Thursday, January 8, 2015

அந்த நாள் ஞாபகம்...


இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோடு ஊடகத் தமிழ் என்பது நான்காம் தமிழாகச் சேர்க்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். மொழியை வளர்ப்பதில் ஊடகங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால், இன்று ஊடகங்களில் தமிழ் படும் பாடு சொல்லி மாளாது.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்று புதுமைக்கு வரவேற்பு கூறுகிறது தமிழ். பழைமையை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு வளரும் எந்தப் புதுமையும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. பழைமை என்னும் வேரினைப் புறக்கணித்துவிட்டு புதுமை என்னும் விருட்சம் தழைத்தோங்குவது என்பது ஒருபோதும் சாத்தியமாகாது. பழைமையில் வேரூன்றிப் புதுமையில் தழைத்தோங்குவதே மறுமலர்ச்சி. வானொலியின் பரிணாம வளர்ச்சியே தொலைக்காட்சி என்ற போதிலும், அன்றைய வானொலி நிகழ்ச்சிகளுக்கும், இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

குழந்தைப் படம் பொறிக்கப்பட்ட மர்பி வானொலிப் பெட்டியும், பிலிப்ஸ் வானொலிப் பெட்டியும் பெரிய அளவில் வீட்டு மேசையை அடைத்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சி இன்றும் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

பெரிய செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே வானொலிப் பெட்டிகள் இருந்த காலமும் உண்டு. அந்தக் காலப் பொருளாதார நிலை அப்படி. பின்னர் சிறிய அளவு வானொலிப் பெட்டிகளும், டிரான்ஸிஸ்டர் என்னும் பேட்டரியில் இயங்கக் கூடிய சிறிய கையடக்க வானொலிப் பெட்டிகளும் வந்தபோது மக்கள் வியப்படைந்த காலமும் உண்டு. அவை விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டபோது, அனைத்து வீடுகளிலும் இடம் பிடித்துக் கொண்டது. சிறிய பெட்டிக் கடைகளிலும், தேநீர்க் கடைகளிலும், வானொலிச் செய்திகள் கேட்பதற்கும், கிரிக்கெட் நேர்முக வர்ணனைகள் கேட்பதற்கும் பெருங்கூட்டமே கூடி நின்ற காட்சிகளும் உண்டு.

புலரும் அதிகாலைப் பொழுதில் 5.45 மணிக்கு செவிக்கினிய வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கி, மங்கல இசை, சான்றோர் வாக்கு எனத் தொடரும் காலை நிகழ்ச்சிகள் முதற்கொண்டு இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திரைப்படப் பாடல்கள், கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிகள் என இரவு 11 மணிவரை ஒலிக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தன. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி என்னும் அந்த இனிய குரலும், மாநிலச் செய்திகளை வாசிப்பவர்களின் மணியான வெங்கலக் குரலும், சிறிதும் பிசிறில்லாத தமிழ் உச்சரிப்பும் இன்றும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒலிபரப்பாகும் ஒலிச்சித்திரம், நேயர் விருப்பம், இலக்கிய நிகழ்ச்சிகள், வரலாற்று நாடகங்கள், நாள்தோறும் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகும் "வயலும் வாழ்வும்' என்று அனைத்து நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் இனிய குரலில் இழையோடும் இனிய தமிழும் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று தொலைக்காட்சிகளில் அதுபோன்ற பிழையற்ற தமிழ் உச்சரிப்பைக் காண முடியவில்லை. பண்பலை வரிசையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் பல தனியார் வானொலி நிலையங்களும், தமிழைக் கொல்வதில் தொலைக்காட்சிகளோடு போட்டி போடுகின்றன என்பது கசப்பான உண்மை.

முந்தைய காலங்களில் இலங்கை வானொலி வழங்கிய நிகழ்ச்சி ஒவ்வொன்றும் முத்தான நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் குரலில் ஒலிக்கும் ஈழத் தமிழின் இனிமையைக் கேட்க இரண்டு செவிகள் போதாது. நிகழ்ச்சியின் இறுதியில் தங்களின் பெயர்களைச் சொல்லி தொகுப்பாளர்கள் விடை பெறும் விதமும், நிகழ்ச்சியின் இடையிடையே அவர்கள் அப்போது என்ன நேரம் என்பதைச் சொல்லும் விதமும் மிகவும் அருமை. எனவேதான், இலங்கை வானொலியை அதிக அளவு மக்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழே அறியாத ஒருதலைமுறையை உருவாக்குவதிலும் தமிழைத் தொலைப்பதிலும்தான் முதலிடம் வகிக்கின்றன. ஊடகத் தமிழை ஒழுங்குபடுத்த தமிழ் அமைப்புகள் முனைப்போடு செயல்பட வேண்டியது இன்றைய அவசியமும் அவசரமுமாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024