Sunday, April 22, 2018

வெல்லுவதோ இளமை: கேட்ஸ் திறந்த ‘புதிய ஜன்னல்’

Published : 20 Apr 2018 09:59 IST

என். சொக்கன்



பல நாட்களாகப் பட்டினி கிடந்த ஒருவருக்குத் திடீரென்று அறுசுவை விருந்து கிடைத்தால் எப்படியிருக்கும்? அப்படி இருந்தது வில்லியத்துக்கும் அவனுடைய நண்பர்களுக்கும்.

அதற்குக் காரணம் கணினி என்ற அறிவியல் அதிசயமே!

இன்றைக்கு ஒரு கணினி இருந்தால் போதும். அலுவலக வேலை பார்க்கலாம், பாட்டு கேட்கலாம், சினிமா பார்க்கலாம், மின்னஞ்சல் படிக்கலாம், நண்பர்களுடன் அரட்டையடிக்கலாம்... இவை எவையும் அன்றைய கணினியில் சாத்தியமல்ல! அன்றைக்குப் புழக்கத்தில் இருந்த கணினிகள் ஒவ்வொன்றும் அறையளவு பெரிதாக இருந்தன. அவற்றில் பாட்டு, திரைப்படம், மின்னஞ்சல், ஃபேஸ்புக்கெல்லாம் வராது. ஒரு ஒளிப்படத்தைக்கூடப் பார்க்க முடியாது. வெறும் எழுத்துகள்தாம்.


ஆனால், அந்தக் கணினிகள் அன்றைய தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய சாதனை. அவற்றைப் பயன்படுத்தி புரோக்ராம்கள் எனப்படும் நிரல்களை எழுதலாம். நாம் என்ன சொன்னாலும் கணினியைக் கேட்கச்செய்யலாம். அதனால்தான், வில்லியம் போன்ற அன்றைய இளைஞர்கள் பலருக்குக் கணினிகளை மிகவும் பிடித்திருந்தது. ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்கள், விதவிதமான நிரல்களை எழுதிக் குவித்தார்கள்.

இத்தனைக்கும் வில்லியம் முழுக் கணினியைப் பயன்படுத்தவில்லை. அவனுடைய பள்ளியிலிருந்து ஒரு பெரிய கணினிக்கு இணைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அதை வைத்து அந்தக் கணினியில் நுழைந்து நிரல்களை எழுதிப் பழகிக்கொண்டான். அவனுக்குச் சொல்லித் தரவும் அங்கே யாரும் இல்லை. அவனே புத்தகங்களை, கையேடுகளைப் புரட்டிப் பார்த்தான், ஏதோ எழுதிப் பார்த்தான், அவை பிரமாதமாக வேலை செய்வதைப் பார்த்து வியந்துபோனான். சரியான நிரல்கள், பிழையான நிரல்கள் என இரண்டுமே அவனுக்குப் புதிய விஷயங்களைக் கற்றுத்தந்தன.

திடீரென்று ஒருநாள், அவர்களுடைய கணினி இணைப்பு வேலைசெய்யவில்லை.

வில்லியமும் அவனுடைய நண்பர்களும் கணினியை மொத்தமாகப் பயன்படுத்தியதால் அதற்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் தீர்ந்துவிட்டது.

‘ஆனா, எங்களுக்கு கம்ப்யூட்டர் வேணுமே; நாங்க என்ன செய்யறது?’வில்லியம் பரிதாபமாகக் கேட்டான்.


‘பள்ளிக்கூடத்துக்காகக் கொடுத்த இலவச நேரம் முடிஞ்சிடுச்சு. இனிமே நீங்களே காசு கொடுத்துப் பயன்படுத்தினாதான் உண்டு.’

அதற்கு அவர்கள் சொன்ன வாடகைத் தொகை மிக அதிகம். ஆனாலும், வில்லியமும் அவனுடைய நண்பர்களும் தங்களுடைய பாக்கெட் மணி, சேமிப்பையெல்லாம் செலவழித்துத் தொடர்ந்து கணினியைப் பயன்படுத்திவந்தார்கள். ஆனால், முன்புபோல் எந்நேரமும் கணினியின் முன்னே கிடக்க முடியாது. கொடுக்கிற காசுக்குச் சிறிது நேரம்தான் பயன்படுத்த அனுமதி.

அதுவரை கணினியை இஷ்டம்போல் பயன்படுத்திப் பழகியிருந்த அவர்களுக்கு, இப்படிச் சிறிது சிறிதாகப் பயன்படுத்துவது பிடிக்கவில்லை. ‘இன்னும் இன்னும்’ என்று ஏங்கினார்கள்.

அப்போது அவர்கள் ஊரில் ‘கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷன்’ (CCC ) என்ற நிறுவனத்திடம் சில கணினிகள் இருந்தன. ஆனால், அவையும் வாடகைக்குப் பெறப்பட்டவையே.

அந்தக் கணினிகளில் அவ்வப்போது சிறிய, பெரிய பிழைகள் தென்படும். அதுபோன்ற நேரத்தில் பிழை திருத்தப்படும்வரை CCC நிறுவனம் அந்தக் கணினிக்கு வாடகை தர வேண்டியதில்லை.

இதைத் தெரிந்துகொண்ட வில்லியம் யோசித்தான், ‘பிழைகள் தாமே வரும்வரை காத்திருக்க வேண்டுமா? நாமே உள்ளே நுழைந்து அந்தப் பிழைகளைக் கண்டுபிடித்தால் என்ன?’


இப்படித் தினந்தோறும் பிழைகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், அந்தக் கணினிகளுக்கு வாடகை தர வேண்டியதில்லை. CCCக்குப் பணம் மிச்சம்.

ஆனால், இதனால் வில்லியத்துக்கு என்ன லாபம்?

பிழையைக் கண்டுபிடிக்க நெடுநேரம் கணினி முன்னே உட்கார வேண்டும். இரண்டு, மூன்று பிழைகளைக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டு மீதி நேரமெல்லாம் நிரல் எழுதிப் பழகலாமே.

வில்லியம் சொன்ன யோசனை CCC நிறுவனத்துக்கு மிகவும் பிடித்திருந்தது.அதன் பிறகு, வில்லியம் தொடர்ந்து மணிக்கணக்காகக் கணினிகளைப் பயன்படுத்தி மகிழ்ந்தான். பல தனித்துவமான நிரல்களை எழுதினான்.

பிழைகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் கணினியின்முன் அமர்ந்தாலும், அதன்மூலம் வில்லியம் கற்றுக்கொண்டவை ஏராளம். ஆரம்பத்தில் விளையாட்டாகக் கணினியைப் பயன்படுத்தியவன், சிறிது சிறிதாகப் பயனுள்ள நிரல்களை எழுதத் தொடங்கினான். கணினியைப் பயன்படுத்தி ஏகப்பட்ட விஷயங்களைச் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டான். அது பற்றி நிறையப் படிக்கத் தொடங்கினான்; நண்பர்களுடன் விவாதித்தான்.

இந்த ஆர்வம், வில்லியத்தின் தொழில் முயற்சிகளுக்கு வழிவகுத்தது. கணினியில் நிரல்களை எழுதுவது வெறும் பொழுதுபோக்கல்ல, அதைப் பயன்படுத்திப் பல பயனுள்ள விஷயங்களைச் செய்யலாம், அந்த நிரல்களைத் தேவையுள்ள நிறுவனங்களுக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்று அவன் நிரூபித்தான்.

அதே காலகட்டத்தில், கணினி களுக்கான வன்பொருள் (ஹார்டுவேர்) வசதிகளும் பெரிய அளவில் வளர்ந்தன. இதைப் பயன்படுத்திக்கொண்டு வில்லியம் தன்னுடைய தொழில் முயற்சிகளைச் செம்மையாக்கினான். அதன் மூலம், ‘ஒவ்வொரு மேசையிலும் ஒரு கணினி’ என்ற ஒரு புரட்சிக்கு அவன் முக்கியக் காரணமானான்.

அந்த வில்லியம், நாமெல்லாம் ‘பில் கேட்ஸ்’ என்ற பெயரில் நன்கறிந்த, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர்.

கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பில் கேட்ஸ் நிறையப் பணம் சம்பாதித்தார் என்பது உண்மைதான். ஆனால், காசு சம்பாதிப்பதற்காக அவர் இந்தத் தொழிலுக்கு வரவில்லை. கணினிகளின்மீது அவருக்கிருந்த பேரார்வம்தான் அவரை இங்கே வரவைத்தது. இந்தத் துறையை இன்னும் பெரிய அளவில் வளர்ப்பது எப்படி என்ற கேள்விதான் அவரை முன்னேற்றியது.

‘உனக்குப் பிடித்த ஒரு வேலையைத் தேர்ந்தெடு; அதன்பிறகு நீ வாழ்நாள் முழுக்க வேலைசெய்ய வேண்டியதில்லை’ என்று சொல்வார்கள்; அப்படி இளம் வயதிலேயே மனத்துக்குப் பிடித்த ஒரு வேலையை விரும்பித் தேர்ந்தெடுத்துச் செய்து, அதன்மூலம் புகழும் பணமும் சம்பாதித்து, சமூகத்தின்மீது தாக்கத்தையும் உண்டாக்கிய அபூர்வமான மனிதர் பில் கேட்ஸ்.

(இளமை பாயும்)

தொடர்புக்கு: nchokkan@gmail.com

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல், இலக்கணம், சிறுவர் இலக்கியத் துறைகள் சார்ந்து எழுதிவருகிறார் என். சொக்கன். வாழ்க்கை வரலாறு, பழந்தமிழ் இலக்கியம் பற்றி குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியிருக்கிறார். பெங்களூருவில் குடும்பத்துடன் வசிக்கும் சொக்கன், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கணினிப் பொறியாளர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024