Friday, January 9, 2015

அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் நாகரிகமாக இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்

மற்ற கட்சித் தலைவர்களை விமர் சிக்கும்போது கட்டுப்பாட்டுடன், கண்ணியமாக, நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், பேச்சும், நடவடிக்கையும் தொண்டர்களுக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்றும் கட்சித் தலைவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் அறிவுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளரும், அதிமுக செயலருமான கே.ஜி. உதயகுமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் அக்கட்சியினர் 14-3-2014 அன்று குழித்துறையில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் சிறிது நேரம் தங்கி இளைப்பாறினர்.

இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று களியக்காவிளை காவல் ஆய்வாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தேன். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு விவரம்:

அரசியல் கட்சித் தலைவர் பிரசாரத்துக்கு வந்த இடத்தில், இயற்கை உபாதை காரணமாக ஆய்வு மாளிகையில் 20 நிமிடங்கள் இருந்திருக்கிறார். இதை விதிமீறல் என்று சொல்ல முடியாது. வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க முடிகிறது. எனவே, விளம்பரம் மற்றும் அங்கீகாரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

தனி நபரின் விருப்பு, வெறுப்புக்கான இடமாக தமிழக அரசியல் மாறியிருக்கிறது. ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரை தரக்குறைவாகப் பேசுதல், வெறுக்கத்தக்க வகையில் எழுதுதல், பொய் வழக்கு போடுதல், அரசியல் கொலைகள் மற்றும் தாக்குதல் ஆகியவை வேதனை அளிக்கிறது.

எதிர்க் கட்சிகளை எதிரிக் கட்சிகளாக கருதுகின்றனர். பதவி இழக்கும் முதல்வர் புதிய முதல்வரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் போகாமல் இருப்பது, சட்டப்பேரவைக்கு போய் ஜனநாயகக் கடமை ஆற்றாமல் இருப்பது எல்லாம் துரதிருஷ்டவசமானது.

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வதில்லை. அரசு விழாக்களில் ஒன்றாக பங்கேற்பதும் கிடையாது.

ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா ஆகிய பெரும் தலைவர்கள் காலத்து அரசியல் மலையேறிவிட்டது. 1970-க்குப் பிறகு எதிரி மனப்பான்மை அரசியல்தான் இருக்கிறது. மேடையில், ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியினரைப் பற்றியோ அவர்களின் தலைவர்களைப் பற்றியோ அவதூறாகப் பேசினால், அதை அக்கட்சித் தலைவரே ரசித்துக் கேட்கிறார். யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த நடை முறைதான் இப்போது இருக்கிறது.

ஆபாசமாக, அறுவறுக்கத்தக்க, வெட்கப்படத்தக்க வகையில் குற்றச்சாட்டுகள் கூறுவதால், அரசியல் நாகரிகம் காற்றில் பறந்துவிட்டது. அந்தக் காலத்து தன்மையான அரசியல் இப்போது இல்லை.

இதனால், ஜனநாயகம், நாடு மற்றும் மக்கள்தான் பாதிக்கப் படுகின்றனர். பெரும்பாலான கட்சிகளில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களின் நண்பர்கள்தான் அக்கட்சியின் உயர் பதவிக்கு வருகின்றனர். கட்சிகளுக்கிடையே இருந்த வெறுப்பு அரசியல், இப்போது ஒரு கட்சிக்குள்ளேயே வந்துவிட்டது.

அதிகாரத்துக்கும், பதவிக்கும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதனால் கட்சிக்குள் கோஷ்டி மோதல் ஏற்படுகிறது. கடந்த மாதம் ஒரு கட்சியில் நடந்த மோதலை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஜனநாயகம் முறையாக இயங்குவதற்கு கட்சியின் உயர்நிலைத் தலைவர்களின் பங்கு மிக முக்கியம். அவர்கள் வழிகாட்டுதலே நாகரிகமான அரசியலுக்கு வழி வகுக்கும். நாடாளுமன்ற ஜனநாயகம் அரசியல் கட்சிகளை (எம்பிக்கள், எம்எல்ஏக்கள்) சார்ந்துள்ளது.

எனவே, அவர்களது நடவடிக்கைகள், பேச்சுகள் எல்லாம் ஜனநாயகத்துக்கு முத்திரை பதிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்ற கட்சியையோ, அதன் தலைவர் களையோ விமர்சிக்கும் போது கட்டுப் பாட்டுடன், கண்ணியமாக, நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும். அவர்களது நடவடிக் கைகள் மற்றும் பேச்சுகள் தொண் டர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற வழக்கை தவிர்க்க முடியாது.

முன்னாள் முதல்வரை விமர்சித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் கட்டுரை வெளியானபோது, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் இலங்கை அரசை கண்டித்தனர்.

இதையடுத்து, அந்தக் கட்டு ரையை நீக்கியதுடன், இந்திய பிரதமர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வரிடம் இலங்கை அரசு மன்னிப்பும் கேட்டது. இந்தப் போக்கு தொடர வேண்டும்.

அவ்வாறு தொடர்ந்தால், எந்தச் சூழ்நிலையிலும் இதுபோன்ற வழக்கு தொடரப்படமாட்டாது. இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Keywords: அரசியல்வாதிகள், விமர்சனங்கள், நாகரிகம், மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்றம் அறிவுரை

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024