Monday, April 23, 2018

'மது குடிக்கும் மாணவர்களை கல்லூரியில் அனுமதிக்காதீங்க!' : சுற்றறிக்கை அனுப்பும்படி அண்ணா பல்கலைக்கு உத்தரவு

Added : ஏப் 23, 2018 05:05
dinamalar

சென்னை: 'மாணவர்கள் மது மயக்கத்தில் வரக்கூடாது; மீறி வந்தால், கல்லுாரியில் இருந்து நீக்கப்படுவர்' என்ற நிபந்தனையை, விளக்க குறிப்பேட்டில் சேர்க்கும்படி, அனைத்து கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப, அண்ணா பல்கலைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவையில் உள்ள, தமிழ்நாடு பொறியியல் கல்லுாரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர், மோகன் தாக்கல் செய்த மனுவில், 'என்னை, நான்காம் ஆண்டில் தொடர அனுமதிக்க வேண்டும்; மூன்றாம் ஆண்டு தேர்வு முடிவை வெளியிட வேண்டும்' என, கோரியிருந்தார்.இம்மனுவை விசாரித்த நீதிபதி, கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:மக்களின் வாழ்க்கையில், மதுபானம் எவ்வளவு அழிவை ஏற்படுத்துகிறது என்பதை, இந்த வழக்கு வெளிப்படுத்துகிறது.சென்னை மாகாண முதல்வராக இருந்த, ராஜகோபாலாச்சாரியார், 1938ல், மது விலக்கை அமல்படுத்தினார். இதை தளர்த்தி, கொள்கை வகுத்த நீதிமன்றம் தான், இந்த பேரழிவுக்கு காரணம்.தமிழகத்தில், மது குடிப்பதால், பல குடும்பங்கள் நிர்கதியாக விடப்பட்டு, பலர் இறந்த சம்பவங்கள் உண்டு. குஜராத், பீஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மதுவிலக்கு உள்ளது. தமிழகத்தில், மாணவர்கள் கூட, மது அருந்தி, தன் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வது அதிகரித்துள்ளது.மது குடித்ததால், முதல் தலைமுறை இன்ஜி., கல்லுாரி மாணவன் ஒருவன், எப்படி பாதிக்கப்பட்டுள்ளான் என்பது தான், இந்த வழக்கு. மூன்றாம் ஆண்டை முடித்த இவர், கல்லுாரி நேரத்தில் மது குடித்ததால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்; போதிய வருகை பதிவு இன்றி, தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. மீண்டும் செமஸ்டர் தேர்வை எழுத உத்தரவிட்டதை அடுத்து, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.வருகைப்பதிவு பிரச்னை மையமானது என்றாலும், கல்லுாரி நேரத்தில் மது அருந்தி, மாணவர்கள் மத்தியில் பிரச்னையை ஏற்படுத்தியதே முக்கிய பிரச்னை.மாணவர்கள் வகுப்புக்கு சென்று, பாடங்களை படித்து கல்வியறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்லுாரி வளாகத்திலோ, வெளியிலோ தவறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. மாணவ பருவத்தில் அறிவை வளர்த்து, அதன் வழியாக நல்ல பதவியில் அமர்ந்து, நாகரிகமாக வாழ வேண்டும். கல்வி நிறுவனத்தில், கல்விக்கான சூழ்நிலையே நிலவ வேண்டும்.இத்தகைய செயல்பாடுகள் உடையவரை தொடர்ந்து அனுமதித்தால், கல்லுாரி மற்றும் மாணவர்களில் நலனுக்கு உகந்ததாக இருக்காது.எனவே, மனுதாரர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். பல்கலை விதிமுறைப்படி, தேர்வு எழுத, 75 சதவீதம் வருகைப்பதிவு இருக்க வேண்டும்; இவருக்கு, 54 சதவீதமே உள்ளதால், தேர்வு எழுத முடியவில்லை. இதனால், மீண்டும் செமஸ்டர் தேர்வு எழுதும்படி, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது. எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.'மாணவர்கள் மது மயக்கத்தில் வரக்கூடாது; மீறி வந்தால், கல்லுாரியில் இருந்து நீக்கப்படுவர்; கல்லுாரி வளாகத்திற்குள்ளும் அனுமதிக்கப்படமாட்டார்கள்' என்ற நிபந்தனையை, விளக்க குறிப்பேட்டில் சேர்க்கும்படி, அனைத்து கல்லுாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்ப, அண்ணா பல்கலைக்கு உத்தரவிடப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் யாரும் தேவை இல்லாத பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்டு விடக் கூடாது.நம் மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும், டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டு, கஷ்டப்பட்டு சம்பாதித்த மக்களின் பணம் உறிஞ்சப்படுகிறது; எஞ்சியதே குடும்பத்திற்கு செல்கிறது. இதனால், வீட்டில் இருக்கும் பெண்கள் கூட, வேறு பணிகளுக்கு செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள் உட்பட, பலர் மதுவுக்கு அடிமையாகின்றனர். சமூகத்திற்கு தீங்கான இப்பிரச்னைக்கு, அரசு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு நீதிபதி, கிருபாகரன் உத்தரவிட்டார்.




No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024