Thursday, April 12, 2018


கடன் படுத்தும் பாடு

By நா. கிருஷ்ணமூர்த்தி | Published on : 12th April 2018 01:14 AM | 

'எங்களுடைய பிள்ளை நன்கு படிக்க வேண்டும்... நல்ல வேலை கிடைக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும். சொந்த வீடு, கார் வசதிகளோடு வாழ வேண்டும்' என்பதுதான் பெற்றோர்களின் தற்போதைய கனவாக உள்ளது. நடைமுறையில் இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை.
வேறு சிலர், 'சின்ன வேலையோ, பெரிய வேலையோ, முதலில் வீட்டைக் கடனில் வாங்கிவிட வேண்டும். வாடகை மிச்சமாகிவிடும். வாடகைப் பணத்துடன் கொஞ்சம் சேர்த்து வீட்டுக் கடனின் மாதத் தவணையைக் கட்டிவிடலாம். வீட்டுக் கடன் முடிந்தவுடன் வீடு சொந்தமாகிவிடும்' என்று மனக்கணக்கு போடுகின்றனர்.

வேலைக்குச் சேர்ந்தவுடனேயே பிள்ளையின் தலையில் கடனைச் சுமத்திவிட்டால், அவனுக்கு வீண் செலவு செய்வதற்கு முடியாது என்று வாதம் செய்பவர்களும் இருக்கின்றனர். ஆக, நடுத்தரவார்க்கம் வீடு வாங்கிவிடுவதில் வெகு முனைப்பாக உள்ளது.

முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் பணிபுரிவோர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் பணிபுரிந்த பின் ஆண்டொன்றுக்கு இவ்வளவு நபர்களுக்குத்தான் வீட்டுக் கடன் தருவதென அரசு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி வீட்டுக் கடனைத் தரும்.

ஆனால் அப்படியெல்லாம் இப்போது காத்திருக்க வேண்டியதில்லை. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கும் சம்பளச் சீட்டின் நகல், வங்கிக் கணக்கு விவரம், ஆதார் அட்டை, கையெழுத்திட்ட வங்கிக் காசோலைகள் ஆகியவற்றைக் கொண்டு வீட்டுக் கடன் முதல் வாகனம், வீட்டு உபகரணங்கள் வாங்கக் கடன் அளிக்க முன்வருகிறார்கள்.

இந்திய குடிமகனின் தலையில் கடனைச் சுமத்த அயராது உழைக்கிறார்கள். கையில் வண்ண வண்ண விளம்பரத் துண்டுச் சீட்டுகளுடன் அலுவலகங்கலில், பொருட்காட்சிகளில், சாலைகளில், வங்கியின் வாசல்களில் என எங்கெங்கும் அலைகின்றனர். கைபேசியில் அழைத்து, கனிவுடன் பேசி கடன் வேண்டுமா என்கிறார்கள். எப்போது நேரில் வந்து பேசலாம் என தேதியும், நேரமும் கேட்டுத் தொணப்புகின்றனர். தினசரிகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் தந்து ஆட்களை மயக்குகின்றனர். வலையில் சிக்க வைக்கும் உறுதியோடு செயல்படுகின்றனர்.

முன்பெல்லாம் கடன் வாங்குவதற்கு யோசிப்பார்கள். தயங்குவார்கள். அச்சப்படுவார்கள். இப்போது அப்படியில்லை. தொட்டதற்கெல்லாம் கடன். அத்தியாவசியத்திற்கு கடன் வாங்குவதில் தவறில்லை. அடிப்படைச் செலவுகளுக்கே கடன் வாங்கினால் கரையேறுவது எப்படி?
குழந்தைகள் நல்ல ஆங்கிலப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். அநத்க கடனை ஒருவரிடத்தில் அடைப்பது என்பதே சிரமம். அப்படியே கிடைத்துவிட்டாலும் அடுத்த ஆண்டு படிப்பதற்கு அதைவிட அதிகமான தொகை தேவைப்படும். வகுப்பு ஏற ஏற செலவும் கூடும். கல்லூரி படிப்பு வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். குறைந்தது ஐந்தாறு லட்சங்கள் கடன் வாங்க நேரிடும். ஆக மொத்தம் ஒரு பிள்ளை படித்து முடித்து சம்பாதிக்கும் நிலைக்கு வரும்போது அவன் தலையில் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் கடன் சுமையிருக்கும். நினைத்தபடி வேலை அமையாவிட்டாலும், நல்ல ஊதியம் கிடைக்காவிட்டாலும் பெற்றோர்களுக்கு கடன் பற்றிய கவலை ஆரம்பித்துவிடும்.

கடனோடு சாகக் கூடாது என்பதை நமது முன்னோர்கள் நம்பினார்கள். எனவே கடன் வாங்குவதையே தவிர்த்தார்கள். வரவுக்குள் சிக்கனமாக வாழும் வழியைக் கடைப்பிடித்தனர். 

கடன் வாங்குவது எளிது. அதுவே சிலருக்கு எமனாகிவிடுகிறது. ஒருவன் அளவிற்கு அதிகமாக கடன் வாங்கிவிட்டால் அவன் கடன் கொடுத்தவனிடம் அடிமையாகிவிடுகிறான். வாயில்லாப் பூச்சியாகிவிடுகிறான். தைரியசாலியாக இருந்தவன் கோழையாகிவிடுகிறான். பேச வேண்டியதைக் கூட பேசும் திராணியற்றுப் போகிறான். கடனை எப்படியாவது அடைக்க வேண்டும்; எப்படி அடைப்பது என்கிற கவலைகளோடு வாழ வேண்டி வரும். தினமும் அவர்களுடைய எண்ணம் அதிலேயே சுழலும். எதிர்காலம் எனபது அச்சத்தைத் தரும். மன உளைச்சல் பல வித நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கும். ஆரோக்கியமாக இருந்தவர்கள் நோயாளியாகிவிடுவார்கள். கடன் வாங்குவது என்பது நடுத்தர வர்க்கத்திற்கு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டதை நினைக்கும்போது வருத்தம் மேலிடுகிறது.
கொஞ்சம் பின்னோக்கி நினைவைத் திருப்பிப் பார்த்தால் புரியும். சுமார் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கடன் வாங்குவதை எல்லோரும் இவ்வளவு சகஜமாக எடுத்துக் கொண்டதில்லை. இப்போது தயக்கமில்லாமல் கடன் வாங்குகிறார்கள். நம் சமூகத்தில் கடன் இவ்வளவு மலிந்துவிட்டதற்குக் காரணம் நவீன பொருளாதாரக் கொள்கையின் ஓர் அம்சம் என்று சில நிதி நிபுணர்கள் சொல்ல முற்படக்கூடும். ஆனால் காரணம் அது மட்டுமல்ல. இந்த மனோபாவத்துக்கு நம்மில் பலர் தள்ளப்பட்டதற்கு முக்கியக் காரணம், நம்மிடம் சரியான வழிகாட்டுதல் இல்லை. ஆசைகளும் பேராசைகளும், போலியான கெளரவங்களும், படாடோபங்களின் மீது அதீதப் பற்றும், பணத்தின் அருமை தெரியாததாலும் நிலை தடுமாறி நிற்கிறார்கள்.
வாழ்க்கையில் கடனில்லாது வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சிகரமான விஷயம்! அதைத் தொலைத்துவிட்டு வாழ்வோர் ஏராளம். இளைய தலைமுறையினருக்கு சகஜமாக கடன் வாங்கக் கற்றுக் கொடுத்ததுதான் நம்முடைய சாதனையாக உள்ளது.

சிக்கனத்திற்கும் சேமிப்பிற்கும் என்றும் முன்னுரிமை தந்தது நம் பாரத தேசம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டபோது, இந்தியா சிறு அதிர்வைக்கூட சந்திக்காது பாதுகாத்தது நம்முடைய முன்னோர்களின் சேமிப்புதான் - சேமிப்புப் பழக்கந்தான்.
நம் பிள்ளைகளுக்குப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் பயன்களைப் பாடமாகச் சொல்லித் தர வேண்டும். நாமும் நம் பிள்ளகளுக்கு வாழ்க்கையில் அகலக் கால் வைக்கக் கூடாது என்பதையும், வருவாய்க்குள் செலவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், சேமிப்பே என்றும் பாதுகாப்பானது என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...