Sunday, April 22, 2018

மனசு போல வாழ்க்கை- 20: கற்கண்டுச் சுவைதானே கல்வி!

Published : 04 Aug 2015 12:15 IST


டாக்டர். ஆர். கார்த்திகேயன்




படிப்பது மாணவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது, படிப்பதை நினைவில் வைத்துக் கொள்வதும் அதைச் சிறப்பாக தேர்வில் எழுதுவதும்தான்.

அறிவுத்திறன் அபாரமாக உள்ள பல பிள்ளைகள்கூட தேர்வுகளில் சிறப்பாகச் செய்வதில்லை. பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தவே சிரமப்படுவதாகக் குறைபடுகின்றனர். என்ன படித்தாலும் தேர்வு நேரத்தில் பதற்றப்படுவதாகச் சொல்லும் மாணவர்களை நிறைய இருக்கிறார்கள். ஒரு தேர்வில் சற்று மதிப்பெண்கள் குறைந்தாலே வாழ்க்கையே முடிந்துவிட்டதாக மாணவர்கள் நினைப்பதும் தெரிகிறது. பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் வேறு அந்த மாதிரி நினைக்க வைக்கின்றனர். மாணவர்கள் சிறப்பாகப் படிக்க, தேர்வெழுத நம் நேர்மறை சிந்தனை முறையான அஃபர்மேஷனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்!

உளவியல் வன்முறை

இன்று மாணவர்களைப் பந்தயக் குதிரைகள் போல ஆக்கிக்கொண்டிருக்கிறோம். பெற்றோரின் பெருமை காக்கவும், பள்ளியின் ‘ரிசல்ட்’ காக்கவும், நண்பர்கள் மத்தியில் மானம் காக்கவும் அவர்கள் தொடர்ந்து மன உளைச்சலில் துடிக்கிறார்கள். சுதந்திரமான போக்கில் படிக்கும், தேர்வெழுதும் நிலை இன்று இல்லை. அவர்கள் சுய மதிப்பு தொடர்ந்து காயப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பல பள்ளிகளில் பேதப்படுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் தண்டிப்பதையும் படிப்பதற்கான கிரியா ஊக்கிகளாக பயன்படுத்தி வருகிறார்கள். மின்சாரக் கம்பிக்குப் பயந்து சொன்னதைச் செய்யும் சர்க்கஸ் மிருகம் போலத் தண்டனையிலிருந்தும் அவமானத்திலிருந்தும் தப்பிக்க மாணவர்கள் படிக்கிறார்கள். மதிப்பெண்களுக்குத் தக்கவாறு செக் ஷன் பிரிப்பது, பெஞ்சுகள் அமைப்பது, மரியாதை கொடுப்பது எனச் செய்வதாகப் பல பெற்றோர்கள் புகார் கொடுக்கிறார்கள். உடல்ரீதியான தாக்குதல்கள் வகுப்பறைகளில் குறைந்திருந்தாலும், உளவியல் வன்முறைக்குக் குறைவில்லை.

பொய்ச் சமூகங்கள்

பல ஆசிரியர்கள், படிக்காத மாணவர்கள் என்றால் அவர்களை மட்டமாக நடத்துகிறார்கள். பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்களில் பெற்றோர்கள் கூனிக் குறுகி நிற்பதைப் பார்க்கிறோம். தான் ஒன்றுக்கும் லாயக்கில்லை என்ற எண்ணத்தை ஒரு மாணவனுக்கு மிக எளிமையாக ஒரு ஆசிரியரால் ஏற்படுத்த முடியும். அவ்வளவு வலிமையான ஆயுதம் ஆசிரியர்களிடம் உள்ளது. திட்டுவதை விடப் புறக்கணித்தல் மிக மோசமானது. ஒப்பிட்டுப் பேசுவது, படிக்காததால் பெற்றோருக்கு அவமானம் எனச் சொல்லி மறுக வைப்பது எனும் அணுகுமுறைகள் மாணவர்கள் மன நிலையை முழுவதுமாக எதிர்மறையாகத் திருப்பி விடுகின்றன.

தொழில்நுட்பத்தால் கவனக்குறைவு இன்று எல்லா வயதினருக்கும் வந்துவிட்டது. ஸ்மார்ட் ஃபோனைக் கைக்குழந்தையைப் பார்ப்பது போலச் சதா அதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். விக்கினால் கூட வாட்ஸ் அப்பில் வீடியோ எடுத்து அனுப்பிவிடுகிறார்கள். ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் இன்ஸ்டாகிராமும் பல பொய் சமூகங்களை வடிவமைத்துவருகின்றன. டி.வியில் சதா சர்வ காலமும் ஏதோ ஒரு சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது. தேர்வு நேரத்தில்தான் 20-20 விளையாடுவார்கள் அல்லது மோட்டோ ஜி.பி. ரேஸில் பைக் ஓட்டுகிறார்கள். படிப்பிலிருந்து கவனத்தை சிதற வைக்கக் கோடிக் காரணங்கள் உண்டு. நம் காலத்தில் இவை இருந்ததில்லை. ஆதலால் ஆதரவோடும் புரிதலோடும் நம் பிள்ளைகளை அணுகுவது முக்கியம்.

ஆசையோடு படித்தல் என்பது மிக முக்கியம். ஆனால் பிடிக்காத பாடம் அல்லது பிடிக்காத குரூப் எனும்போது ஆசையை விடப் பயமும் வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. கணக்குப் படிக்காவிட்டால் குடி முழுகிப் போய்விடும் என்று சொல்லி வராத பாடத்தில் போட்டு வாழ்க்கையைக் கெடுத்த பல பெற்றோர்களை எனக்குத் தெரியும்.

சம்மதிக்காமல்

கற்றல் இங்கு அயர்ச்சியையும் மன உளைச்சலையும் தருவதால் மாணவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் குறைந்து தோல்வி பயமும் மன நெருக்கடியும் இயல்பாக வந்து விடுகின்றன. இந்தப் பின்னணியில் தான் மாணவர்களின் தற்கொலை முயற்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு என் நேரடி விண்ணப்பம் இதுதான்: உங்கள் வாழ்க்கையில் கல்வி ஒரு அங்கம். அதை ரசித்துச் செய்ய முடியும். அதன் வெற்றி தோல்விகள் நீங்கள் நினைக்கும் அளவுக்கு வாழ்க்கையை மாற்றிப் போடாது. உங்களுக்கான படிப்பை, வேலையை, துறையைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள். உங்களுக்கு யாரும் போட்டி அல்ல. நீங்கள் சம்மதிக்காமல் யாரும் உங்களை அவமானப்படுத்த முடியாது. உங்களால் எதையும் செய்ய முடியும். அதை நீங்கள் எக்காலத்திலும் மறக்கக் கூடாது.

பயமில்லாமல் ஆசையோடு எந்தக் கட்டாயமுமின்றிப் படிப்பது காலத்துக்கும் நிலைக்கும். புரிந்து படிக்கவும் உதவும். படித்ததைச் செயல்படுத்தவும் நம்பிக்கை தரும். பிறருக்காகப் படிப்பதை விடுத்துத் தனக்காகப் படிக்கையில் ஊக்கம் தானாக வரும்.

படிப்பது தியானம் போல. அது உள்ளுக்குள் நிகழும் ரசவாதம். அதை உணர்ந்து ரசித்து அனுபவித்துச் செய்ய முடியும்.

விடுமுறை நாளில் படுத்தவாறு கையில் காபியுடன் பிடித்த கதைப் புத்தகத்தை ஆழ்ந்து படிப்பது போலப் பாடப் புத்தகத்தையும் மனம் லயித்துப் படிக்க முடியும்.

‘கற்பது கல்லை உடைப்பது போலல்ல; கற்கண்டு சுவைப்பது போல’ என்பதை மனம் நம்பும்போது கற்றல் அனுபவம் ஒரு சுக அனுபவமே!

மாணவர்கள் கீழ்க்கண்ட அஃபர்மேஷன்களை பயன்படுத்தலாம்:

“நான் முழு ஆர்வத்துடனும் கவனத்துடனும் கற்கிறேன்.”

“நான் என் மீது பூரண சுய மதிப்பும் நம்பிக்கையும் கொள்கிறேன்.”

“நான் எல்லாத் தேர்வுகளிலும் என் அதிகபட்சத் திறமையை வெளிப்படுத்துகிறேன்.”

“நான் விரும்பிய துறையை ஏற்று, அதில் சிறப்பாகக் கற்கிறேன்.”

“நான் படிப்பது தொடர்பான அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளியேற்றுகிறேன்.”

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged

 'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged   Wednesday 25 September, 2024 | ...