Wednesday, April 11, 2018

தலையங்கம்
சாதனை படைத்த வருமான வரிவசூல்



மத்திய அரசாங்கத்தின் வருமானத்திற்கும், செலவுக்கும் உள்ள வித்தியாசம் ‘நிதிப்பற்றாக்குறை’ என்று அழைக்கப்படுகிறது.

ஏப்ரல் 11 2018, 04:49 PM

மத்திய அரசாங்கத்தின் வருமானத்திற்கும், செலவுக்கும் உள்ள வித்தியாசம் ‘நிதிப்பற்றாக்குறை’ என்று அழைக்கப்படுகிறது. அந்தவகையில், தற்போதைய நிதிப்பற்றாக்குறை ரூ.7 லட்சத்து 16 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக, மத்திய அரசாங்கம் வருவாயை பெருக்கி, செலவுகளை குறைக்கும் கட்டாயத்தில் இருக்கிறது. அரசின் வருமானத்தில் வரிவசூல் பெரும்பங்கு வகிக்கிறது. வரிவசூலில் நேரடிவரிகள், மறைமுகவரிகள் என்று இருவகை உண்டு. நேரடிவரியை பொறுத்தமட்டில், வருமானவரி அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இந்த ஆண்டு வருமானவரி வசூலில் அரசு சாதனைபடைத்துள்ளது. ஒரு கோடி பேருக்குமேல் புதிதாக வருமானவரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். 2016–17–ம் ஆண்டு 5 கோடியே 43 லட்சம்பேர் வருமானவரி கணக்கு தாக்கல்செய்த நிலையில், 2017–18–ல் 6 கோடியே 84 லட்சம்பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். நேரடிவரியை பொறுத்தமட்டில், பட்ஜெட்டில் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் கோடி வசூலிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்தநிலையில், ரூ.10 லட்சத்து 2 ஆயிரம் கோடி நேரடி வரிவசூல் மூலம் கிடைத்துள்ளதாக மத்திய நிதி மந்திரி அறிவித்துள்ளார். இவ்வாறு ஒரு கோடி பேருக்குமேல் கூடுதலாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்ததற்கு காரணம், மத்திய அரசாங்கம் கொண்டுவந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு, சரக்கு சேவைவரி போன்ற பல்வேறு சீர்திருத்தங்கள்தான் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். வருமானவரி வசூல் என்றாலும் சரி, சரக்கு சேவைவரி வசூல் என்றாலும் சரி, நேர்மையாக வரிகட்டுபவர்களைத்தான் வருமானவரித்துறையும், சரக்கு சேவைவரியை வசூலிக்கும் கலால்துறையும் கசக்கிப்பிழிகிறது. 1 கோடி பேருக்குமேல் கூடுதலாக வருமானவரி கட்டுகிறார்கள் என்றால், இது நிச்சயமாக பெருமைக்குரிய வி‌ஷயமாகும்.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் யார் என்றால், ஆண்டுக்கு ரூ.2½ லட்சத்துக்குமேல் வருமானம் ஈட்டுபவர்கள்தான். மக்கள் தொகை 135 கோடியை தாண்டியநிலையில், ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கும்மேல் என்றவகையில் வருமானவரி கணக்கை 6 கோடியே 84 லட்சம் பேர்தான் தாக்கல் செய்கிறார்கள் என்றால், நிச்சயமாக இது ஏற்புடையதல்ல. இந்த கணக்கை வைத்துப்பார்த்தால், பொருளாதாரம் சிறப்புக்குரியதாக இருக்கமுடியாது. எனவே, மாதச்சம்பளம் வாங்கியவர்களை மட்டும் கண்டிப்பாக வருமானவரி தாக்கல் செய்யவேண்டும் என்றநிலையை மாற்றி, ஆண்டுக்கு ரூ.2½ லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் அனைவருமே வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவேண்டிய ஒரு நிலையை ஏற்படுத்த முயற்சிக்கவேண்டும். அப்படி முடியாதபட்சத்தில், கடந்த தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. கூட்டங்களில் சொன்னதுபோல், வருமான வரியையே ரத்துசெய்துவிட்டு, ரொக்க பரிமாற்றவரி என்று தீவிரமாக அமல்படுத்தினால் நிச்சயமாக அரசுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். எந்தப்பொருளை வாங்கும்போதும், சேவையை மேற்கொள்ளும்போதும் ஏற்கனவே சரக்கு சேவைவரி விதிக்கப்படும் சூழ்நிலையில், வரிஏய்ப்பு என்பதும் நிச்சயமாக இருக்காது. ஆனால், வரிவசூல் செய்யும்போது சாணக்கியர் சொன்னதுபோல், ‘பூவில் இருந்து வண்டு தேனை உறிஞ்சுவதுபோல’ மக்களுக்கு வலிதெரியாமல் அரசு வரிவசூல் செய்யவேண்டும். வரிகட்டுவது ஒரு சுமையே அல்ல; சுகம் என்ற நிலையில் அனைத்து வரிகளும் வசூலிக்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...