தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், சென்னையில் 38-ஆவது புத்தகக் காட்சி வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மொத்தம் 13 நாள்களுக்கு இந்தப் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவுக்கு தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமை வகிக்கிறார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கண்காட்சியைத் தொடக்கி வைக்க உள்ளார். விழாவில் விருதுகளை வழங்கி காவல்துறை ஐ.ஜி க.வன்னியபெருமாள் வாழ்த்துரை வழங்க உள்ளார்.
விருதுகள்: சிறந்த பதிப்பாளருக்கான க.கணபதி விருது பி.ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸூக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான ச.மெய்யப்பன் விருது, ஜெயம் புக் சென்டர் ஆர்.ராஜ் ஆனந்த்துக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான அழ.வள்ளியப்பா விருது நெல்லை ஆ.கணபதிக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான ஆர்.கே.நாராயண் விருது ஸ்ரீகுமார் வர்மாவுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது இ.கே.தி.சிவக்குமாருக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி சு.செல்லப்பனார் விருது சிலம்பொலி செல்லப்பனுக்கும், பபாசியின் சிறந்த நூலகர் விருது புதுவை மத்திய பல்கலைக்கழக முதன்மை நூலகர் ஆர்.சம்யுக்தா ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளன.
5 லட்சம் புத்தகங்கள்: 700 அரங்குகளில் 5 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளன.
இந்தப் புத்தகக் காட்சிக்காகவே பல்வேறு தலைப்புகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய புத்தகங்களைப் பதிப்பாளர்கள் பதிப்பித்து உள்ளனர்.
கலை, இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு என அனைத்துப் பிரிவு புத்தகங்களும் இந்தக் காட்சியில் இடம்பெறுகின்றன.
அரசு விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், மற்ற நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் 9 மணி வரையும் காட்சி நடைபெறும்.
காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10 ஆகும். 12 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை.
புத்தகக் காட்சியில் ஒவ்வொரு நாள் மாலையும் பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
10 சதவீதம் கழிவு: புத்தகக் காட்சியில் வாங்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீதம் கழிவு உண்டு.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 38-ஆவது புத்தகக் காட்சி வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள நிலையில் புத்தகங்களை அடுக்கும் பணியில் ஈடுபடும் பதிப்பாளர்கள்.
No comments:
Post a Comment