Tuesday, June 12, 2018

மாநில செய்திகள்

பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது



பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு இனிமேல் தமிழ், ஆங்கில பாடங்களுக்கு முதல் தாள், 2-வது தாள் என்று கிடையாது. இனிமேல் தமிழ், ஆங்கில பாடங்களுக்கு தலா ஒரு தேர்வுதான் நடைபெறும். இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 12, 2018, 05:00 AM சென்னை,

பிளஸ்-1 மாணவர்களுக்கு இந்த வருடம் பொதுத்தேர்வு நடைபெற்றது. தமிழ் முதல் தாள், தமிழ் 2-வது தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் 2-வது தாள் என்று ஒவ்வொரு தேர்வுகளுக்கும் தலா 100 மதிப்பெண் இருந்தது. தமிழ் முதல் மற்றும் 2-வது தேர்வில் எடுத்த மதிப்பெண்களை 100-க்கு கணக்கிட்டு வழங்கப்பட்டது. அதுபோலத்தான் ஆங்கிலம் தேர்வுக்கும் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இந்த வருடம் 800 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதை 600 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டனர்.

பிளஸ்-2 தேர்வு இதுவரை 1200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இனிமேல் பிளஸ்-2 மாணவர்களுக்கும் தலா 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். இது 2018-2019ம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் அமல்படுத்தப்படும்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது.

தமிழக மாணவர்களின் நலன் கருதி தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களைப் போன்றே இரண்டு தாள்களுக்கு பதிலாக ஒரு தாளாக மாற்ற வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மொழிப்பாடம் (தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்கள்) மற்றும் ஆங்கில பாடத்தில், பாடத்துக்கு இரண்டு தாள்கள் வீதம் தேர்வெழுதுவதால் இடைப் பருவத் தேர்வுகள், பருவத் தேர்வுகள், ஆயத்த தேர்வுகள் என தேர்வு, நாள்களுக்கென ஏறத்தாழ பத்து நாட்கள் செலவிடப்படுகின்றன. தேர்வு நாள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள 8 தேர்வுகளுக்கு பதிலாக 6 தேர்வுகளாக குறையும்போது மாணவர்களின் மன அழுத்தம் பெரிதும் குறையும்.

ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும்போது தற்போதுள்ள பாடப்பகுதிகளில் எந்த ஒரு பகுதியையும் நீக்கம் செய்யாமல் அனைத்தையும் உள்ளடக்கியதாக ஒரு தாள் இருக்கும் வகையில் வினாத்தாள்களைத் தயாரிக்கலாம். இதனால் மாணவர்கள் எந்த பாடப் பகுதியையும் விட்டு விடாமல் கற்றுத் தேர்வு எழுதும் சூழல் ஏற்படும்.

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான மொழிப்பாடம், ஆங்கிலம் ஆகியவற்றின் இரு தாள்களை ஒரே தாள்களாக ஒருங்கிணைக்க பாடத்திட்டக் குழுவுக்கு உயர்நிலைக் குழுவின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றத்தை ஆசிரியர், பெற்றோர் அடங்கிய குழுக்கள் ஏற்றுக்கொண்டன.

இதையடுத்து கடந்த ஜூன் 4-ந் தேதி பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளிகள் வாரிய கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒரு மனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குனர், அரசுத் தேர்வுகள் இயக்குனர், மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் ஆகியோரது கருத்துகளின் அடிப்படையில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள மொழிப்பாடம், ஆங்கிலப்பாடங்களில் உள்ள 2 தாள்களை 2 தேர்வுகளாக எழுதுவதற்கு பதில் ஒரே தாளாக தேர்வெழுத அனுமதித்தும், இதற்கான வினாத்தாள் கட்டமைப்பு, மாதிரி வினாத்தாள் ஆகியவற்றை உருவாக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024