Sunday, April 8, 2018

மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு

Added : ஏப் 08, 2018 02:13

சென்னை:மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள், இரட்டை இருப்பிட சான்றிதழ் அடிப்படையில், வேறு மாநிலங்களில் விண்ணப்பித்துள்ளனரா என்பதை சரிபார்த்து அறிக்கை அளிக்கும்படி, மத்திய அரசு வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பில், 2017 - 18ம் ஆண்டில், இரட்டை இருப்பிட சான்றிதழ் அளித்து மாணவர்கள் சேர்ந்திருப்பதால், சேர்க்கையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுக்களில், 'கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்றிதழ் பெற்று, இங்குள்ள மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர். 

'அதனால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இங்குள்ள அரசு கல்லுாரி களில் இடம் கிடைக்காமல் போய் விடுகிறது' என, கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை, நீதிபதி, கிருபாகரன் விசாரித்தார். வெளிமாநிலங்களில் இருந்து விண்ணப்பித்த, 300 மாணவர்களின் ஆவணங்கள் பரிசீலிக்கப் பட்டன; விண்ணப்பங்களை, அதிகாரிகள் முன்னிலையில், வழக்கறிஞர்கள் சரிபார்த்தனர். 

இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று, மருத்துவப் படிப்பில், பலர் சேர்ந்திருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி, கிருபாகரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், சிங்காரவேலன், வழக்கறிஞர், கே.சக்திவேல், மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல், கார்த்திகேயன், தமிழக அரசு சார்பில், சிறப்பு பிளீடர், பாப்பையா ஆஜராகினர்.

இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று, 2017ல், 1,200க்கும் மேற்பட்டோர், மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில், மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள், இரட்டை இருப்பிட சான்றிதழ் அடிப்படையில், வேறு மாநிலங்களில் விண்ணப்பித்துள்ளனரா என்பதை சரிபார்த்து, அறிக்கை அளிக்கும்படி, மத்திய அரசு வழக்கறிஞருக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.







No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024