Saturday, June 9, 2018

மருத்துவப் படிப்பு: ஆண்டுக்கு 13 லட்சம் கட்டணம்!


தமிழகத்தில் செயல்படும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில், மருத்துவப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ஒரு மாணவரிடம் 13 லட்சம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜவஹர் சண்முகம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் இளங்கலை மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது என்றும், இந்தக் கட்டணத்தை நிர்ணயிக்கக் குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று(ஜூன் 8) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், "தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்கு அதிக பட்சமாக 13 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து பேசிய நீதிபதி, "நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழு விரைவில் கட்டண நிர்ணயத்தை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்" எனவும் அவர் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்திடம் மின்னம்பலம் சார்பாகத் தொடர்புகொண்டு பேசினோம்.

அவர் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இதனை நடைமுறைப் படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றாலும், தமிழக அரசு சார்பில் வாதாடி, இந்தத் தீர்ப்பையே பெறவேண்டும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நேரடியாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது.

மேலும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்களுக்கு மத்திய அரசுதான் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இந்த நிகர்நிலைக் கல்லூரிகளில் கடைசி இரண்டு நாட்கள் மாணவர் சேர்க்கையின்போது, மீதியுள்ள இடங்களுக்குக் கல்லூரி நிர்வாகமே சேர்க்கை நடத்தும் எனக் கொடுத்துவிடுகிறார்கள். இதனால் குறைவான மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் கூட அதிக பணம் செலுத்தி கல்லூரிகளில் சேர்ந்துவிடுகிறார்கள். இதனால் நிகர்நிலைக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினால் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கலாம் என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.

ர.ரஞ்சிதா
ssta

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024