எழுத்துப்பிழை, பெயர் மாற்றம் சரி செய்து தராதது போன்ற காரணங்களால், சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானியத்தில் இணைய முடியாமல், தமிழக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.53 கோடி, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர்.நாடு முழுவதும், கடந்த 1ம் தேதி, சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி, வாடிக்கையாளர், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். அதற்கான மானியம், அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். நேரடி மானிய திட்டத்தில் இணைய, துவக்கத்தில் ஆதார் அட்டை இருந்தால், இரண்டு; ஆதார் அட்டை இல்லை என்றால், இரண்டு என, நான்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதை பூர்த்தி செய்து, வங்கிக் கணக்கு புத்தக நகல், கடைசியாக சமையல் காஸ் வாங்கிய ரசீது, ஆதார் அட்டை நகலுடன், ஏஜன்சி மற்றும் வங்கியில், தனித்தனியே வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்கிய விண்ணப்பம், காஸ் ஏஜன்சி மற்றும் வங்கிகளில் உள்ள கம்ப்யூட்டர்களில், ஒன்றாக இணைக்கும் போது, விண்ணப்பதாரர் பெயரில் பிழை இருந்தால், 'விண்ணப்பம் ஏற்கப்படவில்லை' என, அவருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது
.இதுகுறித்து,வாடிக்கையாளர், வங்கி, ஏஜன்சி என, இருதரப்பிலும் கேட்டபோது, காஸ் ரசீதில், வாடிக்கையாளர் பெயர் பிழையாக உள்ளதே, இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.இதை சரி செய்து தருமாறு, வாடிக்கையாளர், ஏஜன்சி ஊழியர்களிடம், கேட்டால், அவ்வாறு செய்யாமல், அவர்கள் மக்களை அலைக்கழித்து வருகின்றனர். மேலும், ஒருவர் பெயரில் உள்ள காஸ் இணைப்பை, மற்றொருவர் பெயருக்கு மாற்ற கோரி, தகுந்தசான்றுகளுடன் அளிக்கப்படும் விண்ணப்பமும்,
எந்த காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், நேரடி மானிய திட்டத்தில், இணைய முடியாமல், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:காஸ் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பத்தில், பெயர், பிழை இல்லாமல் எழுதி தரப்பட்டது. ஏஜன்சி ஊழியர்கள், அதை தவறாக,'டைப்' செய்துள்ளனர். ஆனால், நேரடி மானிய திட்டத்தில் இணைய, குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில், பிழையை சரி செய்து கொடுக்க, ஏஜன்சிகள் மறுக்கின்றன .இவ்வாறு, அவர்கள் கூறினர்
.இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எழுத்துப்பிழை, பெயர் மாற்றம் போன்றவற்றால், நேரடி மானிய திட்ட, வழக்கமான பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால், வரும் 20ம் தேதிக்கு பின், இவை சரி செய்து கொடுக்கப்படும்' என்றார்.- நமது நிருபர்
No comments:
Post a Comment