பள்ளிப் படிப்பை முடித்தவுடன், அடுத்ததாக மாணவர்களின் மனக் கண்ணில் நிற்பது கல்லூரி! மகிழ்ச்சி, உணர்வுத் தூண்டல், பதற்றம் மற்றும் ஆர்வம் ஆகிய அனைத்தும் ஒருசேர மாணவர்களின் மனதில் குடிகொள்ளும்!
ஒரு மனிதனின் வாழ்க்கையில், கல்லூரிப் பருவத்தைவிட சிறந்தது, வேறெதுவும் உண்டா என்றால், நீண்ட நேரம் யோசித்தால்கூட, பதில் சொல்வது கடினம். ஏனெனில், அவனின் ஒட்டுமொத்த எதிர்கால வாழ்விற்குமான அடிப்படை, கல்லூரியில்தான் அமையப்பெறுகிறது. கல்லூரியில், ஒரு மாணவர், தனது அனுபவத்தின் அடிப்படையில் நிறைய கற்றுக்கொள்கிறார்.
உங்களின் முதல் செமஸ்டர் காலம், கல்லூரி சூழ்நிலையை புரிந்துகொண்டு கிரகித்தலிலும், அந்த புதிய வாழ்க்கைக்கு ஏற்ப, உங்களை தகவமைத்துக் கொள்வதிலுமே கடந்து செல்கிறது.
ஒரு கல்லூரி மாணவராக நீங்கள் பரிணமித்தவுடன், உங்களுக்கென்று ஒரு மன முதிர்ச்சி ஏற்படுகிறது. அதற்கு முந்தைய ஆண்டுகளில், உங்களுக்கான தனித்துவம் அந்தளவு வளர்ந்திருக்காது.
இந்தியாவில், பள்ளிப் படிப்பை பொறுத்தவரை, எப்படியாவது மனப்பாடம் செய்து, நன்றாக தேர்வெழுதி, அதிக மதிப்பெண் பெற்று, நல்ல கல்லூரியில் இடம்பிடித்து விடவேண்டும் என்ற லட்சியம்தான் பெரும்பாலான மாணவர்களிடம் இருக்கும். நமது சமூக அமைப்பின் நிலையும் அதுதான். ஆனால், கல்லூரி வாழ்க்கை என்பது அதிலிருந்து மாறுபட்டது.
ஒவ்வொரு மாணவரின் சிந்தனைத் திறன் மற்றும் தன்மையைப் பொறுத்து, கல்லூரி வாழ்க்கையின் முழு பரிமாணம் அமைகிறது. பள்ளிப் படிப்பில் ஒருவிதமான அடக்குமுறையை சந்தித்த மாணவர்கள், கல்லூரி வாழ்வை சுதந்திரமாக உணர்கிறார்கள். ஆனால், அந்த சுதந்திரத்தை அவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான், அவர்களின் எதிர்கால வாழ்க்கை அடங்கியுள்ளது.
கல்லூரிப் படிப்பை பொறுத்தவரை, பாடங்கள் தவிர, இதர திறன்சார் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு மாணவர், தனது பாடங்களில் எந்தளவு கவனம் செலுத்துகிறாரோ, அதேயளவு கவனத்தை, அவர் திறன்சார் நடவடிக்கைகளிலும் செலுத்த வேண்டியுள்ளது. இந்த இரண்டையும், சமஅளவில் பேலன்ஸ் செய்யும் மாணவர், ஒரு வெற்றிகரமான கல்லூரி மாணவராக ஜொலிக்கிறார்.
கல்லூரி வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கான சில முக்கிய ஆலோசனைகள்
வகுப்பிற்கு தயாராதல்
நீங்கள் எப்போதும் வகுப்பில் ஆசிரியர் வழங்கும் லெக்சரை கூர்ந்து கவனிக்க தயாராக இருப்பது முக்கியம். மேலும், வகுப்பின்போது உங்களுக்குத் தேவைப்படும் உபகரணங்களை மறவாமல் எடுத்துச்செல்ல வேண்டும்.
பாடத்தை கூர்ந்து படிப்பதோடு, முந்தைய பாடவேளையில் நீங்கள் படித்த பாடத்தை மீண்டும் ஒருமுறை திருப்புதல் செய்து, அதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் மற்றும் homework செய்தல் வேண்டும்.
கவனமாக இருத்தல்
வகுப்பில் ஒரு லெக்சர் தொடங்குவதற்கு, குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் முன்னதாகவே வந்துவிடுவது சிறந்தது. அப்போதுதான், உங்களின் உடலும், மனதும் தயாராகி, கவனிக்க ஏதுவாகும்.
லெக்சரின்போது, கவனமுடனும், விழிப்பாகவும் இருந்து, முக்கியமான தகவல்களை குறிப்பெடுத்துக்கொண்டு, உங்களின் சந்தேகங்களை எழுப்பி அதற்கான பதிலைப் பெற்று, தேவையான கலந்துரையாடல்களிலும் பங்கேற்க வேண்டும்.
நேர மேலாண்மை
உங்களின் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துவது, வாழ்க்கையில் எப்போதுமே பின்பற்ற வேண்டிய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பழக்கம் என்பதை அறிந்திருப்பீர்கள். அதை, கல்லூரி வாழ்க்கைப் போன்ற மிக முக்கிய காலகட்டங்களில் பயன்படுத்துவது இன்னும் நன்மை பயக்கும்.
நீங்கள் எந்தெந்த நேரத்தில் எதை செய்யப் போகிறீர்கள் என்பதை திட்டமிட்டு, அதற்கான காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரசன்டேஷன் மேற்கொள்வதற்கான தேதி, குழு கலந்தாய்வு மற்றும் வகுப்புத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் ஆகியவற்றை எப்போதும் நினைவில் வைத்து, அதற்கேற்ப தயாராக வேண்டும்.
தொடர்ச்சியான படிப்பு
படிப்பில் வெற்றியடைவதற்கு, தொடர்ச்சியான படிப்பும், பயிற்சியும் மிக மிக முக்கிய காரணிகள். அன்றைய நாள் வகுப்பில் வழங்கப்பட்ட லெக்சர் குறித்து தெளிவைப் பெற, தினமும் குறைந்தபட்சம் 2 முதல் 3 மணிநேரம் வரை செலவழிக்கலாம்.
இதன்மூலம், அடுத்த லெக்சரை சிறந்த முறையில் கவனிப்பதற்கு நீங்கள் எளிதில் தயாராகலாம் என்பதோடு மட்டுமின்றி, தேர்வு நேரத்தில் உங்களின் மனஅழுத்தம் மற்றும் பதற்றமும் குறையும்.
அடிக்கடி நூலகம் செல்லுதல் மற்றும் இணையத்தை நாடுதல்
ஒரு கல்லூரி மாணவருக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்கு, ஒரு சிறந்த இடமாக இருப்பது, கல்லூரி நூலகம். முடிந்தளவிற்கு நூலகத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது, நூலகத்திற்கு செல்ல வேண்டும்.
மேலும், இன்றைய யுகம் மிகவும் நவீன யுகம். உலகை உங்களின் கைக்குள் கொண்டுவரக்கூடிய இணைய வசதி இன்று உள்ளது. எனவே, நூலகத்தின் தேவைகூட பல சமயங்களில் தேவைப்படுவதில்லை. இணையத்தில் கிடைக்காத தகவல் எதுவுமில்லை. எனவே, கையில் கணினி இல்லாத மாணவர்கள்கூட, இணைய மையங்கள் சென்று, தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறலாம்.
பேராசிரியர்களுடன் நல்லுறவு
கல்லூரி வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம், பேராசிரியர்களுடன் நல்லுறவைப் பேணுவதாகும். நல்லுறவைப் பேணாவிட்டாலும்கூட பரவாயில்லை; குறைந்தபட்சம் பகைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
பள்ளியைப் போன்று, கல்லூரியில், ஆசிரியர்களைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஆசிரியர்களின் அடக்குமுறை இங்கே இருக்காது. பாடம் தொடர்பான சந்தேகங்களை நீங்கள், அவர்களிடம் கேட்டு தெளிவடைந்து கொள்ளலாம்.
கலைப் படிப்பை மேற்கொண்டாலும் சரி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்பை மேற்கொண்டாலும் சரி, ஒரு தகுதியான பேராசிரியரின் உதவி உங்களுக்கு பலவிதங்களில் தேவைப்படலாம். போதுமான அளவிற்கு வெளியுலக தொடர்பு மற்றும் சரியான இணையப் பயன்பாடு இல்லாத மாணவர்களுக்கு, ஆசிரியர்களே அருமருந்து.
இன்டர்ன்ஷிப் பெறுதல், மென் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், வேலை வாய்ப்பிற்கான இதர தகுதிகளை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் தனித் திறன்களை வளமாக்கிக் கொள்ளுதல் போன்றவற்றில் ஒரு நல்ல ஆசிரியர், மாணவர்களுக்கு, பலவிதங்களிலும் உதவி செய்வார்.
உங்களின் சொந்த கருத்தாக்கம்
கல்லூரி என்பது உங்களின் சிந்தனைகளை கட்டமைக்கும் மற்றும் எண்ணங்களைப் புரட்டிப்போடும் இடம். இங்கே பலரின் கருத்துக்களை நீங்கள் கேட்கும் வாய்ப்புகள் கிடைக்கும், அதேசமயம், உங்களின் சொந்த கருத்தாக்கம் மற்றும் சிந்தனைகளை கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.
அனைவரிடமிருந்தும் நல்ல மற்றும் நேர்மறை சிந்தனைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதேசமயம், உங்களின் லட்சியம் மற்றும் இலக்கிலிருந்து தடம் மாறும்படி, பிறரை உங்களின் வாழ்வில் விளையாட அனுமதிக்காதீர்கள்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்றல்
கல்லூரிகளின் சார்பில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள், கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து திறன்சார் நடவடிக்கைகளிலும், உங்களின் விருப்பம் மற்றும் திறமைக்கேற்ற வகையில், தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இதன்மூலம், உங்களுக்கு, தேவையான அளவில் வெளியுலக அனுபவ அறிவு கிடைப்பதுடன், உங்களின் ஆர்வம், பல துறைகளிலும் விரிவடைவதுடன், உங்களின் நெட்வொர்க்கிங் திறனும் முன்னேற்றமடையும். புதிய மனிதர்களின் அறிமுகமும், அதன்மூலம் பலனளிக்கும் நட்பு வட்டமும் உருவாகும்.
வாய்ப்புகளைப் பயன்படுத்துதல்
கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்வது என்பது மாணவர் பருவத்தின் ஒரு மகத்தான பணியாகும். கல்லூரிக்கு செல்வதென்பது, வெறுமனே வகுப்பறைக்கு சென்று அமர்ந்து, பாடங்களை கடனே என கவனித்து, எப்படியோ படித்து, எப்படியோ மதிப்பெண் வாங்கி, ஒரு வேலையில் சேர்ந்து, பிழைப்பை நடத்துவது என்பதல்ல.
உங்களின் கல்லூரி பருவம் என்பது உங்களுக்கு, பூமியிலேயே வழங்கப்பட்ட ஒரு சொர்க்கம். இங்கே, நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதோடு மட்டுமின்றி, பல விஷயங்களையும் கற்றுக்கொண்டு, உங்களின் திறன்களை நிரூபிக்கும் ஒரு களமாகும்.
எவ்வளவு முடியுமோ, அந்தளவிற்கு, உங்களை ஒரு வெற்றிகரமான மனிதராக உருவாக்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை என்ற போர்க்களத்தை சந்திக்க, கல்லூரி பருவத்தில் சிறப்பாக முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். அந்தப் பருவம், திரும்பவும், நீங்கள் எவ்வளவு விலை கொடுக்க தயாராக இருந்தாலும், உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது. எனவே, கிடைத்ததை எந்தக் காரணம் கொண்டு வீணடித்து விடாதீர்கள்.
No comments:
Post a Comment