உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களைப் பற்றி “அவர் ரொம்ப shrewd’’ என்று பேசிக் கொள்கிறார்களா? அப்படியானால் நீங்கள் பாராட்டப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். உங்களுக்கு நிறைய presence of mind இருக்கிறது. புத்திசாலித்தனம், விழிப்புணர்வு இரண்டும் கொண்டவர் நீங்கள்.
ஆனால் நீங்கள் ஒரு பெண்மணியாக இருந்து யாராவது உங்களை shrew என்று கூறினால் (முன்பு குறிப்பிட்ட வார்த்தையின் கடைசி எழுத்து இல்லை என்பதைக் கவனியுங்கள்) “ரொம்ப தாங்க்ஸ்’’ என்று அசட்டுத்தனமாகச் சொல்லி விடாதீர்கள். அது எதிர்மறை அர்த்தத்தை அளிக்கும் வார்த்தை. கொஞ்சம் ராட்சசத்தனமான, எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் பெண்மணியைத்தான் shrew என்பார்கள்.
Shrewd, shrew ஆகிய வார்த்தைகளைக் குறிப்பிடும்போது விநாயகரின் வாகனமும் நினைவுக்கு வருகிறது. ஏன் என்பதைக் கூற முடியுமா? விடையைப் பிறகு உறுதி செய்து கொள்ளலாம்.
வித்தியாசம்
இளைஞர்கள் பலருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் உண்டாகி இருக்கக் கூடிய ஒரு சந்தேகம் இது. Bio-data, C.V, Resume ஆகிய மூன்றும் ஒன்றுதானா? அப்படியில்லை என்றால் அவற்றுக்கிடையே என்ன வித்தியாசம்?
Bio-data என்பது Biographical data என்பதன் சுருக்கம். இதில் தன்னைப் பற்றிய விவரங்களை ஒருவர் பதிவுசெய்து கொள்வார். பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி, நாடு போன்ற விவரங்களும் இவற்றைத் தொடர்ந்து கல்வி மற்றும் பணி தகுதிகள் ஆகியவை வருட வாரியாகவும் இடம் பெறும். ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க, ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க நாம் அளிப்பதெல்லாம் bio-dataதான். என்ன, அச்சிட்ட தாள்களில் தேவைப்படும் விவரங்களைக் கேட்கிறார்கள், நிரப்புகிறோம், அவ்வளவுதான்.
C.V என்பதன் விரிவு Curriculum Vitae. இவை லத்தீன் வார்த்தைகள். “வாழ்க்கைப் போக்கு’’ (Course of life) என்பது இதன் பொருள்.
Resume என்பது ஒரு பிரெஞ்ச் வார்த்தை. இதன் பொருள் summary என்பதாகும்.
பொதுவாக C.V என்பதும் Resume என்பதும் ஒன்றுதான். ஆனால் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு.
Resume என்பது அதிகபட்சம் இரண்டு பக்கங்கள் கொண்டதாக இருக்கும். இதிலுள்ள குறிப்புகள் ஏதோ மூன்றாவது மனிதரைப்பற்றி விவரிப்பதுபோல் இருக்கும். (Has secured first rank, Has participated in the cultural events என்பதுபோல).
C.V என்பது தேவைக்கேற்ப அதிகப் பக்கங்களைக் கொண்டதாக அமையலாம். நான்கு பக்கங்கள்கூட இருக்கலாம். கல்வி, பணி அனுபவங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் விவரிக்கப்படும்.
எப்போது C.V.? எப்போது Resume?
C.V என்பது உங்களைப் பற்றிய பொதுவான கருத்தை உருவாக்கப் பயன்படுகிறது. Resume என்பது குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் எவ்வளவு தகுதியானவர் என்பதை உணர்த்தும் முயற்சி.
வீட்டிலும் சிங்கம்
விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. மூஞ்சூறுக்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை? Shrew என்பதுதான். (Rat, Mouse ஆகியவை எலியைக் குறிக்கின்றன).
பெருச்சாளிக்கு ஆங்கிலத்தில் என்ன? கார்ட்டூனில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.
கார்ட்டூனுக்கான ஐடியாவை உருவாக்கியபோது நான் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது. அதைக் கொஞ்சம் மாற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேனே.
தன் அலுவலகச் சகாக்களிடம் ஒருவர் “நான் valiant, valorous, intrepid, audacious’’ என்றாராம். அதைக் கேட்ட ஒருவர், “சார் நீங்க ஆபீஸிலே சிங்கம்தான், வீட்ல எப்படி?’’ என்றாராம். அதற்கு அவர் “வீட்டிலும் நான் சிங்கம்தான்’’ என்று கூறிவிட்டு ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு “ஆனால் என் மனைவி துர்க்கை. என்மேலே உட்கார்ந்து அதிகாரம் பண்ணுவாங்க’’ என்றாராம். (அவர் தன்னைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டுக்கொண்ட நான்கு ஆங்கில வார்த்தைகளும் துணிவைக் குறிக்கின்றன என்பதை இந்நேரம் நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள்).
சிவபெருமானின் வாகனம் எது? உங்கள் விடையை ஆங்கிலத்தில் கூற வேண்டும்..
பசுவும் எருமையும்
அதற்கு முன்னால் Cow என்றால் என்ன? Buffalo என்றால் என்ன? Ox என்றால் என்ன? Bull என்றால் என்ன? Bullock என்றால் என்ன? சொல்லுங்கள். (இப்போது சிலருக்குச் சின்னதாக ஒரு குழப்பம் வந்திருக்கலாம் கடைசி மூன்றில் எது சிவனின் வாகனம் என்று).
முதலில் cow என்றால் எது என்பதைத் தெரிந்து கொண்டுவிடுவோம். இதென்ன அசட்டுத்தனம், cow என்றால் பசுமாடுதானே என்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். வளர்ச்சி முழுமையடைந்துவிட்ட பல பெரிய பெண் விலங்குகளை cow என்று குறிப்பிடுவதுண்டு. வளர்ச்சியடைந்த பெண் யானை, பெண் திமிங்கிலம் ஆகியவற்றையும்கூட cow என்பதுண்டு. சந்தேகம் எதற்கு என்பதற்காக cow elephant, cow whale என்றும் சிலர் கூறுவார்கள்.
Buffalo என்றால் எருமை.
எருது என்றால் என்ன? உங்கள் பதில் Ox என்பதா? Bull என்பதா? அல்லது இரண்டு வார்த்தைகளும் சரிதான் என்பதா? (குழப்பம் அடைபவர்கள் கவலைப்பட வேண்டாம். சின்ன வயதில் எருமையை ஆண் என்றும் பசுவைப் பெண் என்றும் அப்பாவித்தனமாக எண்ணியவர்கள் உண்டு. அப்படிக் கூடவா இருப்பார்கள் என்று கேட்காதீர்கள்.
Ox என்றால் மாடு. மாட்டு வண்டியில் பூட்டப்படுவது oxதான். (Ox என்பதன் பன்மை Oxen). ஆஸ்திரேலியாவில் (இந்தியாவிலும் கூடத்தான்) இதை bullock என்பார்கள். Bullock cart என்றால் மாட்டு வண்டி. நிலத்தை உழப் பயன்படும் எருது என்பதும் oxதான்.
பெரும்பாலும் ox எனும் விலங்கின் இனப்பெருக்கச் சக்தியை மருத்துவத்தின் மூலம் நீக்கிவிடுவது வழக்கம். அப்போதுதான் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியுமாம்.
Bull என்பது காளை. Bison என்றும் கூறுவார்கள். ஸ்பெயினில் புகழ்பெற்ற Bull fighting என்ற விளையாட்டு நினைவுக்கு வருகிறதா? ஜல்லிக்கட்டும்தான். ஆகச் சிவனின் வாகனம் bullதான்.
இன்னமும் விளங்காதவர்கள் ‘ஆ’ என அலறலாம். அல்லது ‘கோ’ என்று கண்ணீர் விடலாம். ஆனால் ஆ, கோ என்ற தமிழ் வார்த்தைகள் பசுவை மட்டும் குறிக்கிறதா? அல்லது பால் தரும் விலங்கு எதையும் குறிக்கிறதா என்று கேட்டுவிடாதீர்கள்.
தொடர்புக்கு:
aruncharanya@gmail.com
No comments:
Post a Comment