அறிவுக் கண்களைத் திறக்கும் திறவுகோல் தலைசிறந்த நூல்கள்'தாம் என்றார் ஓர் அறிஞர். ஆனால், அந்தத் திறவுகோலைப் பெறுவதற்கான வழி என்ன என்பதைப் பற்றிய தீவிர சிந்தனைக்கான நேரம் இது.
குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை எவை? அவர்களுக்கு வாசிப்பதில் ஈடுபாடு ஏற்பட நாம் செய்ய வேண்டியவை என்னென்ன? என்பது பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பதுதான் மிகப்பெரிய சோகம்.
இன்றைக்கு தெருவிலோ, அடுக்குமாடிக் குடியிருப்பிலோ பிள்ளைகள் விளையாடும் ஓசை கேட்டால், கட்டாயம் மின்சாரம் போய்விட்டது என்பதைச் சொல்லாமலே பலரும் தெரிந்து கொள்வர்.
காரணம், வீட்டில் மின்சாரம் இல்லை என்றால்தான் பிள்ளைகளை வெளியே பார்க்க முடிகிறது. மின்சாரம் இருக்கும்வரை வீட்டுக்குள் கணினியிலோ, தொலைக்காட்சியிலோ, ஐபேடிலோ, செல்லிடைப் பேசியிலோதான் அவர்கள் நேரம் கரைந்துகொண்டு இருக்கிறது.
அந்த நேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் ஏற்படுத்தினால் இந்த நிலைமை ஏற்படாது.
இன்றைய சிறுவர்களிடத்தில், பள்ளிப்பாட நூல்களைப் படிப்பதைத் தவிர, மற்ற நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் பழக்கம் இல்லை; அதைப் பெற்றோர் ஊக்கப்படுத்துவதும் இல்லை; அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை.
அப்படியே நேரம் கிடைத்தாலும் அதை, இன்றைய தொழில்நுட்பம் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுகிறது. இதனால், ஏற்படப்போகும் ஆபத்தையும் பெற்றோர் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை; காரணம், அவர்களும் இன்றைய "கைக்குள் உலகம்' என்னும் தொழில்நுட்பத்துக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர்.
கணினிமயம், தொழில்நுட்பம், "கைக்குள் உலகம்' என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அதன் மூலம் உபயோகமான விஷயங்களை நாம் தேடிப் பயனடைகிறோமா என்று பார்த்தால், மிகவும் குறைவாகவே இருக்கும்.
"சாட்டிங்' போன்ற வெட்டிப் பேச்சிலும், "ப்ரெüசிங்' என்கிற தேவையற்ற பொழுதுபோக்கிலும்தான் கழிக்கிறோமே தவிர, பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள மிகவும் சிலருக்குத்தான் தொழில்நுட்பம் பயன்படுகிறது.
கணினி, செல்லிடைப்பேசி போன்றவை வாழ்க்கையை சுலபமாக்குகின்றன என்பது உண்மை. ஆனால், புத்தகத்தைப்போல செழுமையாக்குகின்றனவா என்பதுதான் கேள்வி.
விழா என்று வந்துவிட்டால் மரியாதை செய்கிறேன் என்ற பெயரில், சால்வைகளைப் போர்த்தி மகிழ்கின்றனர்.
அப்படி மரியாதை செய்ய வேண்டும் என்றால், தலைசிறந்த அறிஞர்களின் நூல்களைப் பரிசளித்தால், வாங்கிப் படிக்க முடியாதவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சில அமைப்புகள் இப்படி புத்தகங்கள் கொடுத்துப் பாராட்டுவதை ஓரிரு இடங்களில் பார்க்க முடிகிறது. அது பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டால்தான் சிறந்த நூல்கள் வெளிவரும் - பலராலும் வாசிக்கப்படும்.
திருமணம், பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளில் புத்தகங்களைப் பரிசளிப்பதை வழக்கமாகக் கொள்வது வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க உதவும்.
பிறந்த நாளுக்குக் குழந்தைகளுக்கு சிறந்த நூல்களைப் பரிசளித்து மகிழும் வழக்கத்தை உருவாக்கிவிட்டால், பெற்றோர் இல்லாதபோது அச்சிறந்த நூல் அப்பிள்ளைகளுக்கு நல்ல வழித்துணையாக - வழிகாட்டியாக அமையும்.
தொழில்நுட்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் இன்றைய பிள்ளைகளுக்கு படிக்கும் பழக்கத்தை அவர்களது மனத்தில் விதைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருடையதுதான்.
"some books should be tasted, some devoured, but only a few should be chewed and digested thoroughly'' - அதாவது "சில புத்தகங்களை ருசிக்கலாம், சில புத்தகங்களை விழுங்கலாம், ஆனால், வெகு சில புத்தகங்களை மட்டும்தான் ரசித்துப் புசித்துச் சுவைத்து முழுமையாக ஜீரணம் செய்யலாம்' என்று நூல்களை வகைப்படுத்துகிறார் ஃபிரான்சிஸ் பேகன் (ஊழ்ஹய்ஸ்ரீண்ள் ஆஹஸ்ரீர்ய்) என்ற ஆங்கிலேய அறிஞர்.
இவ்வாறு மூன்று வகையான நூல்களும், சென்னையில் தொடங்க இருக்கும் புத்தகக் கண்காட்சியில் பார்வைக்கு வரப்போகின்றன.
இவற்றில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்? எதை நம் பிள்ளைகளுக்குப் பரிசளித்து மகிழப் போகிறோம் என்பதுதான் கேள்வி.
ரசித்து, ருசித்து, ஜீரணிக்கப்பட வேண்டிய நூல்களை இன்றைக்கு பல பதிப்பகங்கள் வெளிக்கொண்டு வந்தாலும், விழுங்க வேண்டிய நூல்கள்தான் புத்தகக் கண்காட்சியை பெருமளவில் அலங்கரிக்கின்றன.
அதனால், வாசகர்களே.., பெற்றோரே... ஜீரணிக்கும் நூல்களையே தேடிப்பிடியுங்கள் - அதையே படியுங்கள் - அதையே பரிசளித்து மகிழுங்கள்.
குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதுதான் பெற்றோர் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி.
நல்ல புத்தகங்களை இளைய தலைமுறை வாசிக்கத் தொடங்கினால், நல்ல சமுதாயம் தானாகவே மலரும்!
No comments:
Post a Comment