Sunday, August 12, 2018

கவனக்குறைவால் நிகழும் குழந்தை மரணங்களில் முதல் குற்றவாளிகள் பெற்றோர்களே!

By RKV | Published on : 11th August 2018 04:06 PM |



இன்று நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்தி...

"குழந்தைகள் நலனுக்காக தனித் துறையை உருவாக்கினால் என்ன? என்று மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது."

இப்படிப்பட்ட கேள்விகள் எழக்காரணம், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கவனக்குறைவு மரணங்கள் மற்றும் விபத்துகளே!

இதோ பண்ருட்டியில் இருந்து வந்த செய்தி ஒன்று மீண்டும் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் பீதியைக் கிளப்பியுள்ளது.

அண்டா நீரில் மூழ்கிய குழந்தை சாவு...

பண்ருட்டி அருகே அண்டா நீரில் மூழ்கிய ஆண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
பண்ருட்டி அருகே உள்ள கட்டமுத்துப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் சிலம்பரசன் (32). புதுவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா (26). இவர்களது குழந்தைகள் மிதுன் (2), லக்ஷன் (7 மாதம்). வியாழக்கிழமை மதியம் வீட்டிலிருந்த அண்டா நீரில் மூழ்கிய நிலையில் லக்ஷன் உயிரிழந்துள்ளார்.
இதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். குழந்தை உயிரிழந்த வேதனையில் வீட்டிலிருந்து வெளியேறிய தாய் ஜெயசித்ராவை காணவில்லையாம். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையிலும் இதே போன்று உயிரிழப்பை ஏற்படுத்திய மற்றொரு சம்பவம்...

ஹஜ் பயணத்திற்கு தாத்தாவை வழியனுப்ப வந்த 2 வயதுக் குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்...

ஹூப்ளியில் வசித்து வரும் மோசிம் என்பவர் தனது தந்தை ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவிருந்ததால் அவரை வழியனுப்புவதற்காக குடும்பத்துடன் இரு நாட்களுக்கு முன் சென்னை வந்திருந்தார். அப்போது தந்தைக்கான பயண ஏற்பாடுகளைக் கவனிக்க அவரை அழைத்துக் கொண்டு தன் 2 வயதுமகன் அப்துல்லாவுடன் ஹஜ் கமிட்டி அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். சுமார் 100 அறைகளைக் கொண்ட அந்த ஹஜ் கமிட்டி அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் மோசிமின் குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். முற்பகல் 11 மணியளவில் தாத்தா பாட்ஷா பயணத்திற்காக விமானநிலையம் சென்றடைந்ததும் தங்களது அறைக்குத் திரும்பிய மோசிம் குடும்பத்தார் அறையை காலி செய்து கொண்டு ஊர் திரும்பத் தயாராக பெட்டிகளை அடுக்கி எடுத்துக்கொண்டு மூன்றாவது மாடியில் இருந்து கீழிறங்கும் முனைப்பில் இருந்திருக்கின்றனர். அப்போது மூன்றாவது மாடி பால்கனியில் ஒரு பெரிய ஷூட்கேஸின் மீது அமர்ந்து வெளியே சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 2 வயதுக் குழந்தை அப்துல்லா தவறிப்போய் அங்கிருந்து கீழே விழுந்திருக்கிறான்.

குழந்தை கீழே விழுவதைக் கண்டதும் பீதியில் உறைந்த அங்கிருந்த மக்கள் உடனடியாகக் குழந்தையை அருகிலிருக்கும் எக்மோர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல உதவியிருக்கிறார்கள். தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அப்துல்லா சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார் எனத் தெரிகிறது.

இந்த மரணம் நிகழ்ந்திருப்பதும் கவனக்குறைவினால் தான். 2 வயதுக் குழந்தைய உயரமான ஷூட்கேஸில் அமர வைத்தது யார் குற்றம்?

பெற்றோர்களின் கவனக்குறைவே பிள்ளைகளின் உயிர் குடிக்கும் எமனாகி விடுவது வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட!

இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நிகந்ததுண்டு.


மூன்றாம் மாடி ஜன்னலருகே படுக்கையறையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தவறி விழுந்து மரணம்...

கடந்தாண்டும் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் மூன்றாம் மாடியில் படுக்கையறை ஜன்னல் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 1 வயதுக் குழந்தை ஒன்று அங்கிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது பரிதாபகரமானது.

இவையெல்லாவற்றையும் விட அதிகக் கண்டனத்துக்குரியது சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 11 வயதுச் சிறுமிக்கு 7 மாதங்களாகத் தொடர்ந்து நடத்தப் பட்டு வந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம். அதில் பிடிபட்டு அடையாளம் ஊர்ஜிதப்படுத்தப் பட்ட குற்றவாளிகள் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான தண்டனை இன்னனும் உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்கதையாவதைக் கண்டு தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளனர். தங்களது கேள்விக்கான காரணங்களாக உச்சநீதிமன்றம் முன்வைத்திருக்கும் காரணங்களும் ஒப்புக் கொள்ளக்கூடியவையே. அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பின்மை குறைய வேண்டுமெனில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் மீதான கவனத்தையும், பொறுப்புணர்வையும் அதிகரித்தே ஆக வேண்டிய சூழல் தற்போது நிலவி வருகிறது. எத்தனை கவனமுடன் இருந்த போதும் சில நேரங்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய விஷயங்களைப்பற்றி அறிந்து கொள்ளும்படியாகவும், உடல் மற்றும் மனவேதனை கொள்ளும்படியானதுமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. அதைத் தடுக்க வேண்டியது முதலில் பெற்றோர்களின் கடமையல்லவா?

அதனால் தான் நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் 15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கும் நபர்களுக்கு, அறுவைச் சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இதனையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு, வெளி நபர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் காரணமாக உள்ளனர். 7 மாதங்களாக ஒரு சிறுமியை பலர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்தச் சிறுமியின் தாயார் என்ன செய்து கொண்டிருந்தார்?
தன் மகளைக் கூட அவர்களால் கவனித்துக் கொள்ள முடியாதா? என்று கேள்வி எழுப்பியதோடு, கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை குறைவின் காரணமாக பெரியவர்களின் அரவணைப்பு இல்லாமல் குழந்தைகள் வளர்கின்றனர். திருமணமானவுடன் தனிக்குடித்தனம் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த முறையில் சில நன்மைகளும், சில பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன என கருத்து தெரிவித்தார்.

மேலும், ஒற்றை பெற்றோர் முறை சமுதாயத்தில் அதிகமாக உருவாகியுள்ளது. விவாகரத்து பெற்றுக் கொண்ட பின்னர், குழந்தை தாய் இல்லாமல் தந்தையிடமோ அல்லது தந்தை இல்லாமல் தாயுடனோ வாழ்வதால் மனதளவில் பாதிக்கப்படுகிறது. தாய், தந்தையுடன் குழந்தை வளர்ந்தால் தான் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.
குழந்தைகள் நலன் கருதி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையை, பெண்கள் நலத் துறை' என்றும் குழந்தைகள் நலத் துறை' என்றும் மத்திய அரசு இரண்டாகப் பிரித்தால் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்து மத்திய அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்கும்படி உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024