செக்போஸ்ட் கெடுபிடியில்லை... காத்திருக்க வேண்டியதில்லை... Ewaybill வரமா, சாபமா?
ரஞ்சித் ரூஸோ
vikatan 2.6.2018
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் பொருள்களைக் கொண்டு சேர்ப்பதற்கு அந்தப் பொருளின் மதிப்பு அதற்கான வரி என அனைத்தையும் சேர்த்து way bill என்ற ஒன்று தயாரிக்கப்படுகிறது. இந்த waybill இல்லையென்றால் அந்தப் பொருள் அதிகாரபூர்வமாகக் கொண்டு செல்லப்படவில்லை என்று அர்த்தம். கடத்தல் பொருள் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். ஜிஎஸ்டி வந்த பிறகு இந்த waybill முறை ewaybill முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது. கொண்டு செல்லும் பொருள் எவ்வளவு, அதன் மதிப்பு, எந்த வழியாகக் கொண்டுசெல்லப்படுகிறது என்பது போன்ற விஷயங்களை இணையத்தில் பதிவேற்றிவிட்டால் போதும். ஒவ்வொரு மாநிலமும் இந்த முறையை ஏற்றுக்கொண்ட நிலையில் கடைசியாக தமிழகமும் இந்த முறைக்கு வந்துவிட்டது.
தமிழகம் உட்பட நான்கு மாநிலங்கள் நேற்று இந்த Ewaybill முறையை அமலுக்குக் கொண்டுவந்துள்ளது. தற்போது இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் இந்த முறையைக் கொண்டுவந்துவிட்டன. ஜூன் 3 முதல் இந்தியாவில் 1 லட்ச ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள பொருள்களை மாநிலம் விட்டு மாநிலம் ரயில், சாலை, கப்பல், விமானம் என எந்த வழியில் பொருள்களை ஏற்றிச்சென்றாலும் ewaybill தேவை.
இந்தப் புதிய முறையில், சாலைவழி போக்குவரத்தில் பொருள்களைக் கொண்டுசெல்வதற்கு, பொருள் ஏற்றுவதற்கு முன்கூட்டியே பில் தயாரித்துவிட வேண்டும். மற்ற வழிகளில் பொருள்கள் செல்லும்போது பொருள்களை ஏற்றிவிட்டு பிறகு பில்லைத் தயாரிக்கலாம். கடந்த ஏப்ரல் 1 முதல் பல மாநிலங்களில் இந்த முறை அமல்படுத்தப்பட்டு வந்துள்ளன. கர்நாடகா இதில் முதன்மை மாநிலம். இந்த முறையில் இதுவரை 6 கோடியே 30 லட்சம் ewaybill பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில லாரி உரிமையாளர் சங்கங்களிடம் கேட்டபோது, `லாரி உரிமையாளர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் இந்தமுறை உண்மையில் சில வேலைகளையும் நேரத்தையும் குறைத்துள்ளது. முன்பெல்லாம் ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒரு ஃபார்ம் இருக்கும், 6 மணிக்கு முன்பாகவே அதற்கு அந்த மாநிலத்தில் ஒப்புதல் வாங்கிவிட வேண்டும். அடுத்தநாள் விடுமுறை என்றால் அவ்வளவுதான்... பொருள்களைக் கொண்டுபோகவே முடியாது. கர்நாடகாவுக்குப் போக ஒரு இரவு போதும். ஆனால், நாங்கள் 4 நாள்கள் காத்திருக்கும் நிலையெல்லாம் வந்துள்ளது. இப்போது எல்லாமே ewaybill என்ற ஒரே ஃபார்முக்குள் வந்துவிட்டது. கணினி மயமாகிவிட்டதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதைப் பதிவு செய்துகொள்ளலாம். பொருள்களை இறக்கும் முன்பு இந்தப் பில்லை எங்கு இறங்குகிறோமோ அந்த நிறுவனம் அப்ரூவ் செய்தால் போதும்’ என ஒரே கருத்தைப் பதிவுசெய்தார்கள்.
தென் இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் அசோஸியேஷன் தலைவர் கோபாலிடம் பேசினோம். ``இந்தப் புதியமுறை லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் வேலையைக் குறைக்கவே செய்கிறது. பெரிய லாஜிஸ்டிக் நிறுவனங்கள் என்றால் அவர்கள் தங்களது ஜிஎஸ்டி எண்ணைப் பயன்படுத்தி ewaybill தயாரிக்கலாம். சிறிய நிறுவனங்களுக்கு இது தேவையில்லை. ஏற்றுமதியாளர் - இறக்குமதியாளர் இருவரும் பதிவுசெய்தால் போதும். பொருள்களைப் பத்திரமாகக் கொண்டுசெல்வது மட்டுமே எங்கள் வேலை" என்றார்.
சென்னை வாகன வளாக நலச்சங்கத் தலைவர் ஜெயகுமாரிடம் விசாரித்தபோது, ``இந்த முறை வந்ததால் செக்போஸ்ட்கள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. செக்போஸ்ட்டால் 2 மணிநேரம் தாமதமாகும். ஒவ்வொரு செக்போஸ்ட்டிலும் லாரியை நிறுத்துவதால் பலமணிநேரம் வீணாகும். இப்போது இந்தக் கவலையில்லை. ewaybill நம்பரைப் போட்டால், எந்த மாநிலமாக இருந்தாலும், லாரியில் என்ன உள்ளது, யாருக்காகப் பொருள் செல்கிறது என எல்லாத் தகவல்களுமே வந்துவிடும். ஒரு நாளில் எவ்வளவு பொருள்கள் இடமாற்றம் செய்யப்படுகிறது, இதன் மூலம் லாபம் நஷ்டம் எவ்வளவு, எந்தெந்த நிறுவனங்கள் பொருள்களை வாங்குகிறது; விற்பனைசெய்கிறது போன்ற தகவல்கள் எல்லாம் தானாகவே அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்டு விடுகிறது. ewaybill தயாரிக்கும் வலைதளம் பொறுமையாகவே இயங்குகிறது இதன் மூலம் சில சமயம் பில் தயாராகிறது, சில சமயம் ஆவதில்லை. இந்த வலைதளம் வேகமாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அவ்வப்போது சர்வர் பிரச்னைகளும் வருகிறது" என்றார்.
``அதிகரித்துக் கொண்டே வரும் எரிபொருள் விலை, வளர்ந்துவரும் ஓட்டுநர் தட்டுப்பாடு, டோல் விலை, சரக்குப் போக்குவரத்து முறையில் அதிகரித்துவரும் ஊழல் போன்ற விஷயங்கள் எல்லாம் இன்னும் போக்குவரத்து தொழில் செய்பவர்களை வாட்டிக்கொண்டுதான் இருக்கிறது. இதில் எதையாவது மாற்றினால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், பெரிய மாற்றங்களைக் கொண்டுவர எந்த அரசுமே முயற்சி செய்வதில்லை" என்று இந்தத் தொழிலின் அவலங்களையும் சேர்த்தே கூறினார்.
No comments:
Post a Comment