Thursday, January 8, 2015

4 ஆண்டுகள் ஆசிரியர் படிப்பு


logo
‘‘ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி’’ என்பது தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியின் மேன்மை குறித்து சொல்லப்படும் ஒரு வழக்கு மொழியாகும். ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்றும், ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்றும் தமிழர்கள் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்களை இறைவனுக்கு ஒப்பிட்டு மதிக்கும் சமுதாயம் இது. சுவாமி விவேகானந்தர்கூட, ‘‘எனது தாயும், தந்தையும் இந்த உடலை எனக்கு தந்தனர். ஆனால், எனது ஆசிரியர்கள்தான் என் ஆன்மாவுக்கு மறுபிறவி கொடுத்தனர்’’ என்று கூறியுள்ளார். ஒரு குழந்தை பிறந்து 3 அல்லது 4 வயது வரைதான், முழு நேரமும் தாயின் மடியில், தந்தையின் பராமரிப்பில் இருக்கிறது. அதற்கு பிறகு, மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு சென்று, கல்லூரி படிப்பை முடித்து, பணியாற்ற செல்லும் வரை, ஒவ்வொரு வகுப்பிலும் அதிக நேரம் ஆசிரியர்களின் நிழலில்தான் இருக்கிறார்கள். ஆக, கல்வி போதிப்பது மட்டுமின்றி, நன்னெறிகளை போதிப்பதிலும் ஆசிரியர்களின் தாக்கம்தான், அந்த மாணவர்களிடம் இருக்கும்.

பெரும்பான்மையான மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் ‘ரோல் மாடல்’கள். அந்த வகையில், ஆசிரியர்களின் பிரதிபலிப்பாகத்தான் மாணவர்கள் திகழ்கிறார்கள். அத்தகைய ஆசிரியர்களை உருவாக்கும், ஆசிரியர் கல்வி தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில், ஆசிரியர் கல்விக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மையத்திற்கு அடிக்கல் நாட்டி, பண்டித மதன் மோகன் மாளவியா தேசிய ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் திட்டத்தை தொடங்கிவைக்கும்போது, தரமுள்ள ஆசிரியர்கள், அறிவாற்றல்மிக்க ஆசிரியர்கள் உருவாக வேண்டிய அவசர அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நமது புதிய கல்வித்திட்டம் உலகம் முழுவதற்குமான நல்ல ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் அமைய வேண்டும். ஆசிரியர்கள் கல்விக்கான 5 ஆண்டு படிப்பை அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது, தற்போது பிளஸ்–2 முடித்தவுடன் எப்படி மருத்துவக்கல்வி, சட்டப்படிப்பு போன்ற படிப்புகளை ஏறத்தாழ 5 ஆண்டுகள் படிக்கிறார்களோ, அதுபோல, பிளஸ்–2 முடித்தவுடன், 5 ஆண்டுகள் ஆசிரியர் படிப்பை படிப்பதற்கான கல்வித்திட்டம் வேண்டும் என்று கூறியிருந்தார். இதை உடனடியாக நிறைவேற்றும் வகையில், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பும், ஆசிரியர் பட்டப்படிப்பும் படிக்கும் வகையிலான 4 ஆண்டுகள் படிப்பும், ஒருங்கிணைந்த எம்.ஏ., எம்.எட். படிப்புக்கான 2 ஆண்டு படிப்பும் வருகிற கல்வி ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

இதுமட்டுமல்லாமல், இந்த நாட்டின் கலாசாரத்திலும், பாரம்பரியத்திலும் வேரூன்றியுள்ள ஆசிரியர்களை உருவாக்கும் நல்ல சூழ்நிலை வேண்டும். இதன்மூலம், உலகம் முழுவதும் தற்போது ஆசிரியர் பணிக்கு இருக்கும் அதிதேவையை பூர்த்தி செய்ய லட்சக்கணக்கான ஆசிரியர்களை பயிற்றுவித்து, இந்தியாவில் இருந்து அனுப்பும் வகையில் கல்வித்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். நமது நாட்டில் உள்ள பெரிய பெரிய தலைவர்கள் வாழ்க்கை எல்லாம் நமக்கு சொல்வது, அவர்கள் வளர்ச்சியில் முக்கியப்பங்கு, அவர்களின் தாய்மார்களும், ஆசிரியர்களும்தான். அதே வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற வகையில்தான், ஆசிரியர் தகுதியை வலுவாக்குவதாக மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார். எப்படி ஒரு மாணவனிடம், எதிர்காலத்தில் நீ படித்து முடித்தவுடன் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறாய்? என்று ஆசிரியர்கள் கேட்கும் நேரத்தில், டாக்டராக விரும்புகிறேன், என்ஜினீயராக விரும்புகிறேன், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாக விரும்புகிறேன், விஞ்ஞானியாக விரும்புகிறேன் என்பது போன்ற பதில்களை மாணவர்கள் கூறவிரும்புகிறார்களோ, அதற்கும் மேலாக ஆசிரியராக விரும்புகிறேன் என்று பெரும்பான்மையான மாணவர்கள் சொல்லும் அளவுக்கு ஆசிரியர் பணிக்கு சமுதாயத்தில் ஒரு கவுரவமும், அந்தஸ்தும், ஊதியமும் கிடைக்க வேண்டும். ஆனால், அதற்கேற்ற வகையில், ஆசிரியர்களும், மாறிவரும் முன்னேற்றத்திற்கேற்ப மாணவர்களை உருவாக்கும் வகையிலான தகுதிபடைத்தவர்களாக இருக்க வேண்டும்.

இப்போதுள்ள மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மிகவேகமாக முன்னேறியுள்ளனர். அந்த அளவுக்கு ஆசிரியர்கள் கல்வியும், அவ்வப்போது மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் எதிர்கால வளமிக்க சந்ததியை உருவாக்கும் வகையிலான, புதிய புதிய யுக்திகள் இடம்பெற வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024