Sunday, April 22, 2018

குருட்டு' பக்தி!

- தென்கச்சி சுவாமிநாதன்

 
. கர்ணனின் கதையை மாணவர்களிடையே விளக்கிக் கொண்டிருந்தார் அந்த ஆசிரியர்.

''தன் குருநாதரின் மேல் அதீத பக்தி கொண்டிருந்தவன் கர்ணன். ஒருமுறை, அவனின் ஆசிரியரான பரசுராமன், சற்று நேரம் களைப்பாற எண்ணினார். இதை உணர்ந்த கர்ணன், அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தான். உடனே, அவனது ஒரு தொடையில் தலை வைத்துப் படுத்த பரசுராமன் சற்று நேரத்தில் தூங்கிப் போனார்.

இந்த நிலையில், கர்ணனின் மற்றொரு தொடையின் மீது வந்து அமர்ந்த காட்டு வண்டு ஒன்று, அவன் தொடையைத் துளைக்க ஆரம்பித்தது. ரத்தம் பொங்கியது. பல்லைக் கடித்தபடி வலியைப் பொறுத்துக் கொண்டான் கர்ணன். சிறிது அசைந்தாலும் குருநாதரின் தூக்கம் கெட்டு விடுமே என்ற எண்ணம் அவனுக்கு.

ஆம்! ஆசிரியர் அமைதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காக, தனக்கு ஏற்பட்ட அந்த சித்ரவதையை தாங்கிக் கொண்டான் அந்த மாணவன்!''

- கதையைக் கூறி முடித்த ஆசிரியர், ''என் அருமை மாணவர்களே... நீங்களும் கர்ணனைப் போன்று உங்கள் ஆசிரியரின் மீது பக்தி செலுத்த வேண்டும். செய்வீர்களா?'' என்று கேட்டார்.

''நிச்சயம் செய்வோம்!'' - ஒட்டு மொத்த மாணவர்களும் உரக்கக் குரல் கொடுத்தனர்.

மகிழ்ச்சியடைந்த ஆசிரியர் தொடர்ந்தார்...

''சரி... நானும் பரசுராமனைப்போல் உங்களின் தொடையில் தலை வைத்துப் படுத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, கர்ணனுக்கு நிகழ்ந்தது போலவே உங்கள் தொடையையும் வண்டு துளைத்தால் என்ன செய்வீர்கள்?''

மாணவர்கள் பதில் சொன்னார்கள் ''நாங்களும் அவனைப் போலவே பல்லைக் கடிச்சிக்கிட்டு வலியைப் பொறுத்துக்குவோம்!''

உற்சாகம் அடைந்த ஆசிரியர் ஆர்வத்துடன் கேட்டார் ''ஏன் அப்படிச் செய்யணும்?''

மாணவர்கள் சொன்னார்கள்... ''நீங்க முழிச்சிக்கிட்டா பாடம் நடத்த ஆரம்பிச்சுடுவீங்களே... அதான்!''

- இந்த குருபக்தியை போன்றுதான் இன்றைக்கு சிலரது தெய்வ பக்தியும் இருக்கிறது.

ஆண்டவன் பேரைச் சொல்லி தங்களை வருத்திக் கொள்கிறார்கள். அதன் நோக்கம், 'இதை விட பெரிய வருத்தம் ஏதும் வந்துவிடக் கூடாதே' என்பதுதான்.

அழகான இயற்கைக் காட்சியைப் பார்க்கிறோம்.அதன்மேல் ஒரு காதல் பிறக்கிறது. உடனே, அந்த இயற்கைக் காட்சியிடம் இருந்து எதையாவது நாம் எதிர்பார்க்கிறோமா? அல்லது அதுதான் நம்மிடமிருந்து எதையாவது எதிர்பார்க்கிறதா?

அதுமாதிரிதான் கடவுளையும் நாம் நேசிக்க வேண்டும். நம்மால் அவரை நேசிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை வரவேண்டும். அதற்குப் பெயர்தான் பக்தி என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். கடவுளே உங்கள் தொடையில் தலை வைத்துப் படுத்தாலும், அவருக்காக நீங்கள் எந்தத் துன்பத்தையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை!

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...