Thursday, June 14, 2018

இந்தி தெரியாவிட்டால் மத்திய அரசு வேலை இல்லை!


இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியில் சேருவதற்கு இந்தி கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று மத்திய அரசின் விளம்பரம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அந்த விளம்பரத்தில், கொல்கத்தாவில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேருவதற்கு இந்தி மொழி குறித்த அடிப்படை அறிவைக் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும். அரசின் கொள்கையின்படி இந்த நிறுவனங்களிலுள்ள ஊழியர்கள் கட்டாயம் தேசிய மொழியை(இந்தி) தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரசு ஒரு மொழிதான் தேசத்தை ஒருங்கிணைக்க முடியும் என்று நம்புகிறது. அதனால் இது போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இந்தியைத் தெரிந்திருப்பது கட்டாயமாகிறது. இதுதான் தேசத்தை ஒருங்கிணைப்பதற்கான முதல் நடவடிக்கையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நிதியினால் இயங்கும் ஆராய்ச்சி நிறுவனங்கள் திருவனந்தபுரத்திலும், திருப்பதியிலும், புனேவிலும், போபாலிலும், கொல்கத்தாவிலும், பெர்ஹம்பூரிலும், மோஹலியிலும் உள்ளன.

இந்தி திணிப்பை நாள்தோறும் பல துறைகளிலும் மேற்கொண்டுவரும் மத்திய அரசு அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் இத்திட்டத்துக்கு இந்தி பேசாத மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, பெங்காலி மொழிக்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் அமைப்பு ஒன்றை நடத்திவரும் கார்கா சட்டர்ஜி கூறுகையில், “இந்தி ஆசிரியர்களுக்கு இந்தி கட்டாயம் என்பது புரிந்து கொள்ளக்கூடிய நடவடிக்கையாகும். ஆனால், மற்ற மாநிலங்களில் இந்தியைக் கட்டாயமாக்குவது என்பது திணிப்பு என்பதைத்தான் தவிர வேறு என்ன நடவடிக்கை?” என்று கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024