Sunday, April 1, 2018


வேலூர் விஐடி தின விழா: 4,187 மாணவர்களுக்கு ரூ.12 கோடி உதவித் தொகை
By DIN | Published on : 31st March 2018 02:23 AM |

சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.ரட்சணாவுக்கு தங்கப்பதக்கம், விருது வழங்கி கௌரவித்த விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக தின விழாவில் 4,187 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 12.03 கோடி வழங்கப்பட்டது. மேலும், சிறந்த மாணவிக்கான வேந்தரின் தங்கப்பதக்கம் மாணவி கே.ரட்சணாவுக்கு வழங்கப்பட்டது.

விஐடி பல்கலைக்கழக தினம், விளையாட்டு விழா விஐடி அண்ணா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தலைமை வகித்து, பல்வேறு பிரிவுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், ரொக்க விருதுகளை வழங்கி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:

விஐடி மாணவர்கள் கல்வி, நன்னடத்தை, ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் சாதனை படைத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயிலும் விஐடி வளாகம் தூய்மை வளாகமாக விளங்கி வருகிறது. இதற்கு தூய்மை திட்டத்தில் மாணவர்களுக்கு உள்ள ஆர்வமும், அர்ப்பணிப்புமே காரணமாகும். விஐடியில் செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல், கற்பித்தல் திட்டத்தால் பேராசிரியர்கள், மாணவர்களிடையே ஆராய்ச்சிப் பணிகளில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆராய்ச்சி இதழ்களை வெளியிடுவதில் நாட்டில் விஐடி முதலிடத்தில் உள்ளது.

வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. நாட்டில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை 24 சதவீதமாக உள்ளது. உயர் கல்வி படிக்க தகுதியுள்ள 14 கோடி பேரில் 3.5 சதவீதத்தினருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இதற்கு, தொழில் நிறுவனங்களும் ஆதரவாக இருக்க வேண்டும்.
மேலும், நாட்டில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இதற்கான பரிந்துரைகளை இந்திய கல்வி மேம்பாட்டு சங்கம் மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. சங்கத்தின் பரிந்துரைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இன்டஸ் இந்த் வங்கியின் தலைவர் ஆர்.சேஷசாயி பேசியதாவது:
மாணவர்களிடையே ஆழமாக கற்பதற்கான ஆர்வம் வேண்டும். அதிலும் கண்டுபிடிப்புக்காக கற்கும் போதுதான் மகிழ்ச்சி உருவாகும். அதேபோல், மாணவர்கள் தங்களை படைப்பாளிகளாக உணர வேண்டும். அதற்கு புதிய எண்ணங்களை உருவாக்கவும், அந்த எண்ணங்களுக்குத் தீர்வு காணவும் வேண்டும். வளரும் நாடான இந்தியா வளர்ந்த நாடாக மாற தொழில் முனைவோர்கள் அதிகளவில் உருவாக வேண்டும். தொழில் முனைவோரை உருவாக்குவதற்காக மாணவர்களின் கற்றல் முறை இருக்க வேண்டும். அத்தகைய கற்றலுக்கு வயது என்பது இல்லை. தொடர்ந்து கற்றல் இருக்க வேண்டும் என்றார் அவர்.

தொடர்ந்து டிஎக்ஸ்சி டெக்னாலஜிஸ் நிறுவன மூத்த துணைத் தலைவர் சாம்சன் டேவிட் கெளரவ விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

விழாவில், 4,187 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 12.03 கோடியும், விஐடி வேந்தரின் சிறந்த மாணவிக்கான தங்கப்பதக்கம் கே.ரட்சணாவுக்கும், சிடிஎஸ் நிறுவன விருது மாணவர் அபிஜீத் தாகூருக்கும், டிசிஎஸ் நிறுவன விருது மாணவர் ஷிவோம் பகுகுணாவுக்கும் வழங்கப்பட்டது. மாணவர் பேரவை நிர்வாகி யானிக் அந்தாவோ வரவேற்றார். விஐடி ஆண்டறிக்கையை துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், விளையாட்டு ஆண்டறிக்கையை பேராசிரியர் ரூபன் குமார், மாணவர் பேரவை ஆண்டறிக்கையை மாணவி ஐஸ்வரியா லட்சுமி ஆகியோர் வாசித்தனர்.

இதில், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்தியநாராயணன், மாணவர் நலன் இயக்குநர் அமித் கே.மகேந்திரகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...