பெண்ணுக்கு நீதி செய்வோம்
By எஸ். ஸ்ரீதுரை | Published on : 23rd April 2018 12:00 AM
அதிர்ச்சி என்பதற்கு மேலாக இன்னொரு சொல்லைத்தான் தேட வேண்டியிருக்கிறது - நமது நாட்டில் நடைபெறும் பாலியல் குற்றங்களைப் பார்க்கும்போது. சில ஆண்டுகளுக்கு முன்பு நிர்பயா கொடுமை அரங்கேறியபோது இதுவே கடைசி சம்பவமாக இருக்கட்டும் என்று வேண்டினோம். ஆனால், பாலியல் வன்முறைகள் குறைந்தபாடில்லை. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திலும் நடக்கின்ற பாலியல் வன்கொடுமைகள் நம்மை ஒரு நாகரிகச் சமுதாயம் என்று சொல்லிக் கொள்வதற்கே தகுதியில்லாமல் செய்துவிட்டன.
சிறுமிகளையும், கள்ளங்கபடமற்ற பெண் குழந்தைகளையும் பாலியல் கொடுமை செய்வதுடன் அவர்களைத் துன்புறுத்திக் கொலை செய்வதையும் ஜீரணிக்கவே முடியவில்லை. இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலாக, குஜராத் மாநிலத்தில், இளைஞன் ஒருவன், தன்னைப் பெற்ற தாயையே பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் தகவல் நம்மை அதிர்ச்சியின் எல்லைக்கே விரட்டுகின்றது.
நாடெங்கும் பெண்குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கெதிராக அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக, பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துபவருக்கு தூக்கு தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில், ஆங்காங்கே நடைபெறும் சில சம்பவங்களை ஊடகங்கள் பெரிதுபடுத்தக் கூடாது என்று எழும் வாதம் வேதனையளிக்கிறது. இதர குற்றங்களைப் போலக் கருதி சமாதானம் செய்து கொள்ளக் கூடிய விஷயமில்லை பாலியல் குற்றங்களின் அதிகரிப்பு. குற்றங்கள் நடைபெற்று, அவை புகாராகப் பதியப்படுவதற்கே எத்தனையோ இடைஞ்சல்கள். விசாரணை காலத்தில் எத்தனையோ குறுக்கீடுகள். இவற்றையெல்லாம் மீறி ஊடக வெளிச்சத்தினால் வெளியுலகிற்குத் தெரிகின்ற குற்றங்களே இத்தனை என்றால், வெளியில் வராத அல்லது வெளியுலகம் அறிய அனுமதிக்கப்படாத குற்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? இதை சட்டம் ஒழுங்கு விவகாரமெனவும், அது மாநில அரசுகளின் பிரச்னை என்றும் மத்திய அரசு ஒதுங்கிக்கொள்ள முடியாது.
குற்றங்கள் நடந்து, அவை வெளிச்சத்திற்கும் வந்த பின்பு நடவடிக்கை எடுப்பது முக்கியம்தான். அதே சமயம், முக்கியமாக மூலைக்கு மூலை இத்தகைய பாலியல் வன்முறைக் கொடுமைகள் அரங்கேறாதபடி தடுப்பதும் மிகமிக முக்கியம். ஒரேயடியாகத் தடுப்பது கடினம்தான். ஆனால் சிறிது சிறிதாகக் குறைக்கலாம் அல்லவா?
சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை என்பது வரவேற்கத் தகுந்ததுதான். ஆனால், அது குற்றம் செய்த பின்பு தண்டனை கொடுக்கும் முயற்சியே தவிர, குற்றமே நடக்காமல் தடுக்கும் வல்லமை கொண்டதா?
கொலை செய்தால் (அதிகபட்சமாக) மரண தண்டனை உண்டு என்பது யாருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், கொலைக் குற்றம் அரங்கேறும் அந்தத் தருணத்தில் தண்டனையைப் பற்றி கொலையாளி யோசித்துக் கொண்டிருக்கிறாரா, என்ன? உணர்ச்சி முந்திக்கொண்டு நிற்கும்போது, அறிவு கொஞ்சமாவது சிந்திக்குமா?
பாலியல் குற்றங்களை எடுத்துக் கொண்டால், அவை உணர்ச்சி மீதூர்ந்த நிலையில், அறம், வெட்கம் இவையனைத்தையும் மறந்து, வெறியேறிய நிலையில் உள்ளவர்களால் நிகழ்த்தப்படுவது. அங்கு உணர்ச்சியின் வேகம் அறிவார்ந்து செயல்படுவதில்லை.
ஆகவே, பாலியல் குற்றங்களுக்கு, மரண தண்டனை உட்பட, கடும் தண்டனைகள் விதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம், பாலியல் வெறியுணர்வு ஏற்படாத அல்லது அதிகரிக்காத வண்ணம் சமூகத்தின் நெறியுணர்வுகளைச் செழுமைப்படுத்துவதும் ஆகும்.
பள்ளிகளில் அறநெறிவகுப்புகளை மீட்டெடுப்பது, அவ்வகுப்புகளை வேறு முக்கிய(!)ப் பாடங்களுக்காக வேண்டி காவு கொடுக்காமல் இருப்பது, விடலைக் காதலைக் காட்சிப்படுத்தும் திரைப்படங்கள் மற்றும் காட்சி ஊடக நிகழ்ச்சிகளைக் கடும் தணிக்கை மூலம் கட்டுப்படுத்துவது, கணினி மற்றும் கைப்பேசி மூலம் காம உணர்வை ஊட்டும் இணையதளங்களுக்குத் தடை விதிப்பது, இளம் வயதினர் கைப்பேசி பயன்படுத்துவதை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது ஆகியவற்றின் மூலம் இளைய தலைமுறையினர் உள்ளிட்ட ஆண்களிடம் பாலுணர்வு வெறி ஏறாமல் செய்து, பாலுணர்வு வக்கிரங்கள் அரங்கேறுவதைத் தடுக்கவும் குறைக்கவும் செய்யலாம்.
பெரும் போராட்டக் காலங்களில் ஒரு மாநிலம் முழுவதிலுமே கட்செவி அஞ்சல் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களுக்குத் தடைவிதிப்பது போல, இளைய தலைமுறையினரின் மூளையை மழுங்கடித்து நேரத்தையும் கபளீகரம் செய்யும் பாலியல் தொடர்பான வலைதளங்களுக்கு இந்தியாவில் நிரந்தரத் தடை விதிக்கலாம்.
நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் ஏற்படும் தீமைகளைக் களைவதில் தயவு தாட்சண்யம் எதுவும் தேவையில்லை.
போலியோவையும், எயிட்ஸ் நோயையும் திறம்பட எதிர்கொண்டு ஒழித்த நமது மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகங்களால், பாலியல் வெறியாட்டம் என்ற இந்தப் பெரும் நோயையும் எதிர்கொண்டு ஒழித்திட முடியும். ஒழித்தாக வேண்டும்.
பல குற்றங்களுக்கிடையில், ஆங்காங்கே ஒருசில பாலியல் குற்றங்கள்தானே என்று சமாதானப்படுத்திக்கொள்வது சரியல்ல.
ஒருபுறம் விளையாட்டு, கல்வி, நிர்வாகம், இராணுவம், ஊடகம் போன்றவற்றில் நமது நாட்டுப் பெண்கள் சாதனைகள் படைத்துக்கொண்டிருக்க, மறுபுறம் அவ்வினத்தையே பாலியல் அத்துமீறல் குறித்த பயத்தில் வைத்திருப்பது நமக்குப் பெருமை தருவதா? பாலியல் வன்முறைகளைக் குறைப்பதும், பின்னர் ஒரேயடியாகத் தடுப்பதும் முடியாத காரியமல்ல. மனமிருந்தால் போதும். மார்க்கம் தன்னால் தெரியும்.
No comments:
Post a Comment