Thursday, January 8, 2015

சம்பாதிப்பதை தண்ணீராய் கரைக்கும் மால்கள்

Dinamani

முன்பெல்லாம் நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஓரிடத்தில் கூட்ட வேண்டும் என்றால் அது ஒரு போட்டியாகவோ, இளைஞர் மாநாடாகவோ இருக்க வேண்டும்.

ஆனால் இன்றைய காலத்தில் ஏராளமான இளைஞர்களை ஒரே இடத்தில் பார்க்க ஷாப்பிங் மால் தியேட்டர் போன்ற இடங்களில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

அதிலும் குறிப்பாக வணிக வளாகங்களுக்குச் சென்றால் அங்கு ஏராளமான இளம் தலைமுறையினரைப் பார்க்க முடியும். அந்த அளவுக்கு இன்றைய இளம் தலைமுறையினரை ஈர்க்கும் காந்தமாக இந்த மால்கள் அமைந்துள்ளன.

அதற்குக் காரணம் இளைஞர்கள் விரும்பும் அனைத்து பொருள்களும், விஷயங்களும் வணிக வளாகங்களில் நிறைந்திருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். ஷாப்பிங் மால்களுக்கு வருபவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் 18 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள்தான்.

இளைஞர்களைக் கவரும் அனைத்து அம்சங்களும் இந்த மால்களில் நிறைந்துள்ளன. குண்டூசி முதல் கம்ப்யூட்டர் உதிரிப் பாகங்கள் வரை அனைத்தும் இங்கும் கிடைக்கின்றன. முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் இங்கு கடை விரித்திருப்பதால், ஒரே இடத்தில் அனைத்துப் பொருள்களும் வாங்க முடியும்.

ஒரே இடத்தில் பொழுதுபோக்கு அம்சம், ஷாப்பிங்,விதவிதமான உணவு விடுதிகள் என நிறைந்திருக்கின்றன. ஷாப்பிங் முடித்ததும் கூல்டிரிங்ஸ், பசியைப் போக்க ரெஸ்டாரெண்ட். ஃபுட்கோர்ட் பகுதியில் சைவ, அசைவ உணவுப் பிரியர்களுக்குத் தீனி போடும் பல பிரபல ஹோட்டல் ரெஸ்டாரண்டுகள். அங்கு சாப்பிட்டு விட்டு திரும்பினால், அடுத்த தளத்திலேயே திரையரங்கும் திறந்திருக்கிறது.

இவை போக விளையாட்டுப் பிரியர்களுக்காக ஸ்னோபெளலிங், கம்ப்யூட்டர் கேம் உள்ளிட்ட விளையாட்டுகளும் உள்ளன. இவையே இந்த நவீன வணிக வளாகங்களின் சிறப்பம்சங்கள்.

இது தவிர இளைஞர்கள் விரும்பும் நவீன ஆடைகள், வாசனைத் திரவியங்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள், காலணிகள், சினிமா, பாடல் சி.டி.க்கள், பரிசுப் பொருள்கள், புத்தகங்கள் என அனைத்துப் பொருள்களும் இங்கு கொட்டிக் கிடக்கின்றன.

மால்களின் பிரமாண்டம், கவர்ச்சிகரமான தோற்றம், சுத்தமான பராமரிப்பு போன்றவையும், ஷாப்பிங், திரைப்படம், விளையாட்டு, மேற்கத்திய உணவு வகைகள் என தங்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதும் இளைஞர்கள் இங்கு படையெடுக்க வைக்கிறது. சனி, ஞாயிறு போன்ற நாள்களில் இங்கு இளமைத் திருவிழா நடைபெறும் இடமாக வணிக வளாகங்கள் காட்சியளிக்கின்றன.

இது தவிர ஜோடியாக வருபவர்களுக்கு இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சளிக்கும் வரை எத்தனை முறை, எவ்வளவு நேரம் சுற்றி வந்தாலும் ஏன் என்று யாரும் கேட்பதும் இல்லை.

கடற்கரை, பூங்காக்களை விட பாதுகாப்பான இடமாக இளம் காதலர்கள், வணிக வளாகங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதும் உண்மைதான்.

முன்பெல்லாம் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே இருந்த இந்த மால்கள் இப்போது சிறு நகரங்களில் கூட வந்து விட்டன. சென்னையில் புதிதாக மால்கள் தொடங்கப்படுவதே இளைஞர்கள் மத்தியில் மால்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பை பறைசாற்றுகிறது.

அன்றைய இளைஞர்கள் கை நிறைய சம்பளம் வாங்குபவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கம்ப்யூட்டர், மார்கெட்டிங் என அனைத்துத் துறைகளில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் கை நிறைந்து, அவர்களின் பை நிறையவும் சம்பளம் கிடைக்கிறது.

இதனால் அவர்கள் செலவு செய்யவும், விரும்பிய பொருள்களை வாங்கவும் தயங்குவதே இல்லை. எந்தப் பொருளும் சிறிது பழையதானாலோ, பழுது ஏற்பட்டாலோ அதை சரி செய்து மீண்டும் பயன்படுத்த இன்றைய தலைமுறை விரும்புவது இல்லை. இதுவே காலணிகள் முதல் கம்ப்யூட்டர்கள் வரை அதிகம் விற்பனையாக முக்கியக் காரணம்.

தற்காலத்தில் பரவலாகிவிட்ட "வாங்கிக் குவிக்கும்' நுகர்வு கலாசாரம் இந்த மால்களுக்கு நல்ல வரவேற்பைத் தந்துள்ளன. இங்கு பொருள்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், தரம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இளைஞர்களிடம் உள்ளது.

எந்த நாட்டிலும் இளைஞர்களைக் கவரும் எந்த விஷயத்துக்கும் வரவேற்பு அதிகமாகிக் கொண்டு போகுமே தவிர குறையாது.

ஆனால் அதே சமயம், கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை இப்படி மால்களில் கொண்டு கரைக்கும் இளைய சமுதாயம், சேமிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது நல்லது.

கை நிறைய சம்பளம் கொடுத்து ராஜாவாக வைத்துக் கொள்ளும் ஐடி நிறுவனங்கள் ஒரு நாள் ஊழியர்களை குறைக்கும் நோக்குடன் செயல்படும் போது நமது நிலை என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம். எனவே, சிறு துளியே பெருவெள்ளம் என்று சொன்னார்கள். இப்போது இளைய சமுதாயம் பெரு வெள்ளமாகத்தான் சம்பாதிக்கிறார்கள். அப்போது அதில் சேமிப்பை மறக்காமல் செய்வது நல்லது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024