Sunday, April 1, 2018


கொலைக் களமாகும் காதல்!

By ஆர். வேல்முருகன் | Published on : 31st March 2018 01:25 AM

காதல் என்ற சொல்லை நினைத்தாலே அனைவருக்குமே குறிப்பாக இள வயதினருக்கு ஓர் இனம்புரியாத கவர்ச்சி மனதுக்குள் மத்தாப்புக் கோலம் போடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் சம்பவங்களைப் பார்த்தால் காதல் என்ற சொல்லுக்கான அர்த்தம் கொலைக்களம் என்று மாறிவிடுமா என்ற பயம் அனைவருக்குள்ளும் ஊசலாடி வருகிறது.

கடந்த சுமார் 15 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் காதல் பிரச்னைகளுக்காக சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் சுமார் 80 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் ஆணவக் கொலைகள் அரங்கேறி வருவதைப் பார்க்கிறோம். மூத்தோர் ஏற்காத காதலால்தானே இவை நிகழ்கின்றன. துர்மரணங்கள் மட்டுமே ஊடகங்கள் மற்றும் செய்தித் தாள்களில் வெளிவந்து பொதுமக்களின் கவனத்தைக் கவர்கின்றன.

ஆனால் காதலித்துத் திருமணம் செய்யும்வரை மானே, தேனே என்று கொஞ்சிப் பேசும் சில ஆண்மக்களின் உண்மை சொரூபம் திருமணத்துக்குப் பின் பெண்ணுக்குத் தெரிய வரும் தருணத்திலேயே அவள் மனதளவில் மாண்டுவிடுகிறாள். அப்போதுதான் பெற்றோரும் உற்றோரும் சொல்வது அவளுக்குப் புரியவரும்.

பொதுவாகவே வீடுகளில் பெண் பிள்ளைகளுக்குச் செல்லம் அதிகம். அதேபோல பெண்கள் வயதுக்கு வந்த பின் கட்டுப்பாடுகளும் அதிகம். ஆண்களுக்குச் செல்லமும் குறைவு, கட்டுப்பாடுகளும் குறைவு.
செல்லமாக வளர்க்கப்படும் பெண்கள் என்றாவது ஒரு நாள் தந்தையோ அல்லது தாயோ கடுமையாகப் பேசிவிட்டால் மனமுடைந்துவிடுகிறார்கள். இந்தப் பிரச்னையைத் தங்கள் தோழிகள் அல்லது தோழர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் நல்லவர்களாக இருந்தால் பிரச்னையில்லை. ஆனால் ஆறுதல் சொல்கிறேன் என்ற போர்வையில் இவர்கள் மீது உரிமை எடுப்பது போல நடித்து, காதலில் ஈடுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம்.
பொருத்தமில்லாத நபரை, வெறும் தோற்றத்தைக் கண்டு மயங்கி, காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து, காலம் கடந்து, தாங்கள் விழுந்த குழியிலிருந்து எவ்வாறு மீள்வது என அறியாத பெண்கள் எத்தனையோ. இது இப்படியென்றால் மதம் மாறித் திருமணம் செய்து கொண்டு வேதனைப்படுபவர்களை என்னவென்று சொல்வது?

பொதுவாக காதல் திருமணங்கள் அனைத்தும் தோல்வியில் முடிவதில்லைதான். ஆனால் பொருளாதார ரீதியாகப் பிரச்னை இல்லாத திருமணங்கள் மட்டுமே பெரும்பாலும் வெற்றி பெறுகின்றன என்பது கண்கூடு.
முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக இருந்தன. தவறு செய்தால் சுட்டிக் காட்டுவதற்கு வீடுகளில் பெரியவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது 95 சதவீத குடும்பங்களில் அந்த முறை சிதைந்துவிட்டது. இப்போதுள்ள ஒரு சில பெரியவர்கள் மகன், மகள் குழந்தைகளுக்கு இடையில் பிரிவினையைத்தான் விதைக்கின்றனர். இதனால் அன்பு, பாசத்துடன் வளர வேண்டிய அடுத்த தலைமுறை பிரிவினையைக் கற்றுக் கொள்கிறது.
இதுபோன்ற குழந்தைகள்தான் பெரும்பாலும் காதல் எனும் புனிதத்தைக் கெடுக்க வந்து, தம் வாழ்விலும் கேடு விளைவித்துக் கொள்கின்றனர். அவசரமாகக் கல்யாணம் செய்து கொண்டு, குழந்தையையும் பெற்றுக் கொண்டு, சாவகாசமாக சங்கடப்பட்டுக் கொண்டே வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் கடந்த சில மாதங்களுக்குள் 6-க்கும் மேற்பட்ட கொலைகள். அதன் பின்னணியில் இருப்பது பெரும்பாலும் ஒருதலைக் காதல்தான். சென்னையில் அண்மையில் கல்லூரி வாசலில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்குத் தேவையான செலவுகளைச் செய்து படிக்க வைத்த அவளுடைய காதலன், அப்பெண்ணின் பாராமுகத்தால் கொலை செய்ததாகக் கூறியிருக்கிறான். இவர்கள் விவகாரம் அனைவருக்குமே தெரியும் என்கிறார்கள். ஆனால் உண்மை என்பது இந்த சம்பவங்களில் மட்டும் அடங்கிப் போவதில்லையே. விசாரணை முடிந்து கொலையாளிக்குத் தண்டனை கிடைத்தாலும் போன உயிர் திரும்ப வருமா? அந்தத் தீர்ப்பினால் மட்டுமே சமூக நிலை மாறிவிடுமா? அமில வீச்சு ஒரு தனிக் கதை.

பெண்களைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் இதைப் போல காதலில் சிக்கி சின்னாபின்னமாகும்போது அல்லது காதல் திருமணம் செய்யும்போது உறவு மற்றும் ஊர்க்காரர்கள் பேசும் பேச்சு சொல்லி மாளாது. இதற்குப் பயந்துதான் பெரும்பாலானவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதில் நவநாகரிகப் பெருநகரம், சிற்றூர் கிராமம் என்ற பேதமில்லை.
மகளோ அல்லது மகனோ தவறு செய்யும்போது கண்டிக்கும் பெற்றோர், அவர்கள் நல்லது செய்யும்போது அதைப் பாராட்டவும் தயங்கக் கூடாது. அவரவரின் சிறு உலகில் குறுகி அடைந்துவிடாமல், குறைந்தபட்சம் விடுமுறை தினத்திலாவது வாரிசுகளின் மேல் தங்களுக்கு அக்கறை உண்டு என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போது எந்த விஷயமாக இருந்தாலும் அதைப் பகிர்ந்து கொள்வார்கள்.

இவ்வாறு தங்களின் அன்பை வாரிசுகளுக்குப் புரிய வைப்பதன் மூலம், இளையோருக்குத் தவறு செய்யத் தோன்றாது. பெற்றோர் தங்கள் மீது வைத்திருக்கும் அன்பை நினைத்தாவது பெற்றோருக்குத் தலைகுனிவை ஏற்படுத்தக் கூடாது என்ற மனநிலை குழந்தைகளுக்குத் தோன்றும். அப்போதாவது ஒருதலைக் காதலும் அதனால் விளையும் கொலைகளும் தடுக்கப்படும்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...