Thursday, April 12, 2018

நடுவுல கொஞ்சம் உண்மையைக் காணோம்!

Published : 06 Apr 2018 12:11 IST

ராஜலட்சுமி




சமூக ஊடங்களில் இன்று புரளிக்குப் பஞ்சமே இல்லை. அவை உண்மையா என்றுகூட யோசிக்காமல், உடனே அவற்றை மற்றவர்களுக்குப் பகிர் கிறோம். புரளியை உண்மை என நம்பி ஷேர் செய்து பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளவும் செய்கின்றனர். தொழில்நுட்பம் வளர்ச்சி அடையஅடைய புரளிகளும் சமூக ஊடகங்களில் அதிகளவில் சுற்றிவருகின்றன. இதுபோன்ற புரளிகளை ஆராய்ந்து அது உண்மையா, பொய்யா எனச் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது ‘யூ டர்ன்’ (You Turn) என்ற ஃபேஸ்புக் பக்கம்.

சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடரும் இந்தப் பக்கத்தை இளைஞர்கள் இருவர் சேர்ந்து நிர்வகித்து வருகிறார்கள். சமூக ஊடகங்களில் புரளிகளை அம்பலப்படுத்தும் இந்த ஐடியா எப்படி உதித்தது என்று ‘யூ டர்ன்’ பக்கத்தை நிர்வகிப்பவர்களில் ஒருவரான ஐயன் கார்த்திகேயனிடம் கேட்டோம்.


“நன்கு படித்தவர்கள்கூடப் புரளிகளை ஆராயாமல் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னுடைய நண்பர் விக்னேஷ் காளிதாசனுடன் சேர்ந்து சமூக ஊடகங்களில் உலவும் புரளிகளை அம்பலப்படுத்த விரும்பினேன்.

அதன் ஒரு பகுதியாகத்தான் யூ டர்ன் பக்கத்தைத் தொடங்கினோம். ஃபேஸ்புக்கில் மீம்ஸ் மூலம் பெரும்பாலும் புரளிகள் வலம் வருவதால், மீம்களைக் கொண்டு உண்மையை ஆதாரத்துடன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடுகிறோம்.

பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் ட்ரெண்டிங்கில் உள்ள விஷயங்களைத் திசை திருப்பவும், அதில் தொடர்புடையவர்களைப் பற்றிய தவறான செய்திகளை மீம்ஸ் மூலம் பரப்பவும், பிரச்சினை பற்றிய தவறான கண்ணோட்டத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கவுமே மீம்களை உலவவிட்டு நம்ப வைக்கின்றனர்” என்கிறார் ஐயன் கார்த்திகேயன்.  

பெரும்பாலும் அரசியல் கட்சிகளுடைய தொழில்நுட்ப அணியே அவதூறான செய்திகளைப் பரப்புகின்றன.  இதேபோல் வியாபார ரீதியாகத் தவறான செய்திகளை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்புவர்களும் இருக்கின்றனர்.

ஃபேஸ்புக் மட்டுல்லாமல் ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களிலும் தவறான செய்திகளை ஆராய்ந்து ஆதாரத்துடன் இவர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதால் உங்களுக்கு என்ன நன்மை என்ற கேள்வியை முன்வைத்தோம்.


கார்த்திகேயன்

“சமூகம் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்கிறது. அதில், எது பொய் எது உண்மை எனத் தெரியாமல் பயணம் செய்கிறது. இப்படியே சென்றால், எதிர்காலத்தில் ஒரு அறிவுள்ள சமூகம் அமையாது.

சட்டம், மருத்துவம் படித்தவர்கள்கூடத் தவறான செய்திகளை நம்புகின்றனர். ஆக, உண்மைச் செய்தியை எடுத்துரைத்து, புரளிகளை அம்பலப்படுத்துவதே எங்களின் குறிக்கோள்.

தவறான செய்திகளை ‘யூ டர்ன்’ மூலம் தடுப்பது திருப்தியைத் தருகிறது. பலருக்கும் எதிர்நிலையை நாங்கள் கொண்டிருப்பதால், எங்கள் பக்கத்தை முடக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.

இங்கு உண்மைக்கு அத்தனை எதிர்ப்பு” என்கிறார் ஐயன் கார்த்திகேயன்.

மக்களிடம் உண்மைகளைக் கொண்டுசேர்க்கும் வகையில் http://youturn.in/ என்ற இணையதளத்தையும் இவர்கள் தொடங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...