காந்திநகர்,
‘வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இங்கு காத்திருக்கிறது, எனவே அவர்கள் நாடு திரும்ப வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காந்தி இந்தியா திரும்பிய தினம்
குஜராத் மாநிலம் காந்திநகரில், மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நூற்றாண்டு தினவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
ஒரு காலத்தில் வாழ்வாதாரம் மேம்பட விருப்பத்திற்கு மாறாகவும், துணிவுடனும், புதிய ஆய்வுகளை நடத்தவும் வெளிநாடு செல்லும்படி நம் முன்னோர் கூறினார்கள். ஆனால் இப்போது இந்தியா மிக வலிமையுடன் வளர்ந்து இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக மிகப்பெரிய வாய்ப்புகள் இங்கு காத்திருக்கிறது.
உலக அளவில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் நமது மிகப்பெரிய சொத்து என்பது எனது கருத்து. அவர்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். உலகளவில் நமது பங்கு இருப்பது மிகவும் வலிமையானது. இப்போது உலகம் இந்தியா மீது அன்புடன் கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியா மீது கவனம்
நான் எனது புதிய பொறுப்புகளை ஏற்ற பிறகு 50 நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களுடன் நாம் வெளிப்படையாக பேசினோம். மிகவும் ஏழ்மையான நாடு முதல் மிகவும் பணக்கார நாடு வரை இந்தியா மீது கவனம் செலுத்துகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிது.
ஐக்கிய நாடுகள் எனது கோரிக்கையான ‘உலக யோகா தினம்’ அறிவிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டதில் இருந்து உலகம் இந்தியா மீது வைத்துள்ள அன்பை எடுத்துக்காட்டுகிறது. ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 177 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் 40–க்கும் மேற்பட்டவை இஸ்லாமிய நாடுகள். இந்த தீர்மானம் வெறும் 100 நாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற தீர்மானங்கள் வழக்கமாக நிறைவேற 2 ஆண்டுகளாவது ஆகும்.
நமது பொறுப்பு
உலக நாடுகள் இந்தியா மீது அன்பு செலுத்துவதற்கு அந்நாடுகளில் உள்ள இந்தியர்களின் செழிப்பு காரணம் அல்ல. ஆனால் அவர்களது பணித்திறன் மற்றும் கலாசாரம், பாரம்பரியம் தான் காரணம். உலக சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக இந்தியா நிரூபிக்க வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளது.
எப்படி காந்தி தெருக்களை சுத்தம் செய்தபோதும், கதர் துணிகளை பிரபலப்படுத்துவது போன்ற மற்ற பல சேவைகளின் மூலம் விடுதலை இயக்கத்துக்கு தலைமை தாங்கி நடத்திச் சென்றாரோ அதுபோல, இப்போது இதனை நம்பிக்கையுடன் நிரூபிக்க வேண்டியது நமது பொறுப்பு.
ஏராளமான வாய்ப்புகள்
உங்கள் அன்பான இந்தியாவை விட்டு பல்வேறு உலக நாடுகளுக்கு சென்று அங்கு சில காலத்தை கழித்திருக்கிறீர்கள். இப்போது ஏராளமான வாய்ப்புகள் உங்களுக்காக இங்கு காத்திருக்கிறது என நான் உறுதியளிக்கிறேன். காலம் வேகமாக மாறிவருகிறது. இந்தியா புதிய வலிமையுடன் வளர்ந்து இருக்கிறது.
கங்கையை தூய்மைப்படுத்துவதும் உங்களுக்கு மிகவும் விருப்பமான திட்டம் என்பது எனக்கு தெரியும். இது மிகப்பெரிய மதரீதியான, சுற்றுச்சூழல் மதிப்புமிக்க திட்டம் மட்டுமின்றி, இந்தியாவின் 40 சதவீத மக்களின் பொருளாதார மேம்பாடு சம்பந்தப்பட்டது. நீங்களும் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இல்லையென்றாலும், எங்கள் சொந்த மக்கள் எங்களுக்கு வலிமையை தருவார்கள், எங்கள் வலியில் பங்கெடுப்பார்கள், மகிழ்ச்சியே எங்களுக்கு சக்தியை தரும்.
இந்தியா திரும்பவேண்டும்
‘இந்திய வம்சாவளி நபர்கள்’ மற்றும் ‘வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள்’ என்ற இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைத்து ஒரு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது இருதரப்பினருக்கும் வாழ்நாள் விசா, போலீஸ் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு போன்ற பல பலன்களை தரக்கூடியது. எனவே நீங்கள் இந்தியா திரும்ப வேண்டும். அவர்களுக்காக டெல்லியில் ஒரு அலுவலகம் (பிரவசி பாரதீய கேந்திரா) விரைவில் செயல்பட தொடங்கும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
No comments:
Post a Comment