Saturday, April 14, 2018

 அக் ஷய திருதி,தங்கம்,பொதுமக்கள்,ஆர்வம்

அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்க, பொதுமக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆபரண தங்கம் விலை, கடந்த ஆண்டை விட, சவரனுக்கு, 1,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ள நிலையிலும், அக் ஷய திருதியை மவுசு குறையவில்லை. மாநிலம் முழுவதும், நகைக்கடைகளில், 'புக்கிங்' விறுவிறுப்பாக நடந்து வருவதால், இலக்கை விட விற்பனை அதிகரிக்கும் என, வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



தமிழகத்தில் உள்ள, 35 ஆயிரம் நகைக்கடைகளில், தினமும், 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள, 7,500 கிலோ தங்க ஆபரணங்கள், நாணயங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி, அக் ஷய திருதியை போன்ற சுப தினங்களில் தங்கம் வாங்கினால், செல்வம் குவியும் என்ற நம்பிக்கை, பலரிடம் உள்ளது. அதனால், இந்த நாட்களில், அவர்கள் தங்கம் வாங்க, ஆர்வம் காட்டுகின்றனர்.

சேமிப்பு திட்டம் :

மொத்த பணமும் செலுத்தி, தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள், நகை கடைகளில் உள்ள

சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து, மாதந்தோறும் பணம் செலுத்தி வருகின்றனர். சேமித்த தொகைக்கு இணையான தங்கத்தை, சுப தினங்களில் வாங்கிக் கொள்கின்றனர்.

நகைக்கடைகளும், வாடிக்கையாளர்களை ஈர்க்க, சலுகைகளை வழங்குகின்றன. இதனால், அக் ஷய திருதியை, தீபாவளிக்கு, தங்கம் விற்பனை, வழக்கத்தை விட அதிகரிக்கிறது.

2017 அக் ஷய திருதியைக்கு, 25 ஆயிரம் கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையாகின. இதன் மதிப்பு, 8,000 கோடி ரூபாய்; 2017ல், ஏப்ரல், 28ம் தேதி, அக் ஷய திருதியை வந்தது. அன்றைய தினம், சென்னையில், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 2,778 ரூபாய்க்கும்; சவரன், 22 ஆயிரத்து, 224 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று, கிராம் தங்கம், 2,960 ரூபாய்க்கும்; சவரன், 23 ஆயிரத்து, 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதாவது, ஓராண்டில், தங்கம் விலை, கிராமுக்கு, 182 ரூபாயும்; சவரனுக்கு, 1,456 ரூபாயும் அதிகரித்து உள்ள நிலையில், வரும், 18ல், அக் ஷய திருதியை வருகிறது. இருப்பினும், நகைகள் வாங்க, மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கட்டுப்பாடு :

இதற்காக, சென்னை, தி.நகர், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, முன்னணி நகை கடைகளில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள பிரபலமான நகை கடைகளிலும், முன்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது. இதனால், கடந்த ஆண்டை விட விற்பனை அதிகரித்து, இலக்கை தாண்டும் என, வர்த்தகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது: கடந்த ஆண்டை விட, தங்கம் விலை தற்போது உயர்ந்துள்ளது. சீட்டு பிடித்தல் உள்ளிட்ட வைப்பு நிதி திட்டங்களுக்கு, மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனால், தங்கம் விற்பனையில் பாதிப்பு வராது என்ற போதிலும், மக்களிடம் அச்சம் காணப்படுகிறது.

தமிழகம் முழுவதும், காவிரி போராட்டம் நடந்து வருகிறது. இதுபோன்ற, பல காரணங்கள் இருந்தாலும், அக் ஷய திருதியைக்கு, தங்கம் வாங்கும் ஆர்வம், மக்களிடத்தில் குறையவில்லை. எனவே, கடந்த ஆண்டை போலவே, விற்பனை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024