Sunday, April 22, 2018

மீண்டும் ஆரம்பித்தது செயின் பறிப்புகள்: விரட்டிப்பிடிக்க சிறுவன் நம்முடன் எப்போதும் இருப்பானா? பொதுமக்கள் என்னதான் செய்வது?

Published : 21 Apr 2018 19:22 IST

மு.அப்துல் முத்தலீஃப் சென்னை

 

செயின் பறிப்பு சித்தரிப்பு ப்டம், சிறுவன் சூர்யா- கோப்புப் படம்

சென்னையில் நேற்று ஒரே நாளில் மீண்டும் செயின் பறிப்பு சம்பவங்களால் மூன்று பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் போலீஸோ, துரத்திப்பிடிக்க சூர்யா போன்ற சிறுவர்களோ இருக்க மாட்டார்கள், பொது மக்கள் என்னதான் செய்வது?

சென்னையில் டாக்டர் ஒருவரிடம் செயினைப்பறித்துக் கொண்டு ஓடிய திருடனை சிறுவன் ஒருவன் துரத்திச் சென்று பிடித்த சமபவம் வைரலானது. இதையடுயடுத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சிறுவனை அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். இது எப்போதும் நடக்குமா?


எப்போதும் நம் அருகில் சிறுவன் சூர்யாக்கள் இருப்பதில்லை

போலீஸார் அலர்ட்டாக இருப்பதாக தெரிவித்தாலும் செயின் பறிப்பாளர்கள் தங்கள் செயலை செய்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். சென்னை திருமுல்லைவாயில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் செயினைப் பறிக்க மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் முயன்றபோது அந்தப் பெண் செயினை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். ஆனால் செயின் பறிப்பு நபர்கள் வலுவாக இழுத்ததால் அந்த பெண் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

இதேபோன்று அசோக்நகரில் விஜயலட்சுமி(73) என்ற மூதாட்டியிடம் 9 சவரன் செயினைப் பறித்துக்கொண்டு சென்றனர். அண்ணாநகரில் சதீஷ் என்பவரும் அவரது மனைவியும் இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது மற்றொரு வாகனத்தில் வந்த இருவர் சதீஷின் மனைவி அணிந்திருந்த 8 சவரன் காசுமாலையை பறித்துச் சென்றனர்.

மோசமான நிகழ்வுகள்

சென்னையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பதிலிருந்து அடுத்த கட்ட வளர்ச்சியாக மேலும் துணிச்சலடைந்த செயின் பறிப்பாளர்கள் ஓடும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்லும் பெண்களிடம் செயினை பறிக்கும் அளவுக்கு துணிந்து விட்டனர்.

இவ்வாறு பறிக்கும் போது ஓடும் வாகனத்திலிருந்து விழும் பெண்கள் தலையில் காயம்பட்டு உயிரிழந்த சந்தர்ப்பங்களும், முதுகெலும்பு முறிந்த சம்பவங்களும் நடந்துள்ளது. சென்னையில் எந்த நிலையிலும் பெண்கள் வெளியே வருவது பாதுகாப்பற்ற நிலையோ என்று எண்ணும் அளவுக்கு நிலை மாறி வருகிறது.

வாகனங்களை கண்காணியுங்கள் காவலர்களே

அதிவேக இன்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் பல முறை பயிற்சி பெற்ற இளைஞர்கள் சாதாரணமாக குடும்பஸ்த்தர் ஒருவர் தன் மனைவியுடன் சுப நிகழ்ச்சிக்கு செல்லும் போது அவர்களிடம் செயினை பறிக்கும் நிகழ்வு நடக்கிறது. இதில் இளைஞர்களுடன் அவர் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

சென்னையில் அதிவேக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், டியோ போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களே இந்த செயலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி குறிப்பாக இத்தகைய வாகனங்களை சோதிப்பது போன்றவை செயின் பறிப்பாளர்களை தடுக்கும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

இது ரொம்ப முக்கியம் டிராபிக் காவலரே

குறிப்பாக செயின் பறிப்பவர்கள் திருடப்பட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர், அல்லது பின் பக்கம் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை பயன் படுத்துகின்றனர். ஆனால் சென்னையில் சாதாரணமாக செல்லும் பல இரு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டே இருப்பதில்லை. நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சென்னையில் சாதாரண நிகழ்வாக உள்ளது. செயின் பறிப்பு சில இடங்களில் நடந்தாலும் செல்போன் பறிப்புகள் அதிக அளவில் நடப்பதும் மேற்கூறிய காரணங்களால் என்பது அனைவரும் கூறும் காரணம்.

செயின் பறிப்பு செல்போன் பறிப்பு பொதுமக்களுக்கு போலீஸாரின் யோசனை

செயின் பறிப்போ செல்போன் பறிப்போ தனியான இடங்களில் உள்ளவர்களை தாக்கிப் பறிப்பதை பொதுமக்கள் தவிர்க்க முடியாது. அதிலும் கூட பொதுமக்கள் தனியாக செல்லும் இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி செல்வது நலம் என்கின்றனர் போலீஸார்.

ஆனால் இன்னொரு சம்பவம் சாதாரணமாக சென்னையில் நடக்கிறது. பெரும்பாலான பெண்கள் சாலையில் நடந்துச்செல்லும் போதோ, அல்லது வாகனத்தில் செல்லும் போதோ ஓரளவு சுற்றத்தில் நடப்பதை கவனித்தப்படி செல்ல வேண்டும். கூடியவரை உள்ளுணர்வுடன் சாலையில் செல்லும்போது செயல்பட வேண்டும்.

விழிப்புடன் இருந்தால் தப்பிக்கலாம்

செயின் அல்லது செல்போனை பறிப்பவர்கள் முதலில் நோட்டமிட்ட பின்னர் தான் பறிக்கின்றனர். அவர்கள் நோட்டமிடுவதன் காரணம் எவ்வளவு தூரம் கவனிக்காமல் செல்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்தே செயலில் இறங்குகின்றனர்.

அந்த நேரத்தில் விழிப்புடன் இருப்பவர்களை அவர்கள் நெருங்குவதில்லை. மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள் அதிக நகை அணிந்திருந்தால் பக்கத்தில் நெருக்கி வரும் வாகன ஓட்டிகளை சற்று முறைத்து பார்த்தாலே அவர்கள் செயின் பறிப்பில் ஈடுபடமாட்டார்கள் என்கின்றனர். தனியாக வாகனம் ஓட்டிச்செல்லும் பெண்கள் கழுத்தைச்சுற்றி துப்பட்டா போன்று துணையை அணிந்துக் கொண்டால் செயின் பறிப்பாளர்கள் முயற்சி எடுக்க மாட்டார்கள்.

அந்த சில நொடிகளில் அலர்ட்

செயின், செல்போன் பறிப்பவர்கள் ஒரு சில நொடிகளில் தான் தங்களது இலக்கை தீர்மானிக்கிறார்கள், அந்த நேரத்தில் விழிப்புடன் இருக்கும் பெண்களை அவர்கள் புறக்கணித்து வேறு ஆட்களை தேடி செல்கின்றனர். செல்போன்கள் அதிக அளவில் பறிக்கப்படுவது முழுதும் சாலையில் தான் நடக்கிறது.

அதுவும் நின்றுக்கொண்டு இருப்பவர்கள் எப்போதும் அனிச்சையாக செல்போனை எடுத்து வாட்ஸ் அப் மெசேஜ் போன்றவற்றை பார்ப்பது வழக்கம். அந்த நேரம் சுற்றுபுறத்தை மறந்து செல்போனில் பாரவையை புதைத்திருக்கும் அந்த நபர்களே அவர்களது குறிக்கோள்.

அட்ரஸ் கேட்டால் அதிக கவனமாக இருக்கவும்

பெண்கள் தனியான இடங்களில் செல்லும் போதும், அதிகாலையில் வீட்டு வாசல்முன் கோலம் போடும் போது, பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது முகவரி கேட்பது போல் அருகில் வரும் நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவர்களுக்கு அட்ரஸ் சொல்லும் நேரத்தில் அருகில் அஜாக்கிரதையாக இருக்கும் நேரம் தான் செயின் செல்போனை பறிக்கும் நேரம் ஆகும்.

தவிர்க்க என்ன செய்ய வேண்டும். வாகனத்தில் இரண்டு பேர் அமர்ந்துக்கொண்டு அட்ரஸ் கேட்டால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அருகில் செல்லக்கூடாது. அவர்கள் கைக்கெட்டாத தூரம் விலகி நிற்க வேண்டும். அட்ரஸ் சொல்லும் ஆர்வத்தில் கவனத்தை சிதற விடக்கூடாது. அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லை, யாருக்கும் இழப்பில்லை.

செல்போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள்

செல்போன் பறிப்பை தவிர்க்க கூடியவரை தனியாக நடந்துச்செல்லும் போது, பேருந்து நிறுத்தம் சாலையோரம் நிற்கும் போது செல்போனை அவசியமின்றி வெளியே எடுக்காதீர்கள். அப்படியே பயன்படுத்துவதாக இருந்தாலும் ஓரளவு எச்சரிக்கை உணர்வுடனே பயன்படுத்துங்கள். சாலையோரம் நிற்பவர்களே அதிக அளவில் செல்போனை பறிகொடுத்துள்ளனர்.

மோட்டார் வாகன பில்லியன் ரைடர்களே உஷார்

மோட்டார் வாகனங்களில் பின்பக்கம் அமர்ந்து பயணம் செய்பவர்கள் குறிப்பாக பெண்கள் செல்போனை கையில் வைத்து பார்த்துகொண்டே செல்வார்கள். இவர்கள் தான் செல்போன் பறிப்பாளர்களின் இலக்கு. சமீபத்தில் கோட்டூர்புரம் மூப்பனார் பாலம் செல்லும் சாலையில் ஆண் நண்பர் ஒருவருடன் பின்னால் அமர்ந்து சென்ற சென்ற இளம்பெண் கையில் செல்போனை வைத்து மெசேஜை பார்த்தப்படி செல்ல சரியாக மூப்பனார் பாலம் நெருங்கும் இடத்தில் அந்தப் பெண்ணிடம் செல்போனை பறித்த மோட்டார் சைக்கிள் நபர்கள் பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளை ஓட்டி வேகமாக சென்றுவிட்டனர்.

இவர்கள் பாலத்தின் கீழ் சாலையில் சென்றதால் உடனடியாக அவர்களை பிடிக்க முடியவில்லை. விலை உயர்ந்த செல்போன் ஒரு நொடி அலட்சியத்தால் பறிபோனது. இதைத் தவிர்ப்பது நம் கடமை. செல்போன் சாலையில் செல்லும் போது அவசியமான நேரத்தில் மட்டுமே தேவை ஏற்பட்டால் பயன்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு எப்போதும் அவசியம்

போலீஸார் எப்போதும் நமக்காக பாதுகாப்பு கொடுக்க வர முடியாது, சூர்யா போன்ற சிறுவர்களும் திருடர்களை துரத்திப்பிடிக்க எப்போதும் எங்கும் இருக்க மாட்டார்கள். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும். சாலையில் பயணம் செய்வது சில மணி நேரம் தான் ஆனால் அலட்சியம், அஜாக்கிரதை காரணமாக வாழ்நாள் சேமிப்பையே இழக்கிறோம். ஆகவே சாலையில், பேருந்து நிறுத்ததில் நிற்கும் போது கவனமாக இருப்போம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024