Friday, April 27, 2018

தலையங்கம்

இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதம்





கல்வி என்பது ஒருவருடைய வாழ்க்கை செம்மைப்படுவதற்கும், வளம்பெறுவதற்குமான அடிப்படையாகும். அனைவருக்கும் கல்வி என்பதில் பெருந்தலைவர் காமராஜர் முனைப்புடன் செயல்பட்டார்.

ஏப்ரல் 27 2018, 03:00 AM

கல்வி என்பது ஒருவருடைய வாழ்க்கை செம்மைப்படுவதற்கும், வளம்பெறுவதற்குமான அடிப்படையாகும். அனைவருக்கும் கல்வி என்பதில் பெருந்தலைவர் காமராஜர் முனைப்புடன் செயல்பட்டார். அதிலும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தொடக்கக்கல்வி பக்கத்தில் கிடைக்கவேண்டும் என்ற ஆர்வத்தில்தான் நிறைய தொடக்கக் கல்விக்கூடங்களை தொடங்கினார். அதனால்தான் சமுதாயம் அவரை கல்விக்கண் திறந்த காமராஜர் என்று போற்றுகிறது.

ஒரு கட்டிடத்துக்கு அஸ்திவாரம்போல, கல்விக்கு அடித்தளம் தொடக்கக்கல்விதான். அந்தவகையில், ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ படித்த தொடக்கக்கல்வி ஆசிரியர்கள், எழுத்தறிவிக்கும் இறைவனாக கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள். ஏராளமான ஆசிரியர்களும், ஆசிரியைகளும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லவேளையாக இப்போது பள்ளிக்கூடங்களுக்கு கோடைகால விடுமுறை. பள்ளிக்கூடம் நடக்கும் நாட்களில் வேலைநிறுத்தம் நடந்திருந்தால் 1 முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மழலைகளின் கல்வி பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும்.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ‘சமவேலைக்கு சமஊதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடத்தினார்கள். இவர்கள் அனைவரும் 2009-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதிக்குப்பிறகு பணியில் சேர்ந்தவர்கள். அவர்களது குறை என்னவென்றால், 2009-ம் ஆண்டு மே 31-ந்தேதிவரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியத்துடன், அனைத்து படிகளையும் சேர்த்து ரூ.42 ஆயிரம்வரை வழங்கப்படுகிறது என்றும், 2009 ஜூன் 1-ந்தேதி முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.26,500 மட்டுமே வழங்கப்படுகிறது என்பதுதான். ஒருநாளுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் ரூ.15,500 கூடுதலாக வாங்குகிறார்கள். அவ்வாறு வித்தியாசம் இருக்கக்கூடாது. எங்களுக்கும் அதேஊதியம் வேண்டும் என்று கேட்கிறார்கள். இது 7-வது சம்பளக்குழு நிர்ணயம் செய்த ஊதியம். ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமான ஒன்றுதான். நீண்டகால கோரிக்கை இது. ஆனால், தற்போது இதுபோன்ற தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, அரசு நிதித்துறை செயலாளர் (செலவினம்) எம்.எஸ்.சித்திக் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊதியம் முரண்பாடு மற்றும் ஊதிய மாற்றம் தொடர்பான கோரிக்கைகளை இந்த ஒருநபர் குழு ஆய்வு செய்யும். இந்தக்குழு, மனுதாரர்கள் மற்றும் அரசு பணியாளர் சங்கங்களை நேரில் அழைத்து பேசவும் திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்ட சம்பளத்தை நிர்ணயித்துள்ள விதம், திருத்தங்களால் கிடைக்கும் சிறப்பு ஊதியம், படிகள் பற்றிய சந்தேகங்களையும் முன்வைக்கலாம். அதையும் இந்தக்குழு ஆராயும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு தெரிவித்தபடி, ஒருநபர் குழுவிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது இ-மெயில் முகவரி omc_2018@tn.gov.in வாயிலாகவோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் உடனடியாக இந்த ஒருநபர் குழுவுக்கு விண்ணப்பிக்கலாம். ஒருநபர் குழுவும், இந்த ஆசிரியர்களையோ, அவர்களுடைய சங்கத்தையோ உடனடியாக அழைத்துப் பேசவேண்டும். இந்த பிரச்சினைக்கு முடிவுகாண அரசும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். பிரச்சினைகளுக்கு போராட்டம்தான் தீர்வு என்றநிலை இருசாராராலும் தவிர்க்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...