Friday, April 27, 2018

மாநில செய்திகள்

அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து; பயணிகள் ஏமாற்றம் உடனடியாக இயக்க கோரிக்கை





அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஏப்ரல் 27, 2018, 03:45 AM

சென்னை,

அறிவிப்பு வெளியாகி ஓடத் தொடங்கும் முன்பே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உடனடியாக ரெயிலை இயக்குவதற்கான நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்களில் கூட்டம்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சென்னையில் வசித்து வரும் மக்கள் விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு பயணப்பட்டு கொண்டிருக்கின்றனர். பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், ரெயில் பயணத்தை பொதுமக்கள் அதிகம் விரும்பத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு செய்ய முடியாத வகையில், காத்திருப்போர் பட்டியலே பல ரெயில்களில் 200-ஐ தாண்டிவிட்டது. இதனால், சிறப்பு ரெயில்கள் எதுவும் இயக்கப்படாதா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், வணிக ரீதியிலான சிறப்பு கட்டண ரெயில்களையே தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது.

அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்

சிறப்பு வசதிகள் எதுவும் இல்லாத இந்த சிறப்பு கட்டண ரெயில்களில் டிக்கெட் விலை இரு மடங்குக்கு மேல் அதிகமாக உள்ளது. இதனால், இந்த ரெயில்களை பயணிகள் யாரும் விரும்பவில்லை. வழக்கமான கட்டணத்தில் சிறப்பு ரெயில்கள் எதுவும் இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்நோக்கி இருந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில், தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை தாம்பரம் - நெல்லை இடையே 27-ந் தேதி முதல் (அதாவது இன்று) அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரெயிலின் சிறப்பு என்னவென்றால், மொத்தம் உள்ள 16 பெட்டிகளும் முன்பதிவில்லாத பெட்டிகளாகும்.

ரெயில் ரத்து

எனவே, 200 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் இந்த ரெயிலில் பொதுமக்கள் பயணிக்க முடியும். அந்த்யோதயா என்பது இந்தி வார்த்தையாகும். இதற்கு தமிழில் ‘ஏழைகளின் எழுச்சி’ என்று பொருள். அதாவது, ஏழைகள் பயன்பெறுவதற்காகவே இந்த ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது. இந்த அறிவிப்பை கண்ட தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறைந்த கட்டணத்திலேயே சொந்த ஊருக்கு எப்போது வேண்டுமானாலும் சென்றுவர முடியும் என்று கருதினார்கள்.

அந்த்யோதயா ரெயிலை இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் தெற்கு ரெயில்வே ஈடுபட்டது. ரெயிலுக்கான புத்தம் புதிய பெட்டிகள், சென்னை தாம்பரம், பல்லாவரம் ரெயில் நிலையங்களில் பகுதி பகுதிகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. எல்லாம் தயார் நிலையில் இருந்தும், பொதுமக்களும் ரெயிலில் பயணிக்க தயாராகிவந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பயணிகள் சந்தேகம்

அதற்கு காரணமாக, “சில தொழில்நுட்ப காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது” என்று மட்டும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ரெயிலை இயக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுவிட்ட நிலையில், திடீரென ஏழைகளுக்கான ரெயில் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்த ரெயில் ஓடத் தொடங்கினால், ஒவ்வொரு நாளும் சுமார் 1,500 பயணிகள் சென்னையில் இருந்து நெல்லை மார்க்கத்திலும், இதே எண்ணிக்கையில் பயணிகள் நெல்லையில் இருந்து சென்னை மார்க்கத்திலும் பயணம் செய்ய முடியும். இத்தனை பயணிகள் பஸ்களில் செல்ல வேண்டும் என்றால், 40 பஸ்கள் தேவைப்படும்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தற்போது, அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்களையே நம்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரெயிலில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் பயணம் செய்யும் கட்டணத்தில், பஸ்களை பொறுத்தவரை ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும்.

எனவே, ரத்து செய்யப்பட்டுள்ள அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை இன்னும் ஒரு சில நாட்களில் இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவ்வாறு இல்லாத பட்சத்தில், தெற்கு ரெயில்வே மீது பல்வேறு சந்தேகங்களை பொதுமக்களுக்கு ஏற்படும் நிலை உருவாகும்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...