Thursday, April 12, 2018



புதிய சேவை தொடக்கம்: திருச்சி- சென்னை விமானக் கட்டணங்கள் குறைப்பு


By DIN | Published on : 12th April 2018 01:46 AM




திருச்சி - சென்னை இடையே ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்படுவதை முன்னிட்டு, விமானக் கட்டணங்கள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. 

திருச்சி - சென்னை இடையே ஏற்கெனவே காலை 8.40க்கு ஏர் அலையன்ஸ் விமானமும், முற்பகல் 11.15, மாலை 6, இரவு 10.40 மணி ஆகிய 3 நேரங்களில் ஜெட் ஏர்வேஸ் விமானமும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், உள்நாட்டுப் போக்குவரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், இண்டிகோ நிறுவனம் ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய விமான சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விமானப் போக்குவரத்தும் தினமும் 4 முறை இயக்கப்படவுள்ளது.
இந்த புதிய அறிவிப்போடு, இண்டிகோ நிறுவனம் கட்டணச் சலுகையையும் அறிவித்துள்ளது. ஏற்கெனவே குறைந்தபட்ச கட்டணமாக ரூ.3,500 என இருந்தாலும், சில நேரங்களில் ரூ. 12,000 வரையில் திருச்சி-சென்னை இடையிலான விமானக் கட்டணம் இருந்துள்ளது. ஆனால், முன்கூட்டியே பயணச்சீட்டு பதிவு செய்யும் நிலையில், குறைந்தபட்சக் கட்டணமாக ரூ. 2,499 என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்கெனவே களத்தில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் தனது குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 2,572 எனவும், ஏர் அலையன்ஸ் 2,754 ஆகவும் நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளன.
இந்த அதிரடி கட்டணக் குறைப்பால், திருச்சி - சென்னை இடையே விமானப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. காரணம் ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் ரூ.1400 என உள்ளது. மேலும் ரயில்களில் எப்போதும் இடம் கிடைப்பதில்லை. பயணிகள் ஆம்னி பேருந்துகள் மற்றும் பேருந்துகளை நாடுகின்றனர். 

ஆம்னி பேருந்துகளில் படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி பேருந்துகள் ரூ. 700 முதல் ,1000 வரை நிர்ணயிக்கப்படுகின்றன. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இது மேலும் அதிகரிக்கின்றன. அந்தளவு செலுத்தி 8 மணி நேரம் பயணிக்கும் நிலையில், ரூ.2,500-க்கு விமானப் பயணம் என்பது மிக மிக குறைவானக் கட்டணமே. 

இன்டிகோ விமான நேரம் : காலை 9.35, பகல் 12.25, 2.25, மாலை 5.30, இரவு 7.10 என தினமும் 5 முறை திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024