Friday, June 15, 2018

மாநில செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: அ.தி.மு.க. அரசுக்கு தற்காலிக நிம்மதி




18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை கூறி இருப்பது, அ.தி.மு.க. அரசுக்கு தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, 3-வது நீதிபதியின் இறுதி தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையே நீடிக்கும்.

ஜூன் 15, 2018, 05:45 AM
சென்னை,


முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனி சாமியை நீக்க கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க் கள் 19 பேர் கடந்த ஆண்டு கவர்னரிடம் மனு கொடுத்தனர்.

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.

இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க் களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று மதியம் 1 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக ஏராளமான வக்கீல்களும், பத்திரிகை, தொலைக் காட்சி நிருபர்களும் கோர்ட்டு அறையில் கூடி இருந்தனர். இதனால் கோர்ட்டு அறையில் கூட்டம் நிரம்பி இருந்தது.

மதியம் 1.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். அதாவது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறினார்.

அதேசமயம், 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு வழங்கினார்.
முதலில், தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தீர்ப்பை வாசித்தார். ‘இந்த வழக்கில் எனது கருத்து என்னவென்றால்...’என்று கூறி அவர் தீர்ப்பை வாசிக்க தொடங்கியதுமே கோர்ட்டில் இருந்த பலருக்கு, இந்த தீர்ப்பு மாறுபட்ட தீர்ப்பாகத்தான் இருக்கும் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி, “18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும்” என்று தீர்ப்பு கூறினார்.

பொதுவாக 2 நீதிபதிகள் அமர்ந்து ஒரு வழக்கை விசாரிக்கும்போது மூத்த நீதிபதியின் தீர்ப்பில் உடன்படுவதாக இருந்தால் அவருடன் அமர்ந்து வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மூத்த நீதிபதி வாசித்த தீர்ப்பில் கையெழுத்திடுவது வழக்கம். மூத்த நீதிபதியின் தீர்ப்பில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி, மூத்த நீதிபதியின் தீர்ப்பில் இருந்து மாறுபடுவதாக கூறி தனது தீர்ப்பை வாசிப்பார்.

அதன்படி நீதிபதி எம்.சுந்தர், தலைமை நீதிபதியின் தீர்ப்பில் இருந்து மாறுபடுவதாக கூறி தனது தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்.

அவர், “சபாநாயகரின் நடவடிக்கை இயற்கை நீதிக்கு புறம்பானது; உள்நோக்கம் கொண்டது. எனவே, 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது” என்று தீர்ப்பு கூறினார்.

இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்ட இருப்பதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கை மாற்றம் செய்வதாகவும், ஏற்கனவே இந்த வழக்கை நான்(தலைமை நீதிபதி) விசாரித்து உள்ளதால் மூத்த நீதிபதியான ஹுலுவாடி ஜி.ரமேஷ், 3-வது நீதிபதி யார் என்பதை முடிவு செய்வார் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் கோரிக்கை ஒன்றை வைத்தார். 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் ஏற்கனவே ஐகோர்ட்டு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், எனவே 3-வது நீதிபதியின் விசாரணை முடிவடையும் வரை இந்த இடைக்கால உத்தரவு தொடர உத்தரவிடவேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு தலைமை நீதிபதி, 3-வது நீதிபதியின் விசாரணை முடிவடைந்து இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த இடைக்கால உத்தரவு (தற்போதைய நிலை) தொடரும் என்று உத்தரவு பிறப்பித்தார். தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரின் தீர்ப்பு மொத்தம் 327 பக்கங்களை கொண்டதாக இருந்தது.

முதலில் தலைமை நீதிபதியின் தீர்ப்பை கேட்டதும் அ.தி.மு.க. வக்கீல்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதேசமயம் டி.டி.வி.தினகரன் ஆதரவு வக்கீல்கள், தி.மு.க. வக்கீல்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

தலைமை நீதிபதியின் தீர்ப்பில் இருந்து மாறுபடுவதாக நீதிபதி எம்.சுந்தர் கூறியதும், குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு கோர்ட்டு அறையில் அமைதி நிலவியது. நீதிபதி எம்.சுந்தர் தனது தீர்ப்பை வாசித்து முடித்ததும் அந்த மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் முடிவுக்கு வந்தது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை கூறி இருப்பது, அ.தி.மு.க. அரசுக்கு தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. 3-வது நீதிபதியின் இறுதி தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையே நீடிக்கும் என்பதால், அதுவரை அரசுக்கு நெருக்கடி எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024