Sunday, January 11, 2015

பெண்களின் கருமுட்டையைச் சேமிக்க புதிய சலுகைகள்: கார்ப்பரேட் நிறுவனங்கள் தருவது வரமா சாபமா?...by இந்துஜா ரகுநாதன்

Return to frontpage

தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் கரு முட்டையை உறைய வைக்கும் மருத்துவ செலவை முற்றிலும் தாமே ஏற்றுக்கொள்வோம் என்ற சலுகையை பிரபல கணிகனி மற்றும் இணையதள நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் ஃபேஸ்புக் கடந்த மாதம் அறிவிததுள்ளன. இச்செய்தி உலகம் முழுவதும் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அலுவலகப் பணியின்மீதுள்ள ஆர்வத்தினாலும் வேலைச்சுமையாளும் இளம்பெண்கள் தாய்மையை தவறவிடும் அவலம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதனைத் தவிர்க்கவே இந்த அறிவிப்பு என்று இந்த நிறுவனங்கள் பெருமையோடு கூறிவருகின்றன. உண்மையில் இச்சலுகை பெண்களுக்கு வரமா சாபமா?

கருமுட்டையை உறைய வைப்பதற்காக சுமார் 20,000 டாலர்கள் வரை இந்நிறுவனங்கள் செலவிடத் தயாராக உள்ளன. இவ்வளவு செலவு செய்யும் இந்நிறுவனங்கள் அளிக்கக் கூடிய இச்சலுகை அவர்களது லாபத்திற்காகத்தான் என்பது ஒருவகையில் உண்மையென்றாலும் பணியின் உச்சத்தை அடைய விரும்பும் பல பெண்களுக்கு வரப் பிரசாதம் என்றும் கூறப்படுகிறது.

கருமுட்டை சேமிப்பு / வங்கி என்றால் என்ன?

பெண்களுக்கு கரு உருவாக முக்கிய பங்கு வகிக்க் கூடியவை முட்டைகள்தான். இது செழுமையாக இருக்கும்போது கர்ப்பம் உண்டாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆனால் பெண்ணின் வயது கூடக் கூட முட்டையின் செழுமை குறையத் தொடங்குகிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பின் பெண் கருத்தரிப்பது மிகவும் கடினம். பொதுவாக 20-30 வயது வரை கருமுட்டை செழுமையுடன் இருப்பதால் அவ்வயது பெண்கள் எளிதில் கர்ப்பம் அடைந்துவிடுகிறார்கள்.

பெண்கள் தங்களின் மேல்படிப்பு, பணி, திருமணத்தில் தாமதம் பேன்ற காரணங்களால் கர்ப்பம் அடையும் சூழ்நிலையில் இல்லாதவர்கள், தகுந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி தன் செழுமையான கரு முட்டைகளை வெளியே எடுத்து அதற்காக பிரத்யேகமாக உள்ள மையங்களில் உறைய வைத்து சேமித்து வைக்கமுடியும். சுமார் 10 ஆண்டுகள் வரை இந்த கருமுட்டைகளை சேமித்துவைத்து தேவையான போது அப்பெண்ணின் கருப்பையில் மீண்டும் செலுத்தி கருவுறச் செய்யமுடியும்.

வரமா? சாபமா?

உலகெங்கும் நடைபெற்ற ஆய்வுகளின் படி, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியைத் தொடங்கும் ஆண், பெண் இருபாலாரும் ஒரே ஊதிய விகிதத்தில்தான் பணியமர்த்தப் படுகின்றனர். அதாவது 18 வயதில் பணியைத் தொடங்கும் இருசாராரும் ஒரே சம்பளத்தில் பயணித்தாலும், பெண்களின் வயது ஏற ஏற நிறைய தடைக்கற்கள் ஏற்படுகின்றன.

திருமணம், குழந்தைப்பேறு ஆகியவற்றின்போது எடுக்கும் ஓய்வினால் அவர்களுடைய பணி அனுபவம் தடைப்பட்டு மீண்டும் பணிக்கு திரும்பும்போது பதவிஉயர்வு பறிக்கப்பட்டுவிடுகிறது. சம்பளமும் பழைய இடத்திற்கு போய்விடுகிறது. 40 வயதில் பணிபுரியும் பெண்களின் வருமானம், அவருடன் பணியில் சேர்ந்த ஆணின் மொத்த வருமானத்தில் 25% இழப்பு ஏற்பட்டு விடுகிறது.

இந்நிலையில் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி அந்தஸ்த்தை ஒரு பெண் அடைவது வெறும் கனவுதான். இதனால் முப்பதுகளில் உள்ள ஒரு பெண் பதவி உயர்வை முன்னிட்டு தனது பெருமைக்குரிய குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடுகிறாள். இதன் காரணமாகவே, கார்ப்பரேட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ள கருமுட்டை சேமிப்பு சலுகை திட்டம் வரம்தான் என்கின்றனர் பலர். தனது கரு முட்டையைச் சேமித்து வைத்துக்கொண்டால் போதும் அப்பெண் தனக்குத் தேவையானபோது தாய்மை அந்தஸ்தைப் பெறமுடியும். மேலும் இதை வரவேற்கும் பெண்கள் குடும்பம், அலுவலகப்பணி என இரு குதிரைகளிலும் பயணித்து வெற்றி இலக்கைத் தட்டிச் செல்லலாம் என்கிறார்கள் அவர்கள்.

சர்ச்சைகள்

ஒரு நிறுவனம் இது போன்ற சலுகையை அறிவிக்கும்போது அது மறைமுகமாக பெண் ஊழியர்களை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதாக எதிர்ப்பு வலுத்துவருகிறது. கருமுட்டை சேமிப்பு செலவை நிறுவனமே ஏற்பதால் அவர்கள் கூறும் பொழுதில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள அழுத்தங்கள் தர அதிக வாய்ப்புள்ளது என்பது இவர்கள் வாதம்.

ஒரு பெண் பணியில் சேரும்போதே இத்தனை ஆண்டுகள் திருமணம் கூடாது, குழந்தைபேறும் கூடாது என்று பல நிறுவன மனிதவள மேம்பாடு அதிகாரிகள் கறாராக காண்டிராக்டில் கையெழுத்து வாங்கி கொண்டுதான் பணிநியமன உத்தரவைத் தருகின்றனர். அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஒரு பெண் தான் சுயத்தோடு தன் முடிவை எடுக்க இது தடைக்கல்லாக இருக்கும் என்ற அச்ச உணர்வையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மேலும் எந்த வயதில் குழந்தை பெற்றுகொண்டாலும் அதற்குரிய பணி ஓய்வும், இடைவேளியும் ஏற்படுவதை தவிர்க்கமுடியாத நிலையில் கர்ப்பத்தை தள்ளிபோடுவது நிறுவனங்களுக்கு மட்டும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

குழந்தை வளர்ப்பில் சிக்கல்கள்

30 வயதுக்கு மேல் கருமுட்டையின் செழுமை குறையத் துவங்குவதால் கருவுருவது சற்று சிரமம் ஆகிவிடுவதாக பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றான. முட்டையின் செழுமையைக் காக்க அதை சேமித்துவிட்டு பின்னர் காலதாமதமாக அதை உபயோகப்படுத்துவதால் குழந்தைப்பேறு 100% உறுதி என்று சொல்லிவிட முடியாது.

30 வயதை கடக்கும் பெண்கள் பலருக்கு, மன அழுத்த்தினால ஹார்மோன் கோளாறுகள், கருப்பையில் கட்டி, வேறு சில எதிர்பாராத உடல் ரீதியான பிரச்சனைகள் உண்டானால் செழுமையான கருமுட்டை இருந்தும் குழந்தைப்பேறு அடையும் வாய்ப்பு அரிதாகிவிடும் அபாயமும் உள்ளது. இதை தவிர உரிய வயதில் குழந்தை பெற்றுக கொள்வதால் உடலளவிலும், மனதளவிலும் ஒரு பெண்ணால் தன் குழந்தைக்கு தேவையான அரவணைப்பைத் தரமுடியும். காலம் கடந்து பெற்றுக் கொள்வதால் வயது காரணமாக குழந்தையைப் பெற உடல் வலிமையின்றி மிகவும் பலவீனமாகவே இருக்கும் நிலை உருவாகும்.

பெண்கள் எதிர்பார்க்கும் தேவையான சலுகைகள்

பெண்கள் கணினி, ஐடி நிறுவனங்களில் சாதனைகளை எட்டவேண்டும், உச்சத்தை அடையவேண்டும் என்று உண்மையிலேயே கார்ப்பரேட்டுகள் நினைக்குமானால் அவர்கள் பெண்களுக்குச் செய்துதர வேண்டிய சலுகைகள் ஏராளமாக உள்ளன. திருமணம், குழந்தைக்குப் பிறகு, பெண்களின் பணி இடைவேளையைத் தடுக்க ஒரு சகஜநிலையை அமல்படுத்த வேண்டும்.

குழந்தை பிறந்து 3 அல்லது 6 மாத ஓய்வுக்கு பின் திரும்பும் பெண்களுக்கு வேலைநேரத்தில் சலுகை, அலுவலத்துக்குள்ளேயே குழந்தை பராமரிப்பு மையம், தேவையான நேரம் குழந்தையைப் பார்க்க அனுமதி, எல்லாநாட்களிலும் இல்லையென்றாலும் சிலநாட்களில் வீட்டிலிருந்தே பணிகளை முடிக்கத்தக்க வாய்ப்புச்சூழல்கள், ஓய்வு நாளை கணக்கிடாத நல்ல சம்பளம் ஆகியவற்றை வழங்க முன்வரவேண்டும்.

எந்த ஒரு பெண்ணும் கொடுத்த பணியை சிறப்பாகவே முடித்துவிடும் வல்லமை படைத்தவள். இதைக் கருத்தில்கொள்ளாமல் அறிவிக்கப்பட்டுள்ள இச்சலுகையால் வீட்டில் குழப்பம், சண்டை, மன உளைச்சல், கவலை என்ற நிலையை உருவாக்கும். குடும்பம் என்ற கலாச்சாரக்கட்டுக்கோப்பு மேலும் மேலும் சிக்கலாகும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்துஜா ரகுநாதன் - தொடர்புக்கு induja.v@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024