Friday, May 4, 2018

நலம் தரும் நான்கெழுத்து 19: சேகரிப்பா? குப்பையா?

Published : 27 Jan 2018 10:14 IST
 
டாக்டர் ஜி. ராமானுஜம்



“ஒவ்வொரு நாளையும் உன் வாழ்நாளின் கடைசி நாள்போல் அனுபவித்து வாழ். என்றாவது ஒருநாள் அது உண்மையாகக் கூடும்”

– ஸ்டீவ் ஜாப்ஸ்

ஒரு துறவியிடம் ‘மனிதர்களின் வாழ்வில் நீங்கள் பெரிதும் அதிசயிக்கும் பண்பு எது?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அந்தத் துறவி அளித்த பதில் “இவ்வுலகில் பிறக்கும் எல்லா உயிரினமும் ஒரு நாள் கட்டாயம் இறக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை என்றபோதும் மனிதர்கள் பெரும்பாலும் என்னவோ என்றென்றைக்கும் சாகாமல் வாழ்ந்துகொண்டே இருப்பவர்கள்போல் வாழ்வதுதான் நான் மிகவும் அதிசயிக்கும் பண்பு” என்றார்.

‘என்றென்றைக்கும்’ வாழப்போவதாக நினைத்துக்கொள்ளும் இந்தப் பண்பால்தான் சேர்த்து வைக்கும் பழக்கம் தொடங்குகிறது. உயிரினங்களில் சிலவற்றில் எதிர்காலத்துக்கான உணவுத் தேவைக்காகச் சேர்த்து வைக்கும் பண்பு உள்ளது. ஆனால், சிந்தனைத்திறன் பெருகத் தொடங்கிய மனித இனம்தான் முக்காலத்தையும் ஆராயும் பெரும் திறன் பெற்ற இனம். அதுவே கடந்தகால அனுபவங்களை ஆராய்ந்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இன்னல்களுக்காக நிகழ்காலத்தில் திட்டமிட்டு சேர்ப்பது என்ற பண்பைத் திறமையாகக் கைக்கொள்கிறது. பரிணாம இயல், உயிரியல் ரீதியில் இந்த சேமிக்கும் பண்பு அத்தியாவசமான ஒன்றாக ஆகிறது.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்” என வருமுன் காக்காமல் இருப்பவன் வாழ்க்கை தீ மூண்ட வைக்கோல்போர் போல் அழியும் என்கிறது குறள்.

அளவுக்கு மீறினால்…

பல்லாயிரம் ஆண்டுகளாகப் பஞ்சங்களுக்குப் பழகிய நம்முடைய உடல்கூட எதிர்காலத்துக்குத் தேவைப்படும் என நினைத்தே நாம் உண்ணும் உணவின் மிச்ச கலோரிகளைக் கொழுப்பாகச் சேர்த்து வைத்துக்கொள்கிறது. ஆனால், தேவைக்கு அதிகமாகும்போது கொழுப்பே எமனாகவும் ஆகிறதல்லவா?

எதிர்காலத்துக்குத் தேவைப்படுமே என்ற அச்சம் அளவை மீறும்போது நிகழ்காலத்தைத் தொலைத்துவிடுகிறோம். விளைவு தம்மிடம் உள்ளது போதாதோ என நினைத்து இருப்பதைச் செலவழிக்க அஞ்சத் தொடங்குகிறோம். அது மட்டுமல்ல பொருட்களை மேலும் மேலும் வாங்கிக் குவித்துவிட்டு, அதை அனுபவிக்காமல் இன்னும் இன்னும் என ஓடும் மனப்பான்மையும் இது போன்றதே.

எப்படி அளவுக்கு மீறிய நுகர்வு எனும் பெரும்வெறியில் செலவழிக்கும் மனப்பான்மை பாதகமாகிறதோ, அதுபோன்றே அளவுக்கு மிஞ்சிய சிக்கனமும் கஞ்சத்தனமாகிப் பிரச்சினைகளை உண்டாக்குகிறது. சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்டால் நகைச்சுவையாகச் சொல்வார்கள் “மழை பெய்யும்போது அதிலே குளித்துத் தண்ணீரை மிச்சம் பிடித்தால் சிக்கனம். கோடைக் காலத்திலும் மழை வரட்டும் எனக் காத்திருந்து குளிக்காமல் கப்படித்தால் அது கஞ்சத்தனம்” என.

இன்னும் சிலரைக் கஞ்சன் என அழைத்தால் கடும் கோபம் கொள்வார்கள். தங்களைத் தவறாகச் சொல்லிவிட்டதற்காக அல்ல. கருமி என்ற மூன்றெழுத்துச் சொல் இருக்கையில் கஞ்சன் என நான்கெழுத்துச் சொல்லைப் பயன்படுத்தி ஒரு எழுத்தை வீணாக்கியதற்காக.
கண் கெட்ட பின்

நம்மில் பலரும் மகிழ்ச்சியாக இருப்பதற்குச் சில வரையறைகள் வைக்கிறோம். முதுநிலைப் படிப்பு , ஆறு இலக்கச் சம்பளம், எட்டு இலக்கச் சேமிப்பு, அயல்நாட்டுக் குடியுரிமை எனப் பலவாகவும் இது இருக்கலாம். இவையெல்லாம் அடைந்தபிறகுதான் நான் வாழ்க்கையில் சிரிப்பேன் என நமக்கு நாமே நிபந்தனைகள் விதித்துக்கொண்டு, நிர்ப்பந்தப்படுத்திக்கொள்கிறோம். உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் எதுவும் பெரிதாகத் தேவையில்லை.

ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அதி பயங்கரக் கஞ்சன் .. மன்னிக்கவும் கருமி ஒருவர் வாழ்ந்து வந்தாராம். அவர் ஒருமுறை மொட்டை மாடிக்குச் சென்றிருந்தபோது தவறிக் கீழே விழுந்து விட்டாராம். விழும்போது அவரது வீட்டு பால்கனியைத் தாண்டும்போது அங்கு நின்றிருந்த மனைவியைப் பார்த்து “எனக்குக் காலை உணவு தேவைப்படாது. வீணாக்காதே” எனக் கத்திக்கொண்டே கீழே விழுந்து இறந்தாராம்.

இதுபோல் இறுதி மூச்சுவரையும் கஞ்சர்களாக இருப்பவர்கள் இருந்தாலும் மரணப் படுக்கையின்போது யாருமே இன்னும் கொஞ்சம் பணமோ பொருளோ ஈட்டியிருக்கலாம் என வருந்துவதில்லை. இன்னும் நன்றாக வாழ்க்கையை அனுபவித்திருக்கலாம். இன்னும் கூடுதலாகக் குடும்பத்தோடு நேரம் ஒதுக்கி இருந்திருக்கலாம் என்றே வருத்தப்படுவார்கள்.

குப்பை சேகரிப்பு நோய்

சிலர் தேவையற்ற முக்கியமற்ற பொருட்களைக் கூடத் தூர எறியாமல் சேர்த்து வைப்பார்கள். இவ்வாறு அளவுக்கு மீறிச் சேர்த்து வைப்பதும் ஒரு மனநல பாதிப்பாக அறியப்படுகிறது. பழைய செய்தித்தாள்கள், முக்கியமற்ற தபால்கள், முடிந்துபோன நாட்காட்டிகள், எப்போதோ ஏதோ பொருட்கள் வாங்கிய ரசீதுகள் என எதையுமே வெளியே எறியாமல் குவிண்டால் கணக்கில் குவித்து வைத்திருப்பார்கள். இதை ஆங்கிலத்தில் ‘ஹோர்டிங் டிஸ்ஆர்டர்’ என அழைக்கிறார்கள். உயிரினங்கள் எதிர்காலத்துக்காகச் சேர்த்து வைக்கும் பண்பு அதீதமாவதால் இந்நோய் வருவதாகக் கூறப்படுகிறது. மனித மூளையில் சில பகுதிகளில் ஏற்படும் பாதிப்பினாலும் சிலர் இவ்வாறு குப்பை குவிப்புப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

‘தேவைக்கு அதிகமாகச் சேர்ப்பவன் திருடன்’ என்று சொல்வார்கள். அவ்வாறு பிறருக்குக் கிடைக்காமல் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் வெறும் குப்பையே. அதீத நுகர்வுக்கும் அதீத சேமிப்புக்கும் இடையில் உள்ள சமநிலையே நமக்கெல்லாம் நலம்தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

No comments:

Post a Comment

Playing cricket witha cork ball not a criminal offence: HC

Playing cricket with a cork ball not a criminal offence: HC A scheme for compensating such eventualities could be framed, says judge. Mohame...