Thursday, April 12, 2018

போலி சான்றிதழ்: 20 மருத்துவர்கள் பணியிடை நீக்கம்!


மாகராஷ்டிராவில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 20 மருத்துவர்களை மாநில மருத்துவ கவுன்சில் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாநில மருத்துவ கவுன்சிலில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ முதுகலை படிப்பு முடித்த மருத்துவர்கள், மாநிலத்தில் மருத்துவராகப் பணிபுரிவதற்கு மாநில மருத்துவ கவுன்சிலிடம் இருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்கள் கூடுதல் தகுதிக்காக மாநில மருத்துவ கவுன்சிலில் போலி சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளதாக புகார்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புகார்களையடுத்து, மாநில மருத்துவ கவுன்சில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களை ஆய்வு செய்தது.

இந்த விசாரணையில், "மருத்துவ கவுன்சிலில், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக கண்டறியப்பட்ட மருத்துவர்கள் 20 பேர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த மருத்துவர்களும் இதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இனி மருத்துவர்களாகப் பணிபுரிய முடியாது. வேறு சில காரணங்களுக்காக 4 மருத்துவர்களின் உரிமத்தையும் மாநில மருத்துவ கவுன்சில் திரும்ப பெற்றுள்ளது" என்று மாநில மருத்துவ கவுன்சில் தலைவர் மருத்துவர் சிவகுமார் உட்டுரே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024