கான்கிரீட் கூரைப்பகுதியில் நீர்க்கசிவு என்பது பழைய கட்டிடங்களில் மட்டுமல்ல புதுக் கட்டிடங்களிலும் இருக்க வாய்ப்பு உண்டு. என் உறவினர் ஒருவரின் வீட்டில் போர்டிகோவும், வாயிலும் இணையுமிடத்தில் மழை நீர் அதிக அளவில் கசிந்துகொண்டிருந்தது. கசிவு என்பதைவிட கான்கிரீட் தளத்தின் வழியாக நீர் கொட்டியது என்பதுதான் சரி.
போர்டிகோ சுவரோடு இணைக்கப்பட்டுள்ளதே தவிர, மேற்கொண்டு பளு தாங்க ஒரு தூண்கூட இல்லை. தூண் இல்லாத போர்டிகோ சுவரோடு இணையுமிடத்தில் நீர்க்கசிவு என்றால் உறவினர் எந்த அளவுக்கு அச்சமடைந்திருப்பார், கலக்கமடைந்திருப்பார் எனபதைக் கூறவே வேண்டாம். ஏனெனில் அதிக எடையுள்ள போர்டிகோ பெயர்ந்து விழுவது மட்டுமல்ல உயிர்ப்பலிகூட நேரிடலாம்
எறும்புகளின் அணிவகுப்பு
திறமை, அனுபவம் வாய்ந்த மேஸ்திரியை வைத்து ஆய்வு செய்து, போர்டிகோ தளத்தின் மேற்புறத்தில் இருந்த சிமெண்ட் பூச்சு படிவம் முழுவதையும் உளியால் பெயர்த்துவிட்டு, மீண்டும் நன்றாகப் பூச்சு படிவம் (Plastering) செய்தார். போர்டிகோ தளம் முழுவதையும் நிறைக்கும் விதமாக பாத்தி அமைத்து நீரைத்தேக்கி நீராற்றம் (Curing) செய்தார். நீர்க்கசிவு எதுவுமில்லை என்று உறவினரும் மன சமாதானம் அடைந்தார்.
ஆனால் அடுத்த மழையின்போது நீர்க்கசிவு முன்பைவிட அதிகமானதைப் பார்த்து அதிர்ச்சியாகி என்னை அழைத்துக் காட்டினார். என்னாலும் எதுவும் கண்டுபிடிக்கவோ, எதுவும் கூறவோ முடியவில்லை. போர்டிகோவைத் தாண்டி மேலே ஏறி மொட்டை மாடிப் பகுதியில் இதைப் பற்றிப் பேசிக்கொண்டு நின்றோம். அப்போது மழைக்குப் பின் நாம் சாதாரணமாக எங்கும் காணும் எறும்புப் படையெடுப்பு ஒன்று வரிசையாகப் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்தோம்.
தரைப்பகுதியிலிருந்து, சுவர் வழியாக மேலே ஏறி போர்டிகோ பகுதியையும் தாண்டி மொட்டை மாடித்தரையில் சுமார் 10 அடி தூரம் சென்று கைப்பிடிச் சுவரை ஒட்டிய ஓரிடத்தில் மாடித்தரையின் உள்ளே புகுந்து கொண்டும், வெளிவந்து கொண்டுமிருந்தன. அந்த இடத்தைப் புறங்கை விரலால் தட்டிப் பார்த்ததில் தரையின் உட்புறம் இறுக்கமாக இல்லாமல் வெற்றிடமாக இருக்கும் சத்தம் கேட்டது.
அங்கு சிமெண்ட் பூச்சைப் பெயர்த்துவிட்டுப் பார்த்தால் உள்ளே சிறிய சுரங்கப் பாதையே அமைக்கப்பட்டிருந்தது. எறும்புகள் இவ்விதம் செய்வது, உணவைச் சேமிக்கவும், வெய்யில் படாமல் தப்பித்துக் குளிர்ச்சியான இடத்தில் வசிப்பதற்கும்தான்.
எறும்புகள் தந்த ஆலோசனை
அங்கு முன்பு இருந்த பூச்சில், சிமெண்ட் கலவை நேர்த்தியாக இல்லை, நீராற்றம் சரிவரச் செய்யப்படவில்லை. ஆகையால் மேலே சொன்ன குறைபாடு நிகழ்ந்துள்ளதைக் கண்டுபிடித்தோம். ஒரே ஒரு சட்டி சிமென்ட் கலவையைக் கொண்டு எங்களாலேயே சுலபமாகக் குறைபாடு சரிசெய்யப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட மூவாயிரம் ருபாய் செலவுசெய்து மூன்று ஆட்களைக்கொண்டு ஏற்கனவே செய்யப்பட்ட வேலை விழலுக்கு இறைத்த நீர்போல ஆனது.
இன்னுமொரு பிரச்சினையைக்கூட எறும்புகள் நமக்கு எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும். வீட்டில் நிலைவாசல் படி, மர ஜன்னல்கள், மரத்தினாலான கப்போர்டுகளை நம் கண்களில் படாமல்; அடிப்பகுதி வழியாகவும் மற்றும் பின்புறமாகவும் கரையான்கள் அரிக்கத் தொடங்கும். கூடவே மண்ணால் புற்று அமைக்கும்.
எறும்புகள் தொடக்கத்திலேயே கரையான்களை எதிர்த்துப் போரிட்டுப் புற்றுகளைக் கலைத்து மண்ணை வெளியேற்றும். கரையான்கள் கை ஓங்கும்வரை போரிடும். குறைந்த அளவில் மண் வெளிப்படும்போதே பார்க்க நேர்ந்தால் உடனே கரையான் தடுப்பு முறைகளைக் கையாண்டு கரையான் தாக்குதல்களை முறியடித்துச் சேதங்களைத் தவிர்க்கலாம்.
எறும்புகளைப் போற்றுவோம்
கட்டிடத்தின் வெளிப்புறத் தரையில் மண் அரிப்பு ஏற்படுவது, சிமெண்ட் கெட்டிப்படாமல் நீர்க்கசிவு உண்டாவது, கரையான் தாக்குதல்கள் போன்ற, நம் கண்களுக்குச் சுலபமாகப் புலப்படாத - கட்டிடத்துக்கு ஊறுவிளைவிக்கும் கடுமையான பிரச்சினைகளைக்கூட, நமக்குச் சர்வ சாதாரணமாக எடுத்துக்காட்டும் எறும்புகளைச் சிறந்த பொறியியல் நிபுணர்கள் என்றுகூடச் சொல்லலாம். எறும்புகளின் பொறியியல் பார்வையைக்கண்டு வியந்தோம்.
இனிமேல் மருந்து போட்டுக் கொல்லாமல், விரட்டாமல் நம் வீட்டு வாசல்களில் அரிசி மாவுக் கோலம் போட்டு நம் தொழில்நுட்ப நண்பர்களை, நம் பாரம்பரிய கலாச்சார முறைப்படி வரவேற்போம். எறும்பு தின்றால் கண் தெரியும் என்ற பழமொழி எவ்வளவு அர்த்தம் பொதிந்தது! மண்புழுவை விவசாயிகளின் நண்பன் என்றால் எறும்பைக் கட்டிடங்களின் நண்பன் என உறுதியாகச் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment