Saturday, April 14, 2018

புத்தாண்டே வருக! புதுவாழ்வு தருக!

Added : ஏப் 14, 2018 02:03



விளம்பி ஆண்டின் ராஜா சூரியன். சூரியனின் அதிதேவதையான சிவபெருமானை போற்றும் விதத்தில் இந்த வழிபாடு தரப்பட்டுள்ளது. இதை படித்தால் வாழ்வில் வெற்றி உண்டாகும்.

* உலகாளும் சிவனே! நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திரனை முடியில் அணிந்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடாமுடி தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! நன்மைகளை வாரி வழங்குபவனே! எங்களை காத்தருள்வாயாக.

* பார்வதியின் நாயகனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலை மேல் தாங்கியவனே! பக்தர் மேல் அன்பு கொண்டவனே! பயத்தைப் போக்குவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.

* ஜோதியாய் ஒளிர்பவனே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் நிரந்தரமாக குடி கொள்ள வருவாயாக.

* ஐந்து முகம் கொண்டவனே! புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! பிறவிக்கடலில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! நீலகண்டனே! கைலாய நாதனே! பிரபஞ்சத்தை இயக்குபவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத வரம் தருவாயாக.

* புண்ணியம் செய்தவர்களுக்கு அருள்புரிபவனே! திரிசூலம் ஏந்தியவனே! மானும், மழு என்னும் கோடரியும் கொண்டவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்கு பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், உடல்நலத்தையும் தந்தருள்வாயாக.

* தேவாதி தேவனே! மகாதேவனே! விருப்பத்தை நிறைவேற்றுபவனே! சங்கரி, மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் பிரணவ மந்திரத்திற்கு உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழ் தந்தருள்வாயாக.

* திரிபுரங்களை எரித்தவனே! அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பியவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டியத்தின் நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய தீய குணங்களை நீக்குவாயாக.

* கிரக தோஷம் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினைகளை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! உலகாளும் பரம்பொருளே! சிவசங்கரனே! நாங்கள் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் வந்து காத்தருள்வாயாக.

* இன்பத்தின் எல்லையே! இகபர சவுபாக்கியம் தருபவனே! பாவம் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்தவனே! அண்ணாமலை வாழும் ஈசனே! சரணடைந்தவரைக் காப்பவனே! நல்லவர் நெஞ்சில் வாழ்பவனே! மனநிறைவை தந்தருள்வாய்.

* மங்கள குணம் உடையவனே! பயம் போக்குபவனே! பூத கணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த வெண்ணிற காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! பரமேஸ்வரனே! இந்த விளம்பி புத்தாண்டில் எங்கள் வீடும், நாடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.

32வது ஆண்டு :

தமிழ் ஆண்டுகள் அறுபதில் 32வது ஆண்டு விளம்பி ஆண்டு. இதன் பலன் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.நவக்கிரகங்களில் இந்த ஆண்டுக்குரிய ராஜாவாக சூரியனும், மந்திரியாக சனீஸ்வரரும் ஆட்சி செய்கின்றனர். நல்ல மழை பொழியும். தங்கம், வெள்ளி விலை குறையும். கோயில்களில் திருவிழா விமரிசையாக நடந்தேறும். மக்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வர்.. எல்லா உயிர்களுக்கும் குறைவில்லாத நன்மை உண்டாகும்.

வெற்றி மேல் வெற்றி :

புத்தாண்டின் ராஜாவாக சூரியன் இருக்கிறார். அவருக்கு அதிதேவதையான சிவபெருமானை ஆண்டு முழுவதும் ஞாயிற்றுக்கிழமையில் வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். ஞாயிறன்று அதிகாலை நீராடி, அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். கோயிலில் 'ஓம் நமசிவாய:' என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். தேவாரம், திருவாசகம், சிவபுராணம் போன்ற பாடல்களைப் படிப்பதும் நல்லது.

தீர்க்காயுசுடன் வாழுங்க! :

சித்ரா பவுர்ணமியன்று கையில் ஏடும், எழுத்தாணியுமாக அவதரித்தவர் சித்ரகுப்தர். உயிர்களின் பாவபுண்ணிய கணக்கை நிர்வகிக்கும் கணக்கராக இருப்பவர் இவரே. கேதுவின் அதிதேவதையாக விளங்குபவர் சித்ரகுப்தர். இவரை வழிபட்டால் கேது தோஷம் நீங்கும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி பெறுவர். காஞ்சிபுரத்தில் இவருக்கு தனிக்கோயில் உள்ளது. சித்ராபவுர்ணியன்று விரதமிருந்து இவரை வழிபட்டால் முன் செய்த பாவம் நீங்கும். உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழும் பாக்கியம் உண்டாகும். இந்த ஆண்டு ஏப்ரல் 29 சித்ராபவுர்ணமியன்று சித்ரகுப்த ஜெயந்தி நடக்கிறது.

இது நம்ம வீட்டு கல்யாணம்!

மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியனும், அவனது மனைவி காஞ்சன மாலையும் குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். யாகத் தீயில் பார்வதி குழந்தையாக அவதரித்தாள். தடாதகை என பெயரிட்டான். அவளை இளவரசியாக்கி போர் பயிற்சி அளித்தான். அவள் எண்திசைக் காவலர்களையும் வென்றாள். இறுதியாக, சிவலோகமான கைலாயத்தின் மீது போர் தொடுத்தாள். அங்கிருந்த சிவனின் அழகு கண்டு நாணம் கொண்டாள். 'உன் மணாளன் இவரே' என்று வானில் அசரீரி ஒலித்தது. அதன்படி சிவன் தலைமையில் பிரம்மா, திருமால், நந்தீஸ்வரர், தேவர்கள் அனைவரும் மதுரையில் ஒன்று கூட திருமணம் நிகழ்ந்தது. அவர்கள் இன்று வரை மதுரையில் நல்லாட்சி புரிந்து வருகின்றனர். மீன் போல் துõங்காமல் ஆட்சி செசய்பவள் என்பதால் 'மீனாட்சி' என்ற பெயர் இவளுக்கு ஏற்பட்டது. மீனாட்சி திருக்கல்யாணத்தை 'இது நம்ம வீட்டு கல்யாணம்' என பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு ஏப்.27ல் திருக்கல்யாணமும் 28 ல் தேரோட்டமும் நடக்கிறது.

மங்கல குங்குமம் :

பெண்களின் அழகு சாதனமாக பொருளாக திகழும் குங்குமத்திற்கு ஆன்மிகத்தில் சிறப்பிடம் உண்டு.
* புருவ நடு, உச்சி வகிட்டில் குங்குமம் இடுவதால் தீர்க்க சுமங்கலி பாக்கியமும், லட்சுமிகரமான தோற்றமும் உண்டாகும்.
* படிகாரம், சுண்ணாம்பு, மஞ்சள் ஆகிய மூன்றும் சேர்ந்ததே தரமான குங்குமம். இதிலுள்ள மஞ்சள் இரும்புச் சத்தாகவும், படிகாரம் கிருமி நாசினியாகவும் மாறி உடலுக்கு நன்மை அளிக்கிறது.
* நெற்றி வகிட்டில் இடும் போது மூளை, நரம்பு மண்டலத்திற்கு சக்தி உண்டாகிறது.
* மூளைக்கு அதிக உஷ்ணம் செல்லாமல் தடுப்பதோடு குளிர்ச்சியை பாதுகாக்கிறது.
* குங்குமம் இட்டுக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.
* சூரியக்கதிர்கள் குங்குமத்தின் மீது படும் போது உடலுக்கு காந்த சக்தி கிடைக்கிறது.

சுமங்கலி பாக்கியம் தரும் சுபவிரதங்கள் :

தெய்வத்தின் அருளை பெற உதவும் சாதனம் விரதம். எந்த தெய்வத்திற்கு விரதம் இருந்தாலும், விநாயகரை வழிபட்டே தொடங்க வேண்டும். காரடையான்நோன்பு, சுவர்ண கவுரி விரதம், வரலட்சுமி விரதம், நவராத்திரி விரதம் ஆகியவை சுமங்கலி பாக்கியம் தரும் சுபவிரதங்கள்.

காரடையான் நோன்பு:
மாசியும், பங்குனியும் இணையும் நேரத்தில் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இதனை மேற்கொள்வர். கலசத்தில் தேங்காய், மாவிலை, சந்தனம், குங்குமம் வைத்து அதையே அம்பிகையாக பாவித்து மஞ்சள் கயிறு சுற்றி வைக்க வேண்டும். கார அடை, பழம், பொரி படைத்து வழிபாடு செய்ய வேண்டும். மாலையில் அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. இந்த விரதம் மாசி30ல் (மார்ச்14) இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கவுரி விரதம்:
ஆவணியில் விநாயகர் சதுர்த்திக்கு முதல்நாள் அனுஷ்டிப்பது கவுரி விரதம். மணமான பெண்கள் 16 ஆண்டுகள் மேற்கொள்வது வழக்கம். நெய்தீபமேற்றி, தீபத்தின் முன் புது மஞ்சள் கயிறு வைத்து வழிபட வேண்டும். கவுரியம்மனுக்கு அவல், பொரி, கடலை, தேங்காய், பழம் படைக்க வேண்டும். பூஜையின் நிறைவாக, கையில் மஞ்சள் கயிறை கணவர் மூலம் கட்டிக் கொள்ள வேண்டும். இதனை பெண்கள் குழுவாக சேர்ந்து மேற்கொள்வது நல்லது. வரும் ஆவணி 27ல் (செப்.12) இவ்விரதம் வருகிறது.

வரலட்சுமி விரதம்:
கன்னிப்பெண்களும், மணமான பெண்களும் ஒன்று கூடி மேற்கொள்வது வரலட்சுமி விரதம். ஆடி அல்லது ஆவணி மாத வெள்ளியில் இதனை மேற்கொள்வர். கலசத்தை லட்சுமியாகப் பாவித்து தேவியின் முகம் வைத்து அலங்காரம் செய்வர். தாயாருக்கு இனிப்பு பலகாரம், நோன்புக்கயிறு, மலர்ச்சரம் வைத்து பூஜை செய்வர். பூஜையின் முடிவில் பெண்கள் அனைவரும் மலர் சூடிக் கொண்டு கயிறு கட்டிக் கொள்வர். இதனால், கன்னியருக்கு விரைவில் மணவாழ்வு அமையும். ஆவணி 8ல்(ஆகஸ்ட் 24) வரலட்சுமி விரதம் வருகிறது.

நவராத்திரி விரதம்:
புரட்டாசியில் ஒன்பது நாட்கள் பெண்களால் மேற்கொள்ளப்படும் விரதம் நவராத்திரி. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் வழிபடுவதால் தீர்க்க சுமங்கலி பாக்கியம், செல்வ வளம், கல்வி வளம் உண்டாகும். தினமும் மாலையில் கொலு மேடையில் தேவியை அலங்கரித்து, தினமும் ஒரு நைவேத்யம் செய்து வழிபடுவர். இந்த விரத காலத்தில் பெண்கள் அனைவரும் தேவியின் அம்சமாகவே போற்றுவர். வரும் ஆண்டில் புரட்டாசி 23 முதல் ஐப்பசி1 வரை (அக்.10-18 ) வரை நவராத்திரி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

டிப்ஸ்...டிப்ஸ்...டிப்ஸ்:

* தினமும் காலையும் மாலையும் குத்துவிளக்கு ஏற்றுங்கள். கிழக்கு நோக்கி ஏற்றினால் இன்பமான வாழ்க்கை அமையும். பிறரை வசீகரிக்கும் சக்தி அதிகரிக்கும். வடக்கு நோக்கி ஏற்றினால், கல்வி, சுபநிகழ்ச்சிகளில் ஏற்பட்ட தடை நீங்கும். பணம் பெருகும்.
* தாமரைத்தண்டு திரியில் விளக்கேற்றினால், முன்வினைப்பாவம் தீரும். வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றினால் குலதெய்வ ஆசி கிடைக்கும். புதுமஞ்சள் துணியைத் திரியாக்கி ஏற்றினால், கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். புது வெள்ளைத் துணியைத் திரியாக்கி அதை பன்னீரில் நனைத்து உலர வைத்து விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிலைக்கும். *பெண்களுக்கு அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் திருமணம் நடத்தலாம். ஆனால், பிறந்த கிழமையில் நடத்தக் கூடாது.

* உங்கள் குழந்தைகளை பள்ளி, கல்லுாரியில் சேர்க்க அசுவினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.

* இந்த புத்தாண்டில் புதுமணத்தம்பதிகளை விருந்து அழைக்க திங்கள், புதன், வெள்ளி, சனி நல்ல நாட்கள்.

* குடும்பத்தில் சீமந்தம் நடக்கப் போகிறதா? ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், உத்திராடம், திருவோணம், ரேவதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள். அன்று திரிதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி திதியாக அமையுமானால் இன்னும் சிறப்பு.

* குழந்தை பிறந்ததும் தொட்டிலில் இட, ரோகிணி, திருவோணம், பூசம், உத்திரம், உத்திராடம், அவிட்டம், சதயம்,உத்திரட்டாதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.

இந்தாண்டு உங்கள் பெண்ணுக்கு, சகோதரிகளுக்கு திருமணம் முடிக்கிறீர்களா? திருமாங்கல்யம் வாங்க, அசுவினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம். உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.

அரி சிவா இங்கிலையோ!

ஊருக்குள் புதிதாக வந்த ஒருவன், ' அரிசி வாங்கலையோ! அரிசி வாங்கலையோ!' என்று கூவிக் கொண்டே போனான். ஆனால், தலையில் மூடை இல்லை. வண்டியிலும் அரிசி ஏற்றி வரவில்லை. முதலில் யாரும் அவனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், தினமும் வீதியில் அவன் வந்து கூவிச் செல்வதைக் கண்டதும் தெருவிலுள்ளவர்கள் ஒன்று கூடினர்.

“புதிதாக வந்திருக்கும் இந்த நபர் யார்? ஆளைப் பார்த்தால் வியாபாரியாகத் தெரியவில்லை. அரிசி மூடையும் இல்லை. அவனை விசாரிக்க வேண்டும்” என்று பேசினார்கள். பெரியவர் ஒருவரிடம் இது பற்றி கேட்டனர். விஷயமறிந்த அவர் சற்று யோசித்து விட்டு, “இப்போது எனக்கு புரிந்து விட்டது. இந்த ஊருக்குள் கோயில் எதுவுமே இல்லை. யாரும் கடவுளைப் பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. அதை தெரிவிக்கவே, 'அரி.. சிவா.. இங்கிலையோ?” அதாவது ஹரியாகிய திருமாலுக்கும், சிவபெருமானுக்கு கோயில் இந்த ஊரில் இல்லையோ? என்று மறைமுகமாக கேட்டபடி செல்கிறான்” என விளக்கினார்.

இதையடுத்து ஊர் மக்கள் சிவன்,பெருமாளுக்கு கோயில் கட்ட முடிவு செய்தனர். சிவ, விஷ்ணு கோயில் வழிபாடு அனைத்து ஊர்களிலும் இருக்க வேண்டும் என்பதற்காக காஞ்சிப் பெரியவர் சொன்ன கதை இது.

பச்சடி பரிமாற மறக்காதீங்க!

புத்தாண்டன்று உணவில் வேப்பம்பூ பச்சடி சேர்ப்பது அவசியம். வேப்பம்பூ, புளி, வெல்லம், உப்பு, நெய் ஆகிய ஐந்தும் இதில் இடம் பெற வேண்டும். பேருக்கு கொஞ்சமாக வைக்கமால், அதிகமாக செய்வது நல்லது. அதை அம்பிகைக்கு ஒரு கிண்ணம் வைத்து நைவேத்யம் செய்ய வேண்டும். அப்போது பெண்கள் என்ன கோரிக்கை வைத்தாலும், அம்பிகையருளால் நிறைவேறும். அடுத்ததாக கணவருக்கு கொடுக்க வேண்டும். அதன் மூலம் ஆண்டு முழுவதும் கணவரின் அன்பு கிடைக்கும். இதன் பிறகே, குழந்தைகள், பெண்கள் பச்சசடி சாப்பிட வேண்டும்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024