முதுமை, நோய்மைக்கு சவால் விடும் கருணாநிதியின் ஆரோக்கிய ரகசியம்! ஜி.லட்சுமணன் பெ.மதலை ஆரோன் HARIF MOHAMED S
அயராத உழைப்பு, உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி... கருணாநிதியின் அன்றாட வாழ்க்கை இப்படித்தான் இருந்தது!
இதழியல், சினிமா, இலக்கியம், அரசியல் எனத் தொட்ட துறைகள் அனைத்திலும் உச்சத்தை அடைந்தவர் கருணாநிதி. 12 வயதில் `மாணவ நேசன்' என்ற கையெழுத்து பிரதியைத் ஆரம்பித்தபோதே தொடங்கியது அவரது பொது வாழ்க்கைப் பயணம். பல்வேறு தடைகளைத் தாண்டி எல்லா துறைகளிலும் யாராலும் எட்ட முடியாத அளவுக்குப் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார் அவர்.
தமிழகத்தில் கருணாநிதி கால்படாத நிலப்பரப்பே இல்லை. குக்கிராமங்களுக்குக் கூடச் சென்றிருக்கிறார். பொதுவாழ்க்கையில் நுழைந்த காலம் முதல் அமர முடியாத அளவுக்கு உடல் தொய்ந்துபோகும் வரை பயணித்துக்கொண்டே இருந்தவர் அவர். இன்னொரு பக்கம், அரசியல் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் மன அழுத்தங்கள், குடும்ப உறவுகளால் ஏற்படும் உளைச்சல்கள் என அனைத்தையும் லாகவமாகக் கையாண்டு தன் ஆரோக்கியத்துக்குச் சிறிதும் பங்கம் வராதவகையில் செயல்பட்டார் கருணாநிதி.
இன்று 35 வயதுக்காரர்களுக்கெல்லாம் இதயநோய் வருகிறது. சர்க்கரை நோய் பொதுநோயாகி விட்டது. முகம் சோர்வாக இருந்தாலே, சர்க்கரை நோய் டெஸ்ட் செய்துகொள் என்று பிறர் ஆலோசனை சொல்லும் அளவுக்கு அந்தநோய் இளம் தலைமுறையைப் பீடித்துக்கொண்டிருக்கிறது. 95 வயதில், முதுமை உடலை பீடித்து முடக்கிப்போட்டிருக்கும் இந்த நிமிடம் வரை கருணாநிதியின் இதயம் ஆரோக்கியமாகத் துடித்துக்கொண்டிருக்கிறது. சர்க்கரை உட்பட எவ்விதமான நோய்களும் அவரை நெருங்கியதில்லை.
இந்த அளவுக்குத் திட்டமிட்ட வாழ்க்கை முறை. எவ்வளவு பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் உடற்பயிற்சி, யோகா என உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் மெனக்கெடுவார் கருணாநிதி.
`அதிகாலையில் எழுபவன் இன்னொரு நாளைப் பெறுகிறான்' என்பார்கள். கருணாநிதி இரவு எத்தனை மணிக்குப் படுக்கைக்குச் சென்றாலும் காலை ஐந்து மணிக்கு எழுந்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நடைமுறையை மிகவும் கடுமையாகப் பின்பற்றினார். உடன் பயணிப்பவர்கள், உதவியாளர்களெல்லாம் மிரண்டு போவார்கள்.
சிறுவயது முதலே விளையாட்டில் அவருக்கு ஆர்வமுண்டு. பூப்பந்து, கபடி... இரண்டும் அவருக்குப் பிடித்த விளையாட்டுகள். நண்பர்களோடு கபடி விளையாடி சில நேரங்களில் படுகாயங்கள் கூட ஏற்பட்டுள்ளதாக அவர் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
31 வயதில் கருணாநிதி சென்ற கார் ஒரு விபத்தில் சிக்கியது. அதில் அவரது கண் பாதிக்கப்பட்டது. கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது. அதன்பிறகே, பவருடன் கூடிய கறுப்புக்கண்ணாடியை அவர் அணிய ஆரம்பித்தார். காலையில் கண்ணாடியை அணிந்தால் இரவு உறங்கச் செல்வதற்கு முன்புதான் கழட்டுவார்.
தொடக்கத்தில், வாரத்தில் இரண்டு நாள்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபிறகு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டுவிட்டார்.
ஒருமுறை கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டு வதைத்தது. `உல்லன் நூல் பட்டால் நல்லது' என்று மருத்துவர் சொல்ல அதன்பிறகு உல்லன் சால்வை அணிய ஆரம்பித்தார். பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி மஞ்சள் சால்வை அணிவதை வழக்கமாக்கிக்கொண்டார்.
உணவு விஷயத்திலும் கருணாநிதி மிகவும் கட்டுப்பாடாக இருப்பார். சாப்பாட்டில் தேங்காய் பயன்பாடு அறவே ஆகாது. இட்லிக்குக் கூட தேங்காய்ச் சட்னி வைத்துக்கொள்ள மாட்டார். கொத்தமல்லி சட்னி, தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி, சாம்பார்தான் ஊற்றிக்கொள்வார். ஆப்பம் என்றால் தேங்காய்ப்பாலுக்குப் பதில் பசும்பால் சேர்த்துக்கொள்வார். எண்ணெயும் குறைவாகப் பயன்படுத்துவார்.
வெளியில் சாப்பிடுவது அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. பிள்ளைகள் உணவகத்தில் சாப்பிட்டால் கூடத் திட்டுவார். வெளியூர் சென்றால், கூடவே ஒரு சமையல் குழுவும் உடன் செல்லும். ஒருநாள் பயணமென்றால் மிகவும் பிடித்த நண்பர்கள் வீட்டில் சாப்பிடுவார்.
முன்பெல்லாம் மதியம் 12 மணிக்கு சிக்கன் சூப் குடிப்பார். வீட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்துக்குப் பிறகு சிக்கன் , மட்டன் சாப்பிடுவதை அறவே நிறுத்திவிட்டார், சிக்கன் சூப் வெஜிடபிள் சூப் ஆகிவிட்டது. சூப் குடிப்பதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பு ஒரு கப் காபி குடிப்பார். வெயில் காலமென்றால் காபிக்குப் பதில் இளநீர். மாதம் மூன்று முறை மீன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, திரவ உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார் கருணாநிதி.
மதிய சாப்பாட்டில் கண்டிப்பாக ஒரு கீரை இருக்க வேண்டும். கத்தரிக்காய், முள்ளங்கி விரும்பிச் சாப்பிடுவார். குழம்புதான் விரும்புவார். வறுவல், பொறியல் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டார். மாலை நேரத்தில் தோசை இருக்க வேண்டும். 70 வயதுக்கு மேல் பிரெட் சாப்பிடத் தொடங்கினார். டீயில் தொட்டுச் சாப்பிடுவது பிடிக்கும். இரவு, இரண்டு சப்பாத்தியும் குருமாவும். திராட்சை, சப்போட்டா, பப்பாளி, பேரிச்சம்பழங்களும் சாப்பிடுவார்.
வயிறு நிறைய சாப்பிடுவதில்லை. அளவோடுதான் சாப்பிடுவார். அறிவாலயம் கட்டத் தொடங்கியபிறகு வாக்கிங் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். நடக்க இயன்ற காலம் வரை தினமும் 20 நிமிடமாவது வாக்கிங் சென்றுவிடுவார். யோகக்கலை வல்லுநரான தேசிக்காச்சாரியிடம் யோகா கற்றுக்கொண்டார். வாக்கிங் முடிந்ததும் யோகா செய்யத் தவறுவதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இஞ்சி, ஏலக்காய் போட்ட டீ அருந்துவார். இடையிடையே கேரட் டாலட் சாப்பிடுவார். கேரட்டைப் பொடியாக நறுக்கி அதோடு எலுமிச்சை சாறு, உப்புச் சேர்த்துத் தருவார்கள்.
வெயிலோ, பனியோ, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம் போன்றவற்றையும் செய்யத் தொடங்கினார். கடும்
உழைப்புக்கு மத்தியில் ஆரோக்கியத்தின் மேல் அவர் காட்டிய அக்கறைதான் உடல் வலிமைக்கு மட்டுமன்றி மன வலிமைக்கும் உறுதுணையாய் இருந்திருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
கோபாலபுரத்தில் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் டாக்டர் கோபால்தான் கருணாநிதியின் உடல்நிலையை முற்றிலும் அறிந்தவர். தினமும் வந்து சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தையும் பரிசோதிப்பார். நட்பு அடிப்படையில் நரம்பியல் மருத்துவர் டாக்டர் ராமமூர்த்தியும் செக் அப் செய்வதுண்டு.
2006-ம் ஆண்டில், முதுமையின் காரணமாக, மூட்டுகள் உடம்பைத் தாங்கும் சக்தியை இழந்துவிட்டன. இருந்தாலும் அவரது இயல்பு வாழ்க்கையைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. சக்கர நாற்காலியைப் பயன்படுத்த ஆரம்பித்தார். அதன் பின்னரும்கூட தினமும் காலை ஒரு மணிநேரம் எளிய முறையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்து வந்தார். நடப்பது குறைந்துவிட்டதால், வாரம் ஒருமுறை கை, கால்களுக்கு ஆயில் மசாஜ் செய்வதுண்டு.
கருணாநிதி அடிக்கடி எதிர்கொண்ட பிரச்னை, செரிமான பிரச்னைதான். கடந்த சில ஆண்டுகளாக சாதத்தை மிக்ஸியில் போட்டு திரவமாக்கியே சாப்பிட்டு வந்திருக்கிறார்.
நெஞ்சுச்சளி காரணமாக 2016 ம் ஆண்டு செப்டம்பரில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பிறகு மருத்துவமனையில் நெஞ்சுச்சளி அகற்றப்பட்டது. ஆனாலும் கருணாநிதியின் வயதைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியான சுவாசத்துக்காக `ட்ரக்கியோடோமி' கருவி நிரந்தரமாகப் பொருத்தப்பட்டது. மருத்துவர்கள். கழுத்துக்குக் கீழே துளையிடப்பட்டு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளதால், அவரால் பேசமுடியவில்லை. அந்த சமயங்களில் விழிக்கும் நேரம், தூங்கும் நேரம் ஒழுங்கில்லாமல் போனது. படிப்படியாகச் செயல்பாடுகள் குறைந்தன.
வயோதிகம் அவரை முடக்கிபோட்டதே தவிர, நோய்களின் காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்படவில்லை. அவரின் மனோதிடமும் எந்தச் சூழலிலும் விடாமல் செய்த உடற்பயிற்சிகளும் யோகாவும் உணவுக்கட்டுப்பாடும்தான் இந்தச் சூழலை எதிர்கொள்ளும் வலிமையைக் கொடுத்திருக்கின்றன!