Friday, January 9, 2015

கூடுதலாக விரும்பும் படிப்பை படிக்கும் கல்வி முறை அண்ணாபல்கலைக்கழக 4 கல்லூரிகளில் அறிமுகம்


கூடுதலாக விரும்பும் படிப்பை படிக்கும் கல்வி முறையை அண்ணாபல்கலைக்கழகம் தனது 4 கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்துகிறது.

புதிய கல்வி முறை

கல்லூரி மாணவ-மாணவிகள் ஒரு பாடத்தை எடுத்து படிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பாடத்துடன் மேலும் விரும்பும் பாடத்தை எடுத்து படிக்கலாம். இதை (சாய்ஸ் பேஸ்டு கிரடிட் சிஸ்டம்) கூடுதலாக விரும்பும் படிப்பை படிக்கும் முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த முறை சென்னை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்தியா முழுவதும் இந்த முறை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிதாக அண்ணாபல்கலைக்கழகமும் இந்த முறையை அமல்படுத்த உள்ளது. அதாவது அண்ணாபல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 600 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் முதல் கட்டமாக அண்ணாபல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. தொழில்நுட்ப கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் 2015-2016 ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் விளக்கி கூறியதாவது:-

விளக்கம்

உதாரணமாக ஒரு மாணவர் பி.இ. மெக்கானிக் எடுத்து படித்தால் அவர் மெக்கானிக் சம்பந்தபட்ட பாடங்களை படித்து தான் ஆகவேண்டும். ஆனால் அவர் ஆங்கிலம் கற்கவிரும்பினால் அவர் ஆங்கிலபாடத்தை விருப்ப பாடமாக கூடுதலாக படிக்கலாம். அதுபோல அவர் புவியியல் படிக்க விரும்பினால் புவியியல் எடுத்து படிக்கலாம்.

அல்லது அவர் கம்ப்யூட்டர் பாடம் எடுத்து கூடுதலாக படிக்கலாம். ஆனால் அவர் எடுத்த மெக்கானிக்கல் மெயின் பாடத்தை மாற்ற முடியாது. அவருக்கு பட்டம் மெக்கானிக்கல் பாடத்தில்தான் வழங்கமுடியும். ஆனால் வேறு எந்த பாடத்தை படித்தாலும் அந்தபாடம் அவர் படித்ததாக சான்று அளிக்கப்படும். இதுவே கூடுதலாக படிக்கும் முறையாகும்.

படிப்படியாக அமல்படுத்தப்படும்

இந்த படிப்பு படிப்படியாக அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் அமல்படுத்தப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024