Sunday, April 22, 2018

சாப்ட்வேர் வேலையை உதறிவிட்டு, டீக்கடை நடத்தி ‘ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் இளம் தம்பதி’

Published : 21 Apr 2018 19:10 IST
 
ஐஏஎன்எஸ் நாக்பூர்



நிதினின் தேநீர் கடை “சாய் வில்லா” : கோப்புப்படம்

சாப்ட்வேர் வேலையை உதறிய இளம் கணவர், மனைவி டீக்கடை தொடங்கி ஆண்டுக்கு ரூ. 30 லட்சம் சம்பாதித்து வருகின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த நிதின் வி. பியானி(வயது36), அவரின் மனைவி பூஜா(34) ஆகியோர் சாப்ட்வேர் பணியை ராஜினாமா செய்து டீக்கடை தொடங்கி நடத்தி வருகின்றனர்.


தங்களின் குடும்பத்தினர் ஆலோசனைகள், அறிவுரைகள்படி தரமான மூலப் பொருட்களை வாங்கி டீக்கடை நடத்தத் தொடங்கி இப்போது அவர்கள் இருவருக்கும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது.

சாப்ட்வேர் தொழிலில் மாதம் சம்பாதித்தைக் காட்டிலும் இருவரும் அதிகமாக சம்பாதிப்பதாகவும், மனநிறைவுடன் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாக்பூரின் பரபரப்பு மிகுந்த தரோத்கர் ஸ்கொயர் பகுதியில் கடையைத் தொடங்கி அனைத்து வாடிக்கையாளர்களையும் இருவரும் ஈர்த்து வருகின்றனர்.

இது குறித்து நிதின் நிருபர்களிடம் கூறியதாவது:

நானும், என் மனைவி பூஜாவும் மிகப்பெரிய, புகழ்பெற்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் பெரிய பதவிகளில் இருந்தோம். அதில் பணியாற்றுவதும், கிடைக்கும் வருமானமும் எங்களுக்கு நிம்மதியைத் தரவில்லை.

ஆதலால், எங்களின் மனஅழுத்தத்தை குறைக்கவும், மற்றவர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் டீக்கடை தொடங்க முடிவு செய்தோம். மிகுந்த சுவையான, சத்தான, தரமான டீயை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்தோம்.

பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ததிதல் தரத்தில் மோசமாகவும், சுவையில்லாமலும் டீ கிடைப்பதை கண்டோம். அதைத்தான் வாடிக்கையாளர்கள் வேறுவழியில்லாமல் குடித்து வருகிறார்கள். அதேசமயம், தரமான, சுவையான டீ கிடைத்தால், வாடிக்கையாளர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்று எண்ணினோம்.

இதற்கு ஏற்றார்போல், ஏறக்குறை. 4 மாதங்கள் கள ஆய்வு செய்தோம். மக்களுக்கு என்ன விதமான டீ விரும்புகிறார்கள், எப்படி சுவை இருக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்களை தெரிந்து கொண்டோம். நாள் ஒன்றுக்கு ஒருவர் குறைந்தபட்சம் இருமுறையேனும் டீ அருந்துகிறார்கள். ஆதலால், தரமான தேநீருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்பினோம்.

சூடான, சுவையான, தரமான தேயிலை மிகக்குறைந்த செலவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவுசெய்தோம். அதற்கான ஏற்பாடுகளாக தேயிலை,சர்க்கரை, பால், மசாலா உள்ளிட்ட பொருட்களை உரிய இடத்தில் தரமானதாக வாங்கினோம்.

ஆரஞ்சு நகரம் எனச் சொல்லப்படும் நாக்பூரில் கடந்த நவம்பர் மாதத்தில் கடையைத் தொடங்கினோம். நாங்கள் கடை தொடங்கிய இடம் மிகப்பெரிய அதிகாரிகள், பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வந்து செல்லக்கூடிய இடம். அவர்களுக்கு ஏற்றார்போல் பல்வேறு சுவைகளில், சூடான டீயும், ஐஸ்டீ என 20வகைகளில் தயாரித்து வழங்கினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 1.75 லட்சம் கோப்பை தேநீர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 30 சதவீத லாபத்துடன் இதுவரை ரூ.15லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.30 லட்சம்வரை சம்பாதிக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் எங்களிடம் 10 பேர் வேலை செய்கிறார்கள். குறைந்தபட்சம் 5 டீக்களுக்கு அதிகமாக, அல்லது ரூ.100க்கு அதிகமாக ஆர்டர் செய்பவர்களுக்கு இருப்பிடத்துக்கே சென்று தேநீர் சப்ளை செய்கிறோம்.

சுவையான, தரமான தேநீர் உரிய நேரத்தில் கிடைக்கிறது என்பதால், எங்கள் கடையில் இருந்து நாள்தோறும் ஒரு சில நிறுவனங்களுக்கு தேநீர்சப்ளை செய்து வருகிறோம். சாதாரண கடைகளின் விலைகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் தேநீர் விலையும் ரூ.8 முதல் ரூ.20 வரைதான் விற்பனை செய்கிறோம்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்றார்போல், பேப்பர் கிளாஸ், பீங்கான் கோப்பை, களிமண்ணால் செய்யப்பட்ட தேநீர் கோப்பை ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். அமைதியான, சுகாதாராமான சூழலில் கடை நடத்துகிறோம். எங்களின் கடையின் கிளைகளை திறக்க பலர் ஆர்வத்துடன் கேட்டு இருக்கிறார்கள். விரைவில் விரிவுபடுத்துவோம்

இவ்வாறு நிதின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024