யா தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சூர்யா பதிலளித்தார்.


செயினைப் பறித்தவர் உங்களை விட வலுவான ஆள். எப்படி துணிச்சலாக பிடிக்கத் தோன்றியது?

அவர் புதிதாக திருடும் நபர் போலிருக்கு. செயின் பறிப்பில் பல துண்டுகள் கீழே விழுந்ததை பொறுக்கி எடுத்துக்கொண்டே துரத்திச்சென்றேன். துரத்திச்செல்லும்போதே பொதுமக்களையும் உதவிக்கு அழைத்துக்கொண்டே ஓடினேன்.

பொதுமக்கள் வேடிக்கை பார்க்கிறார்களே தவிர உதவிக்கு யாரும் வரவில்லை, பின்னர் காலரைப் பிடித்து காலை தட்டிவிட்டு முகத்தில் இரண்டு குத்து விட்டவுடன் அவர் தடுமாறிவிட்டார். பின்னர் மடக்கிப் பிடித்து தண்ணீர் பாக்கெட் வாங்கிக் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினேன்.

பின்னர் போலீஸுக்கு புகார் அளித்தேன். போலீஸார் வந்தவுடன் அவரை ஒப்படைத்தேன்.

மற்றவர்களை உதவிக்கு அழைத்தீர்களா?

எல்லோரையும் உதவிக்கு அழைத்தேன், யாருமே வரவில்லை. துணிந்துதான் வேறு வழியில்லாமல் விரட்டிப் பிடித்தேன். எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தார்களேயொழிய யாரும் உதவ முன்வரவில்லை.

போலீஸ் வந்தபின்னர் சுற்றி நின்றவர்கள் போட்டோ எடுக்கத்தான் ஆர்வம் காட்டினார்ர்களே தவிர நான் போராடியபோது பிடிக்க வரவில்லை.

இதுபோன்ற சமயங்களில் பொதுமக்கள் என்ன செய்யவேண்டும் என சொல்ல வருகிறீர்கள்?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளைப் பிடிக்க பொதுமக்கள் முயல வேண்டும். யாராக இருந்தாலும் பிடித்துவிட வேண்டும். சென்னை பசங்களுக்கு இது ஒரு உதாரண சம்பவம்.

இவ்வாறு காவல் ஆணையரால் பாரட்டப்பட்ட சிறுவன் சூர்யா தெரிவித்தார்.

அப்போது காவல் ஆணையர் விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்கள் ஜெயராமன், சாரங்கன், இணை ஆணையர் அன்பு போன்றோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024