Saturday, May 5, 2018

நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்பவர்களுக்கு பயண கட்டணத்துடன் ரூ.1,000 தமிழக அரசு உதவி



‘நீட்’ தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பயண கட்டணத்துடன் ரூ.1,000 வழங்கப்படும். உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக சமூக வலைத் தளங்களில் பலர் அறிவித்து உள்ளனர்.

மே 05, 2018, 05:45 AM

சென்னை,

இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர் களை சேர்ப்பதற் கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.

சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) நடத்தும் இந்த தேர்வை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டிலும் ஏராளமான பேர் எழுதுகிறார்கள். இதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, நாமக்கல், சேலம், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 10 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக இதுபோன்ற நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, விண்ணப்பத்தில் அவர்கள் குறிப்பிடும் தேர்வு மையங்களே ஒதுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு கேரளா, மராட்டியம், ஆந்திரா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதை அறிந்ததும் அந்த மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ததோடு, தமிழக மாணவர்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள வெளிமாநில மையங்களில்தான் நீட் தேர்வை எழுத வேண்டும் என்றும், தேர்வு மையங்களை மாற்ற முடியாது என்றும் தீர்ப்பு வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தேர்வு தேதி நெருங்கி விட்டதால் வெளி மாநிலங்களுக்கு எப்படி செல்வது? எங்கு தங்குவது? பணத்தேவையை எப்படி சமாளிப்பது? என்ற தவிப்புக்கு ஆளானார்கள்.

இதைத்தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு முன்வந்தது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

எதிர்வரும் நீட் தேர்வுக்காக ஒரு சில தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிரமங்களுக்கு உள்ளாவதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன. இதன் அடிப்படையில், இந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக கீழ்க்கண்டவாறு நான் ஆணையிட்டு உள்ளேன்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து வெளி மாநிலத்திற்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப்படியாக இரண்டாம் வகுப்பு ரெயில் கட்டணமும், (பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு ரெயில் கட்டணத்திற்கு மிகாமலும்), இதர செலவினங்களுக்காக மாணவர் ஒருவருக்கு தலா 1,000 ரூபாய் வீதமும் வழங்க உத்தரவிட்டு உள்ளேன்.

இதை அவர்கள் கல்வி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து முன்பணமாகவே பெற்றுக்கொள்ளலாம் அல்லது தேர்வு எழுதி திரும்பிய பிறகு பயணம் மேற்கொண்டதற்கான உரிய ரசீதுகளை கொடுத்து மேற்படி தொகையை பெற்றுக்கொள்ளலாம். முன்பணம் பெற்றவர்கள் தேர்வு எழுதி திரும்பிய பின், உரிய ரசீதுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

நீட் போட்டித் தேர்வு நுழைவுச் சீட்டின் நகல் மற்றும் படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதில் ஏதேனும் சிரமம் ஏற்படின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல்- ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளை பெறலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

இதேபோல் சமூக ஆர்வலர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர் கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு உதவ முன்வந்து இருக்கிறார்கள். சேவை மனப்பான்மை கொண்ட ஏராளமான பேர் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து உள்ளனர்.

நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் 20 மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து செலவுகளையும் தானும், தனது நண்பரும் தயாரிப்பாளருமான டில்லிபாபுவும் ஏற்றுக்கொள்வதாக நடிகர் அருள்நிதி அறிவித்து உள்ளார். இதேபோல் நடிகர் பிரசன்னா 2 மாணவர்கள் வெளி மாநிலத்துக்கு விமானத்தில் சென்று வர தேவையான செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக கூறி இருக்கிறார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ.யுமான தமிமுன் அன்சாரி, வெளி மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தனது தொகுதியைச் சேர்ந்த 4 ஏழை மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார். கூடுதல் செலவு ஏற்பட்டால் அதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களிடம் உறுதி அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவர்கள் நேற்று பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்றனர். சிலர் கார்களில் புறப்பட்டு சென்றனர். இதேபோல் தஞ்சையில் இருந்து சுமார் 50 மாணவ- மாணவிகள் பஸ், ரெயில், கார், வேன்கள் மூலம் எர்ணாகுளம் புறப்பட்டு சென்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத தங்கள் ஊருக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு அங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் தேவையான உதவிகளை செய்ய முன்வந்து இருக்கின்றன. அந்த நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் சிலரும், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவ தயாராக இருப்பதாக கூறி உள்ளனர்.

நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக் கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.
இதேபோல், தமிழக மாணவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக, கோட்டயம் இந்து நாடார் உறவின்முறை செயலாளர் வெ.கலைச்செல்வன் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து இருக்கிறார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024