Tuesday, January 13, 2015

மேடையேற எது தகுதி?

Return to frontpage

தருண் தேஜ்பால். 2013-ல் ஆண்டு ஊடகங்களில் மட்டுமல்லாமல் பொது மக்கள் மத்தியிலும் அதிகம் அடிபட்ட பெயர்களில் ஒன்று. தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர், உடன் பணிபுரிந்த பெண் ஊழியர் எழுப்பிய பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னாள் ஆசிரியரானார்.

ஊரில் நடக்கிற ஊழல்களை அம்பலப்படுத்துகிற பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒரு பெண் ஊழியரால் பதிவுசெய்யப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பதவியும் அதிகாரமும் எந்த அளவுக்குப் பாயும் என்பதையும் உணர்த்தியது.

தான் குற்றவாளி அல்ல என்று தருண் தேஜ்பால் தொடர்ந்து வலியுறுத்தினாலும் அவர் மீதான குற்றச்சாட்டில் இருந்து நீதிமன்றம் இன்னும் அவரை விடுவிக்கவில்லை. பிணையில்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சிறப்பு அழைப்பாளர்?

இப்படியொரு நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்குத் தருண் தேஜ்பால் சிறப்பு அழைப்பாளராக வந்து சென்றிருக்கிறார். ஏற்கெனவே ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய விழாவில் தருண் சிறப்பு விருந்தினராகப் பங்குபெற இருந்தார். ஆனால், அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பவே அந்த விழாவில் தருண் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் தருண் தேஜ்பால் கலந்துகொண்டதற்குக் குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட யாரும் பதிவுசெய்யவில்லை என்பது எதன் வெளிப்பாடு?

பொதுவாக இதுபோன்ற பாலியல் குற்றங்களில் தவறு செய்ததாகக் குறிப்பிடப்படுகிற ஆணைவிட, அந்த ஆண் மேல் குற்றம் சுமத்திய பெண்ணே குற்றவாளியாகப் பார்க்கப்படுகிறாள். இது போன்ற வழக்குகளில் ஆரம்ப நாட்களில் ஆண் மீது காட்டப்படுகிற கோபமும் ஆவேசமும் அதற்கடுத்து வரும் நாட்களில் மறைந்து விடுகின்றன.

பாலியல் வழக்கில் தொடர்புடைய ஒரு ஆண், அது குறித்த எந்த அவமானமும் குற்ற உணர்வும் இல்லாமல் நிமிர்ந்த நெஞ்சுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிகிறது. அதே வழக்கில் தொடர்புடைய பெண், ‘இவள் களங்கமானவள், ஒரு ஆணின் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தப்பட்டவள்’ என்ற அடையாளத்தில் இருந்து இதேபோல் புன்னகையுடன் கடந்து வந்துவிட முடிகிறதா? அதற்கான சாத்தியங்களை இந்தச் சமூகம் ஏற்படுத்தியிருக்கிறதா?

இங்கே தருண் தேஜ்பால் குற்றவாளியா, இல்லையா என்பதல்ல விவாதம். அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். இருந்தாலும் பாலியல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு ஆண் எந்தவிதத் தயக்கமும் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஒரு பொது நிகழ்வில் கலந்துகொள்ள முடிகிறதென்றால், இங்கே நிலவும் சூழலை என்னவென்று சொல்வது?

எந்த வித எதிர்ப்பும் புறக்கணிப்பும் இல்லாமல் அந்த ஆண் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ள முடிகிறது என்றால், வழக்கில் தொடர்புடைய அந்தப் பெண் முன்வைத்த குற்றச்சாட்டும் அதனால் அவள் அடைந்த அவமானமும் வேதனையும் இழப்பும் ஒன்றுமில்லை என்பதுபோல் ஆகாதா?

பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்கள் மீது கோபத்தைக் காட்டிக் கொதித் தெழும் மக்களின் அறச்சீற்றம், அப்படியொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், புத்தக வெளியீடு போன்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்குபெறும்போது எங்கே போனது?

நாடு முழுக்கப் பரப்பரப்பாகப் பேசப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் தொடர்புடைய ஒரு ஆண், இங்கே இத்தகைய மேடை, மரியாதை பெற அனுமதிப்பது, அந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணுக்குச் செய்கிற அநீதியாகாதா? சட்டமும் நீதியும் என்னவோ செய்யட்டும், எங்கள் பார்வையில் அவர் குற்றவாளியல்ல என்று அந்த ஆணுக்குத் தரும் மறைமுக ஆதரவாகாதா? இத்தகைய குற்றத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பற்றிய செய்தியாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

மறுபக்கம்

இந்தக் கேள்விகளுக்கு மாற்றுத் தரப்பும் உள்ளது. குற்றம் எத்தகையதாக இருந்தாலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிர்காலம் என்ற ஒன்று இருக்கவே கூடாதா? அவர் தனக்கு விருப்பமுடைய விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளக் கூடாதா? இப்படி ஒருவரை முற்றிலுமாக நிராகரிப்பது, மானுடப் பொது தர்மத்துக்கு ஏற்றதா?

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் தண்டனைகளுக்கும் ஆளாகும் அரசியல்வாதிகளுக்கு, நாம் இதே அளவுகோலைப் பயன்படுத்திவிட முடியுமா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024